Thursday, May 22, 2014

பகீர் பானங்கள்!
- S. ராமகிருஷ்ணன் 
 
கொளுத்தும் வெயிலை தாங்க முடியாமல் ஏதாவது குடிக்கலாம் என்று தேடினால் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மட்டுமே கிடைக்கின்றன. உணவுச் சந்தையில் கேள்வியே இல்லாமல் கொள்ளையடிக்கப்படுகிற பொருள் குளிர்பானங்கள்தான். முன்பு வீட்டுக்கு யாராவது முக்கிய விருந்தினர் வந்துவிட்டால் சோடா, கலர் வாங்கிவந்து தருவார்கள். விருந்தினர் குடித்தது போக மிச்சம் வைத்த கலரைக் குடிக்க போட்டா போட்டி நடக்கும்.
 
திருமண வீடுகள், திருவிழாக்களில் கலர் குடிப்பது என்பது சந்தோஷத்தின் அடையாளம். சாக்ரீம் பவுடரைத் தண்ணீரில் கரைத்து ஒரு பாட்டில் கலர் ஐந்து பைசா என பள்ளியில் விற்பார்கள். வாங்கிக் குடித்திருக்கிறேன்.
 
இன்று வீட்டுக் குளிர்சாதனப்பெட்டியில் வெயில் காலமோ, மழைக்காலமோ எப்போதும் இரண்டு லிட்டர் கலர் பாட்டில் இருக்கிறது. உப்புமா சாப்பிடுவதாக இருந்தால்கூட ஒரு டம்ளர் கலர் ஊற்றி குடிக்கிறார்கள். 'நான் சோடா கலர் குடிப்பது இல்லை. பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளைத்தான் குடிக்கிறேன்’ என்று ஒரு பிரிவினர் பெருமையடித்துக்கொள்கிறார்கள். 'கழுதை விட்டையில் முன்விட்டை என்ன... பின்விட்டை என்ன?’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோல உடலைக் கெடுப்பதில் கார்பனேட்டட் குளிர்பானங்களும் பாக்கெட் பழச்சாறுகளும் ஒன்றுபோலதான். ரெடிமேட் பழச்சாறில், 10 சதவிகிதம் மட்டுமே பழச்சாறு உள்ளது. மீதமெல்லாம், சர்க்கரை, நீர், செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் மட்டுமே.
ஒரு குளிர்பான நிறுவனம் ஆண்டுக்கு 300 கோடி விளம்பரத்துக்கு செலவு செய்கிறது. 50 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் குளிர்பானம் தயாரிப்பதற்கு விநியோகச் செலவு உள்பட சேர்ந்து 5 முதல் 7 ரூபாய் ஆகக் கூடும் என்கிறார்கள். ஒரு லிட்டருக்கு 43 ரூபாய் லாபம் என்றால், ஆண்டுக்கு விற்பனையாகும் 430 கோடி பாட்டில்களுக்கு எவ்வளவு பணம் என்று நீங்களே கணக்குப் போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.
 
குளிர்பானச் சந்தை வெறும் தாகம் தணிக்கும் விவகாரம் இல்லை. அது உடலைக் கெடுப்பதில் பன்னாட்டு நிறுவனங்களின் யுத்த களம். இரண்டு முக்கிய அமெரிக்க நிறுவனங்களே இந்தியக் குளிர்பானச் சந்தையின் 70 சதவிகிதத்தை தனது கையில் வைத்திருக்கின்றன. பிரபல நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பாடகர்கள் என அத்தனை பேரும் அவர்கள் பாக்கெட்டில்!
இந்தக் குளிர்பான நிறுவனங்கள் நோ டு H2o அதாவது தண்ணீரை வேண்டாம் என்று ஒதுக்குங்கள் என்று ஒரு புதிய முழக்கத்தை உலகெங்கும் எழுப்பிவருகின்றன. தாகம் எடுத்தால் யாரும் தண்ணீர் குடித்துவிடக் கூடாது. மென்பானங்களில் ஒன்றைத்தான் குடிக்க வேண்டும். இதுதான் சந்தையின் இலக்கு. இந்தச் சந்தைக்கு நம்மை அறியாமலே நாம் பலியாகிவருவதோடு அடுத்த தலைமுறையை இதற்கு காவுகொடுக்கவும் தயார் ஆகிவிட்டோம் என்பதே நிஜம்.
 
