சாதி முக்கியமா... சந்ததி முக்கியமா?
ரீ.சிவக்குமார், படம்: ஜெ.வேங்கடராஜ்
அகமணம் என்பதே ஆகாத மணம்தான். சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராக அரசியல்ரீதியான எதிர்ப்புகள் இப்போது பரவலாகப் பெருகி வருகின்றன. ஆனால், அரை நூற்றாண்டுக்கு முன்னரே விதவைகள் நிலைமை, உடன்கட்டை ஏறுதல் போன்ற பெண்களின் மீது திணிக்கப்பட்ட கொடிய வழக்கங்களுக்கு, சாதித் தூய்மையைக் காப்பாற்றும் அகமண முறை எப்படிக் காரணமாக இருந்தது என்பதை, அம்பேத்கர் விரிவாக விளக்கியிருக்கிறார்.
அரசியல்ரீதியாக மட்டும் அல்லாமல், அறிவியல் மற்றும் மருத்துவரீதியாகவும் சொந்தங்களுக்குள், சொந்த சாதிக்குள் நடைபெறும் திருமணம் எப்படி ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பதிவுசெய்ய விரும்பினேன். அதன் விளைவுதான் இந்தக் குறும்படம்!'' - நிதானமாக, மிகத் தீர்க்கமாகப் பேசுகிறார் பூங்குழலி.
'கருந்திணை’ என்ற மாற்றுவாழ்வியலுக்கான பெரியார் அமைப்பின் சார்பில், மருத்துவரீதியாகவும் மரபியல்ரீதியாகவும் நெருங்கிய சொந்தங்களுக்குள் நடைபெறும் திருமணம் ஏற்படுத்தும் பாதிப்புகளை 'தீ வரைவு’ என்ற குறும்படத்தில் விரிவாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் பூங்குழலி.
'தீ வரைவு’ என்றால், தீய திருமணம் என்று பொருள். இந்தக் குறும்படத்தை, கல்லூரிகளில் திரையிடவிருக்கிறார். பெண்ணியம், பெரியாரியம் இரண்டிலும் ஈடுபாடுகொண்ட பூங்குழலி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் மகள்.
சமீபத்திய மரபணு ஆய்வு முடிவுகள், இந்திய மக்களிடம் 72 இனங்களின் சாயல்கள் இருப்பதாகத் தெரிவித்திருப்பதைச் சொல்லும் இந்தக் குறும்படம், 'எனவே, கலப்பே இல்லாத தூய இனம் என்பது சாத்தியம் இல்லை’ என்கிறது.
மருத்துவ நிபுணர்களும் நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்வதன் ஆபத்தை இந்தப் படத்தில் எடுத்துச் சொல்கிறார்கள். ''நமது ஒவ்வொரு திசுக்களிலும் 46 வகையான மரபணுச் சரங்கள் உள்ளன. இவைதான் நமது பண்புகளையும் நோய்க்கூறுகளையும் காலங்காலமாக நம் மரபணுக்களில் கடத்துகின்றன. எனவே, நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்யும்போது, பரம்பரை நோய்கள் மரபணுரீதியாகத் தொடர்வதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன'' என்கிறார் மரபணு ஆராய்ச்சியாளர் அரவிந்த் ராமநாதன்.
கும்பகோணத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் மஞ்சுளா, தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மூலம் இதை எளிதாக அறிய முடியும் என்கிறார். அதற்கு ரத்தமும் உயிருமான சாட்சியங்களாகச் சொந்தங்களுக்குள் திருமணம் செய்து பாதிப்புக்கு உள்ளானவரின் பேட்டி களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவை மனதை அதிரவைக்கின்றன.
கும்பகோணத்தைச் சேர்ந்த சுஜிதா என்கிற பெண்ணுக்கு, மூன்று பிரசவங்களிலும் வயிற்றுக்குள் குழந்தை இறந்தே பிறந்ததை அவரது தாயார் கண்ணீர் மல்கக் கூறுகிறார். இத்தகைய திருமணங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை வயிற்றுக்குள் இருக்கும்போதே ஸ்கேன் மூலம் தெரிந்துகொள்பவர்கள், கலங்கிய கண்களுடன் கருச்சிதைவு செய்துகொள்வதையும் அறிய முடிகிறது.
