Friday, April 29, 2016

காலம் ரொம்ப மாறிப்போச்சு. 
ஆமாம் ப்ரோ... முன்னாடி எல்லாம் 45 வயசைத் தாண்டினவங்கதான் அட்வைஸ் பண்ணினாங்க. இப்ப அட்வைஸ் பண்றவங்களோட ஆவரேஜ் வயசு ரொம்பக் குறைஞ்சிடுச்சு. எதிர்ல 20 வயசுப் பையனைப் பார்த்துட்டா போதும், 30 வயசு ஆள்கூட `ஏன்டா எந்நேரமும் செல்போனை நோண்டிக்கிட்டு இருக்கே... உருப்படியா ஏதாவது பண்ணுடா’னு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிடுறார்.

ஆனா, இந்தக் காலத்து இளைஞர்களான நாங்க எவ்ளோ யோசிக்கிறோம் தெரியுமா? மூளை எந்நேரமும் புராசஸிங் மோட்லதான் இருக்கு... அப்படி என்ன யோசிப்போம்? மீம்ஸ் போடத்தான். ஆமா... இப்போ நாங்கதான் ட்ரெண்ட் செட்டர்ஸ். நாங்க ட்ரெண்ட் பண்றதைத்தான் அகில உலக மீடியா முதல் அத்தனை செலிபிரிட்டிகளும் ஃபாலோ செய்கிறார்கள். இந்த நேரத்துல ஒரு கவிதையை நிச்சயமா சொல்லியே ஆகணும் `ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் நாங்கள் மூழ்கும் பெர்முடா முக்கோணங்கள்’னு கவிதையைக்கூட நாங்க சோஷியல் மீடியாவை மனசுலவெச்சுத்தான் யோசிப்போம்.

உருப்படியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காகவே எதுவும் செய்யாமல் இருக்கும் கிரியேட்டர்கள்தான், இன்றைய சோஷியல் நெட்வொர்க்கின் என்டர்டெய்னர்ஸ். `வருமானத்துக்கு வழி பார்க்கிறீங்களா, இல்லையா தம்பி?’ எனக் கேட்டால் `வாய்ப்பு வரட்டும்னு காத்திருக்கோம்'னு மீம்ஸாகவே பதில் சொல்வார்கள். 

வாட்ஸ்அப் ஸ்மைலிகளைப் பயன்படுத்துறதே இல்லை. கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம்னு ஒன்லி இவங்க ஃபேஸ் ரியாக்‌ஷன்ஸ்தான். பேசாம இந்த வாட்ஸ்அப் கம்பெனி ஸ்மைலிகளை எடுத்துட்டு, வடிவேலு எக்ஸ்பிரஷன்ஸையே வெச்சுக்கலாம். 

வாட்ஸ்அப் காலேஜ் குரூப் இன்னும் களைகட்டும். நைட்டு சாப்பிடுட்டு 9 மணிபோல என்ட்ரி ஆனோம்னா அதிகாலை 3 மணி வரை டைம்பாஸ் ஆகிரும். மொத்த கிளாஸ்ரூமுக்கும் ஒரு குரூப், பொண்ணுங்க மட்டும் ஒரு குரூப், பசங்க மட்டும் ஒரு குரூப், க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஒரு குரூப்னு பல குரூப்கள். மீம்ஸ்களைப் பகிர்ந்து, புன்னகை பூக்கச்செய்வது எல்லாம் தெய்வ லெவல்தானே!

அம்மா, வீட்டில் என்ன சாப்பிட்டாள் எனத் தெரியாது. ஆனால், அமெரிக்கத் தோழி சிற்றுண்டி சாப்பிட பீட்சா கடையில் இப்போது க்யூவில் நிற்கிறாள் என்பது வரை தெரியும். 