பள்ளியில் படிக்கும் மாணவர் எவருக்கும் பன்னாட்டு குளிர்பானங்களின் பெயர்களைத் தவிர வேறு எந்த பானமும் தெரிவது இல்லை. ஒரு மாணவனிடம் 'பானாகாரம் குடித்திருக்கிறாயா?’ எனக் கேட்டபோது 'அது என்ன பானாகாரம்?’ என்று கேலியாகக் கேட்டான்.
 
 
'புளியும் வெல்லமும் சேர்த்துச் செய்வார்களே... பானகம்’ என்றதும் 'அப்படி ஒரு பெயரைக்கூட நான் கேள்விப்பட்டதே இல்லை’ என்றான். அங்கிருந்த ஆசிரியர்கள் பலரும்கூட தங்களுக்கும் அப்படியான பானம் எதையும் தெரியாது என்றார்கள்
 
'நீர்மோரும் பானாகாரமும் பதநீரும் பழச்சாறுகளும்தானே வெயில் காலத்தில் சூடு தணிப்பவை. ருசியான நொங்கு சாப்பிடுவது, வெள்ளரிப்பிஞ்சுகள், வெள்ளரிப்பழம் என எத்தனையோ இருக்கிறதே! அதை விட்டு ஏன் இந்த கார்பனேட்டட் குளிர்பானங்கள்?’ என்று கேட்டால் 'இதற்கு இணை கிடையாது. மலையில் இருந்து தலைகீழாக குதித்ததுபோல இருக்கும்’ என்கிறார்கள்.
ஒருமுறை கோடைக்காலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் நண்பர்களுடன் டிரக்கிங் போயிருந்தபோது வெக்கை தாள முடியாமல் தண்ணீர் குடித்துக்கொண்டே இருந்தேன். காட்டில் எங்களுக்கு வழிகாட்டியாக வந்த ஆதிவாசி இளைஞன் ஒருவன் காட்டுச்செடி போன்ற ஒன்றை பறித்துவந்து 'இதன் வேரை சவைத்து சாற்றை உறிஞ்சிக்கொள்ளுங்கள்’ என்றான்.
 
இதை சாப்பிட்டு எப்படி தாகம் தணியும் என்று புரியாமல் அதை வாயிலிட்டு சவைக்க ஆரம்பித்தேன். ஆச்சர்யம்... அந்தச் சாறு தொண்டையில் குளிர்ச்சி ஏற்படுத்தியதோடு உடலுக்குள் போன சில நிமிஷங்களில் கண்ணில் இருந்த வெக்கை தணிந்து கண் குளிர்ச்சியானதை உணர முடிந்தது. நாவறட்சியும் அடங்கிவிட்டது. அது என்ன வேர் என்று இளைஞனிடம் கேட்டபோது அது மூலிகை என்று சொல்லிவிட்டு அதைப் பற்றி நான் சொல்லக் கூடாது என்றான். ஒரு வேரை ஐந்து நிமிடம் வாயிலிட்டு சவைப்பதன் வழியே உடல் வெக்கையை போக்கிவிட முடியும் என்ற மருத்துவம் நம்மிடம் இருக்கிறது. ஆனால், அதை நாம் முறையாகப் பகிர்ந்துகொள்ளவில்லை. பெருவாரியான மக்கள் பயன்படுத்தும்படியாக அறிமுகப்படுத்தவும் இல்லை.
 
இன்று குடிக்கிற காபியைக்கூட குளிர்ச்சியான கோல்டு காபியாக வேண்டும் எனக் கேட்கும் தலைமுறை வந்துவிட்டது. ஒருகாலத்தில் காபி டம்ளரை தொட்டால் கையில் சூடு தெரிய வேண்டும் என்று காபி குடிப்பவர்கள் நினைத்தார்கள். ஆறிப்போன காபியை மனுஷன் குடிப்பானா என சண்டையிடும் வீடுகளை எனக்கே தெரியும். இன்று கோல்டு காபி, ஐஸ் டீ என சூடான பானங்களை குளிர்ச்சியாக்கிக் குடிக்கிறார்கள். சூட்டில் இருந்து குளிர்ச்சியை நோக்கி மாறியிருக்கிறது நமது உணவுப்பழக்கம். குளிர்ச்சிக்கு என தனி விலை வைத்து விற்பதுதான் இன்றைய தந்திரம்.
 