''மனிதர்களிடையே, இதுவரை 18- விதமான ஊனங்கள் அடையாளம் கண்டு வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை தாண்டியும் நூற்றுக் கணக்கான ஊனங்கள் உள்ளன. பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள், நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்துகொண்டதால் உருவானவர்களே'' என்கிறார் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தீபக்.
''இப்படிக் குறைபாடுள்ள குழந்தைகள் பிறந்தவுடன் பெரும்பாலும் பெண்கள் மீதுதான் பழி போடப்படுகிறது. இந்த நோய்க்கூறுகள் கணவன், மனைவி என யாருடைய பரம்பரையில் இருந்தும் வந்திருக்கலாம். ஆனால், இதற்கு மனைவிதான் காரணம் என்று ஆண்கள் அந்தப் பெண்ணையும், மாற்றுத்திறனாளிக் குழந்தையையும் கைவிடுவது சாதாரணமாக நடக்கிறது'' என்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் டாக்டர் ஜெயந்தினி.
''சரி, நோய் மட்டும் பரம்பரை, பரம்பரையா வரும்னு சொல்றீங்களே. எங்க சாதி வீரமும் அப்படிப் பரம்பரை பரம்பரையா வராதா?'' என்று ஒரு கிராமத்து இளைஞர் கேள்வி எழுப்புகிறார்.
''இல்லை. வீரம் மாதிரியான குணங்கள் பிறப்பில் இருந்தே ஒருவருக்கு வருவது இல்லை. அவருடைய வளரும் சூழல்தான் அதை உருவாக்குகிறது. ஆனால் நோய்க்கூறுகள், மரபணு வழியாகப் பரம்பரை, பரம்பரையாகத் தொடரும் சாத்தியம் உள்ளது'' என்கிறார் மானுடவியல் ஆய்வாளர் சத்தியபால்.
மரபணு ஆராய்ச்சியாளர் அரவிந்த் ராமநாதனோ, ''வெவ்வேறு கலாசாரப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் புதிய கலாசார அனுபவமுள்ள, அறிவுத்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இனக்கலப்பு இல்லை என்றால், பரிணாம வளர்ச்சி என்பதே இல்லை. எனவே, சாதியைக் கடப்பது மட்டுமல்லாமல், மதம் கடந்து, இனம் கடந்து திருமணங்கள் செய்யப்பட வேண்டும்'' என்கிறார்.
''சொந்தங்களுக்குள் திருமணம் என்பது, வேறு ஒன்றும் இல்லை, சொந்தச் சாதிக்குள் நடைபெறும் திருமணம்தான். மீண்டும் மீண்டும் இப்படி நடைபெறுகிற நமது திருமணங்கள் நம்மைக் குறுகியக் கலாசாரத்துக்குள் அடைத்து அறிவுத்திறனை மழுங்கடிக்கிறது என்பதை நாம் உணரவேண்டிய தருணம் இது'' என்கிறார் பூங்குழலி.
மீண்டும் மீண்டும் அகமண முறையை ஆதரித்து இந்தக் குறும்படத்தில் பேசுபவர்கள் ஒரே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார்கள். 'சொத்தையும் சொந்தங்களையும் தக்கவைத்துக்கொள்ளத்தான் சொந்தங்களுக்குள் திருமணம் செய்துகொள்கிறோம்’.
'சொத்தையும் சாதியையும் காப்பாற்றுவது சரி, அடுத்த தலைமுறையைக் காப்பாற்றுவதில் உங்களுக்கு அக்கறை இல்லையா?’ என்ற கேள்வியைத்தான் அழுத்தமாகக் கேட்கிறது 'தீ வரைவு’.
No comments:
Post a Comment