`இன்ஸ்டாகிராம்'னு ஓர் அமைதிப் பூங்கா இருக்கு. தல-தளபதி சண்டை இன்னும் வராத சமூக வலைதளம் இதுவாகத்தான் இருக்கும். காலையில பீச்சுக்கு வாக்கிங் போறவங்களைவிட, சூரியன் உதிக் கிறதை போட்டோ எடுக்க வர்றவங்கதான் அதிகம். சூரியன் என்ன பாவம் பண்ணிச்சோ... அதை மறைய விடுறதே இல்லை. ஒரு செடி, கொடி, பூ, மலை, மரம்னு இயற்கையைக் கொஞ்சிக்குலாவும் அந்த இன்ஸ்டாகிராம்ல அக்கவுன்ட் வெச்சிருந்தாலே போதும், நாம எல்லாம் `மயக்கம் என்ன' தனுஷ் மாதிரி பெருமையா உணர ஆரம்பிச்சுருவோம். பூனை, நாய், கோழி, ஆடுனு போட்டோ எடுத்து `பட்டி, டிங்க்கரிங்' பண்ணி போஸ்ட் பண்ணாத்தான் `Wild life போட்டோகிராஃபி' எடுத்தாப்ல இருக்கும். 

DSLR கேமரா வைத்திருப்பவன்தான் நண்பர்கள் கூட்டத்தின் ஹீரோ. அவனைக் கூட்டிட்டுப்போயி வீக் எண்ட்ல ஃபேஸ்புக் புரொஃபைல் பிக்சருக்காக போட்டோ செஷன் நடத்துறது இளசுகள் மத்தியில் பெரிய கிரேஸ். முன்னாடி எல்லாம் பொழுது போக்குக்காக பார்க், பீச்சுனு போவோம். இப்போ போட்டோ எடுக்கிறதுக்குன்னே போறோம். அதுவும் இந்த DSLR கேமரா வாங்கினதுக்காகவே, காடுகள், மலை, செடி, கொடிகள்னு டோரா-புஜ்ஜியைவிடவும் அதிக முறை பயணம் செய்திருக்கிறான் நண்பன் ஒருவன். 

வீக் எண்ட்ல படம் புக் பண்ணலாம், என்ஜாய் பண்ணலாம்னு வாட்ஸ்அப் குரூப்ல டிஸ்கஷன் நடத்தி, முடிவுக்கு வர்றதுக்குள்ள வீக் எண்ட் முடிஞ்சுருது. என்ன டிரெஸ் போடலாம்கிறதைவிட, எந்த போட்டோவை டி.பி-யா வைக்கலாம்னு யோசிக்கிறதே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. இப்பல்லாம் `ஒரு தடவை வெச்ச டி.பி-யைத் திரும்பவைக்கிறது இல்லை’னு துபாய் ரிட்டர்ன் வடிவேலுவைவிடவும் அதிகம் சீன் போடுறாங்க.

தூரத்தில் இருக்கிறவரை பக்கத்துல இழுத்து, பக்கத்துல இருக்கிறவரை தூரத்துக்குத் தள்ளிவிடுற இந்த சோஷியல் மீடியா போதை, மது போதையைவிட அதிகம் அடிமைப் படுத்திடுது. மொபைலைப் பார்த்துக்கிட்டே நடந்து வர்ற பெண்ணைப் பார்த்து என்கிட்ட திட்டுற அம்மாகிட்ட, `அவ கூகுள் மேப் பார்த்துக்கிட்டே வர்றா’னு சப்போர்ட் செய்றேன். 

சொந்த ஊருக்குப் போனா `எப்ப வந்த?' எனக் கேட்கும் முகங்கள், இப்பல்லாம் கண்டுக்கிறதே இல்லை. வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடியே, அங்கே இருக்கிறவங்களுக்கு வாட்ஸ்அப் நியூஸ் போயிருது. ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்குப் போனாலும், இப்போ எப்படி இருப்பான்னு கற்பனை பண்ண வாய்ப்பே கிடைக்கிறது இல்லை. நேத்து எப்படி இருந்தாங்கங்கிறது வரை தெரிஞ்சுருது. விருந்தினரோட செல்ஃபி எடுத்துக்கிட்டு ஃபேஸ்புக்குல போடுறதும் விருந்தோம்பல் பண்புகள்ல இப்போ இணைஞ்சிடுச்சு.