முன்பெல்லாம் கோடை துவங்கியதும் இலவச தண்ணீர் பந்தல், மோர் பந்தல், பானாகாரம் தருவது என்று நிறைய சேவைகள் நடக்கும். இலவசமாக தென்னை ஓலையில் செய்யப்பட்ட விசிறிகள்கூட வீசிக்கொள்வதற்காக தருவார்கள். இன்று அப்படி எதுவும் கண்ணில் படுவது இல்லை. வணிகச் சந்தையின் பெருக்கம் சேவையை முடக்கிவிட்டிருக்கிறது.
 
சங்க காலத்தில் இப்படியான பானங்களுக்கு சுவை நீர் என்று பெயர். கருப்பஞ்சாறும், இளநீரும், மோரும், பலவகையான பழச்சாறுகளும் குடித்திருக்கிறார்கள். பதிற்றுப்பத்தில் தீம்பிழி எந்திரம் என்ற சொல் காணப்படுகிறது. அது கருவியைக் கொண்டு பழத்தைச் சாறு பிழிந்து எடுத்திருக்கிறார்கள் என்பதையே சுட்டுகிறது.
 
 
The Five Soft Drink Monsters  என்று மைக் ஆடம்ஸ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். குளிர்பானங்கள் எந்த அளவு கெடுதல் செய்யக் கூடியவை என்பதைப் புட்டுப்புட்டு வைக்கிறார். அதாவது டின்னில் அடைக்கப்படும் குளிர்பானங்களில் அது நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க பென்ஸாயிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. சுவைக்காக காபின் கலக்கப்படுகிறது. குளிர்பானங்கள் வரும் பெட் பாட்டில்களில், பிஸ்பினால் ஏ என்ற ரசாயனப்பூச்சு உள்ளது. சர்க்கரைக்குப் பதிலான இனிப்புச் சுவை தருவதற்காகச் ஆஸ்பர்டேம் (Aspartame)  என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இப்படியான ரசாயனங்கள் காரணமாக நமக்கு சுவாச ஒவ்வாமை மற்றும் தோல் நோய்கள், இதய நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
 
 
உடலில் உள்ள கால்சியம் சத்து குறையவும், பாஸ்பரஸ் அளவு உயரவும் இந்த குளிர்பானங்கள் காரணமாக இருப்பதனால் குளிர்பானங்களை அதிகம் குடித்தால் உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவு குறைந்துபோய் தசைகள் சக்தி இழந்துவிடுகின்றன. குளிர்பானங்களைத் தொடர்ந்து குடிப்பதால் பற்சிதைவும், சிறுநீரகக் கோளாறுகளும் ஏற்படுவதைத் தடுக்கவே முடியாது என்கிறார் மைக் ஆடம்ஸ்.
 
எப்படி இவ்வளவு வேகமாக நம்மிடையே பரவியது இந்தக் குளிர்பான பழக்கம். பதிலுக்காக காலத்தின் பின்திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது.
மேடைப் பேச்சாளர்கள் பேச்சின் ஊடே சோடா குடிப்பது, சண்டையில் சோடா பாட்டில் வீசுவது நமக்குத் தெரியும். சோடா எப்படி எப்போது அறிமுகமானது? அது சுவாரஸ்யமான வரலாறு.
 
ஐரோப்பாவில் 17-ம் நூற்றாண்டில்தான் முதன்முதலாக மென்பானங்கள் விற்பது துவங்கியது. அப்போது தேன் கலந்த எலுமிச்சை சாறு விற்பனை செய்யப்பட்டது. 1676-ல் பாரீஸில் இதன் விற்பனை உரிமையை ஒரு நிறுவனம் பெற்று ஏகபோக உரிமையாக்கியது.
 
1767-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோசப் பிரீஸ்ட்லீ என்பவரே கார்பனேட்டட் பானமான சோடாவை உருவாக்கியவர். இங்கிலாந்தின் லீட்ஸில் வசித்த ஜோசப் பிரீஸ்ட்லீ மது தயாரிப்புக்காகப் புளிக்கச் செய்து காய்ச்சிப் பதப்படுத்திய பார்லி பீப்பாய்களில் இருந்த கரியமில வாயுவை ஒரு காலி குவளைக்குள் பிடித்து அதில் தண்ணீரை ஒரு குறிப்பிட்ட அளவு கலந்தார். அது சுவையான நீராக மாறியது. அப்படித்தான் சோடா தயாரிக்கப்பட்டது.
ஜான் மெர்வின் நூத் என்பவரே இதை வணிக ரீதியாக மாற்றினார். ஆரம்ப காலங்களில் சோடா மருந்து கடைகளில் மட்டுமே விற்கப்பட்டது. இது பின்னாளில் ஸ்வீடன் ரசாயனவாதி டோர்பென் பெர்க்மென் வடிவமைத்த சோடா இயந்திரம் மூலம் பெருமளவு தயாரிக்கப்பட்டது. சோடாவோடு பல்வேறு சுவைகளை ஒன்று சேர்ந்தவர் ஜோசப் பெர்சிலிஸ். 19-ம் நூற்றாண்டில் இதுபோன்ற செயற்கை பானங்களைக் குடிப்பதில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. மருந்துக் கடைகளில் மட்டுமே இவை மூலிகை பானங்கள் என விற்கப்பட்டன.
 
அப்போது கண்ணாடி பாட்டில்கள் தயாரிக்கும் தொழில் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. ஆகவே, சோடா பவுண்டன் எனப்படும் சோடா இயந்திரங்களில் இருந்தே மக்கள் இவற்றை வாங்கிக் குடித்தார்கள். சோடியம் பைகார்பனேட் கொண்டு உருவாக்கப்பட்டதால் அது சோடா எனப்பட்டது. வயிறு உபாதைகளுக்கு மருந்தாக டாக்டர்களால் சிபாரிசு செய்யப்பட்ட சோடாவுக்கு 1800-களில் வரி போடப்பட்டது. பிரிட்டனில் ஒரு பாட்டிலுக்கு 3 பென்ஸ் வரி. பாட்டிலில் அடைக்கப்பட்ட சோடா 1835-ல் சந்தைக்கு வந்தது. 1851-ல் அயர்லாந்தில் ஜிஞ்சர் சோடா அறிமுகமாகி புகழ்பெற்றது. சோடா பாட்டில் மூடியை உருவாக்கியவர் வில்லியம் பெயிண்டர்.
 
நம் ஊரில் விற்கப்படும் கோலி சோடா பாட்டிலை 1873-ல் உருவாக்கியவர் ஹிரம் காட் (Hiram Codd)என்ற ஆங்கிலேயர். இவரது கோப்ஸ் கிளாஸ் ஒர்க் கம்பெனிதான் கோலி சோடா பாட்டில்களைத் தயாரித்து விற்பனை செய்யத் துவங்கியது. 1881-ல்தான் சோடாவோடு வண்ணம் சேர்க்கப்பட்டு ரசாயன சுவையூட்டி மூலம் குளிர்பானம் உருவாக்கபட்டது.
 
1886-ல் டாக்டர் ஜான் பெம்பர்ட்ன் கோக்கை உருவாக்கினார். 1898-ல் காலெப் பிராதம் பெப்சி கோலாவை உருவாக்கினார். 1899-ல்தான் கண்ணாடி பாட்டில்கள் தானியங்கி இயந்திரங்களின் மூலம் பெருமளவில் உற்பத்தியாகின. 1920-களில் தானியங்கி குளிர்பான இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. 1957-ல் அலுமினிய டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் அறிமுகமாகின.
 
இந்தியாவுக்கு இதுபோன்ற குளிர்பானங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்குள்தான் அறிமுகமாகின. அதிலும் 1977-ல் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் கூட்டாகவே தொழில் துவங்க வேண்டும் என்ற ஜனதா அரசின் நிர்பந்தம் காரணமாக கோக் இந்திய சந்தையை விட்டு வெளியேறியது. பின்பு 1990-ல்களில் தாராளமயமான சந்தை காரணமாக பார்லேயுடன் இணைந்து தனது சந்தையை உருவாக்கிக்கொண்டது.

No comments:

Post a Comment