என் வயசுல அப்பா எவ்வளவு வேலை செஞ்சாரோ அதுல பத்துல ஒரு பங்கு செஞ்சுட்டு ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பக்கங்களை ரெஃப்ரெஷ் செஞ்சுக்கிட்டிருக்கேன். பொது அறிவோட, பொதுவா அறிவும் சேர்ந்து வளருது. `வெட்டியாவா டைம்பாஸ் பண்ற... ஏதோ கத்துக்கிறேல்ல?’ என சமாதானம் செய்யுது ஒரு மனசு. `சுட்டது எருமை, அதுல என்ன பெருமை?' என சந்தானம் கமென்ட்டடிக்கிறார் இன்னொரு மைண்ட் வாய்ஸில். எத்தனை நாளைக்கு இந்த மோகம், போதை இதெல்லாம்னு யோசிச்சா, `கண்ணா... எல்லாம் கொஞ்ச காலம்தான்'னு செல்ஃப் மோட்டிவேஷன் செஞ்சுக்கிறேன். இப்போதைக்கு என் கவலை எல்லாம் வாட்ஸ்அப் எமோஜிகளை மாதிரி முகபாவனை செஞ்சுக்கிட்டே பேசிடுவேனோங்கிறதுதான்.

`3ஜி அத்தியாவசியம்... 4ஜி ஆடம்பரம்’னு `கத்தி’ விஜய் மாதிரி வீர வசனம் வேற பேசிக்கிறோம். அதுலயும் பாருங்க, இந்த நெட்பேக் போடாத காலத்துல, `ஓர் ஆதிவாசியைப்போல உணருகிறேன்’கிறான் பொறியியல் படிக்கும் நண்பன் ஒருத்தன். `தனிமையின் இனிமையை இணையத்துல காண்போம்’கிறான் இன்னொரு நண்பன். `தனிமையை அனுபவிக்க இணையம் நல்ல சாய்ஸ்’ங்கிறா ஒரு பொண்ணு. 

இணைய நண்பர்களை நேர்ல பார்த்தாக்கூட அவங்களோட நிஜப் பெயரைவிட இணையப் பெயரைச் சொல்லித்தான் அழைக்கத் தோணுது. இந்தக் கட்டுரைக்குக்கூட என்னோட இயற்பெயரைப் போடுறதா, இணையப் பெயரைப் போடுறதானு குழம்பி, இணையப் பெயரையே போடுவோம்கிற முடிவுக்கு வந்திருக்கேன்னா பாருங்க, இணையத்தின் பாதிப்பை!

Tuesday, April 26, 2016

பிறக்காத அடுத்த தலைமுறைக்கு ஒரு மன்னிப்பு கடிதம்  

ன்னும் பிறக்காத எம் தலைமுறைக்கு கனத்த இதயத்துடன் இதனை எழுதுகிறேன். சுட்டெரிக்கும் வெயிலின் வியர்வை வாசம், எழுத்தின் அனைத்து புள்ளிகளிலும் படரவிட்டு எழுதுகிறேன். நீங்கள் படிக்க இந்த பூமி மிச்சம் இருக்குமா என்ற அச்சத்துடன் இதை தொடங்குகிறேன். தொடர்ந்து கடிதம் எழுதுவது கிண்டலுக்கு உள்ளாக கூடும் என்று தெரிந்தும் இதை  எழுதுகிறேன். மனதின் அடியாழத்திலிருந்து இதனை எழுதுகிறேன்.
இது மன்னிப்பு கடிதம்.  நிறைய பாவங்களை நாங்கள் செய்துவிட்டோம். அதனால், யாருக்கும் தெரியாமல் கூண்டுக்குள் அமர்ந்திருக்கும் ஒருவர் செவிகளில் மட்டும் செய்த பாவங்களை சொல்லி, மன்னிப்பு கேட்க விரும்பவில்லை. எங்கள் பாவங்கள் எப்படி பகிரங்கமானவையோ, அது போல் எங்கள் மன்னிப்பும் பகிரங்கமானதாக இருக்க வேண்டும். அதனால் கண்ணீருடன் இந்த மன்னிப்பு கடிதத்தை எழுதுகிறேன்.
ஆம் கண்ணீருடன்தான். தெரிந்தே செய்யப்பட்ட எங்கள் பாவங்களை இந்த கண்ணீர் என்றும் கழுவாது என்று விழித்திருக்கும் எம் தலைமுறைக்கு நன்கு தெரியும். அது தெரிந்ததால் வரும் மன அழுத்தம் வற்றாத கண்ணீரை பெருக்கடுக்க செய்கிறது. அந்த கண்ணீருடம் இதை எழுதுகிறேன்.
நாங்கள் செய்த தவறுகளை எங்கள் முந்தைய தலைமுறை தடுக்க தவறியது, வேடிக்கை பார்த்தது. அதனால், அவர்களுக்காக சேர்த்தும் உங்களிடம் மன்னிப்பு கேட்டு இந்த கடிதத்தை எழுத துவங்குகிறேன்.
 
வேடிக்கை மனிதர்கள் நாங்கள்:
வெயில் சுட்டெரிக்கிறது. இது கோடை காலம் அதனால்தான் இந்தளவிற்கு வெயில் என்று எங்களுக்கு நாங்களே பொய் சமாதானம் சொல்லிக் கொண்டு, கடக்க விரும்பவில்லை. இந்த வெயிலுக்கு நாங்களும் ஒரு வகையில் காரணம். ஆம். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மட்டுமல்ல, பெரு மழைக்கும் ஒரு வகையில் மட்டுமல்ல அனைத்து வகையிலும் நாங்களே, நாங்கள் மட்டுமே காரணம்.
கணக்கு வழக்கில்லாமல் மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருந்த போது, வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். மனதில் கறைபடிந்த கரை வேட்டிகளின் துணையுடன் சில தனி நபர்கள் காடுகளையும், மலைகளையும் சுரண்டிக் கொண்டிருந்த போதும் எங்களுக்குள் நாங்கள் சண்டையிட்டு கொண்டோமே தவிர அவர்களை எதிர்த்து சண்டையிடும் துணிச்சலற்று இருந்தோம். நாங்கள் கோழைகள் என்றறிந்த ஒரு  கூட்டம், தைரியமாக தாயின் பால் சுரக்கும் மார்பையே அறுக்க துணிந்தது. ஆம் ஆற்றில் கை வைத்தது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு குவியல் குவியலாக மணலை சுரண்டியது. அதை தடுக்க நெஞ்சுரமற்று நின்றதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த மலைகள், காடுகள், ஆறுகள் எங்களால் உருவாக்கப்பட்டதில்லை. ஆனால், இதை சுரண்டும் அனைத்தும் எங்களின் கண்டுபிடிப்புகள். செவ்விந்திய பழங்குடி தலைவன் துவாமிஷ்  சொன்னான்,  “பூமி மனிதனுடையது அல்ல. மனிதன் பூமியினுடையவன்" என்று.

ஒரு குடும்பத்தை ஒன்றாக்கும் ரத்தத்தைப் போல எல்லாம் ஒன்றோடொன்று பிணைக்கப் பட்டிருக்கிறது. எல்லாம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை. பூமிக்கு நடப்பதெல்லாம், பூமியின் பிள்ளைகளுக்கும் நடக்கும். உயிரின் வலையை நெய்தது மனிதன் அல்ல. அவன் அதில் ஓர் இழை மட்டும்தான். அந்த வலைக்கு அவன் செய்வதெல்லாம் அவன் தனக்குத் தானே செய்துகொள்வது தான்...” என்று. இது எங்களுக்கு நன்கு தெரியும். ஆனால், இதை பழங்குடியின் பாமர சொற்கள் என்று பரிகாசம் செய்தோம்.

இயற்கை கண்ணியில் நாங்களும் ஒரு அங்கம் என்று மறந்து போனோம். நாகரீகத்தின் பெயரால், வளர்ச்சியின் பெயரால் சுரண்டினோம்... சுரண்டினோம்... மேலும் மேலும் சுரண்டினோம், துவாமிஷ் சொன்னதை ஒரு நாள் உணர்ந்தோம் நாங்கள் பூமிக்கு செய்த அக்கிரமங்கள் அனைத்தும் எங்களுக்கு நாங்களே செய்து கொண்டவை என்று. ஆனால், அப்போது எல்லாம் கை மீறிப்போய்விட்டது.
ஆனால், அப்போதும் இயற்கை எங்களை மன்னிக்க தயாராக இருந்தது. நீங்கள் செல்லும் பாதை தவறு, திருத்திக் கொள்ளுங்கள் என வாய்ப்பை பல முறை வழங்கியது. ஆனால், எங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. வாய்ப்புகள் சுலபமாக கிடைக்கும் போது, அதை உதாசீனம் செய்வோம்.அதை தான் செய்தோம். மீண்டும் தீமையின் பாதையிலேயே பயணித்தோம். இந்த பூமி, அதன் செல்வங்கள் அனைத்தும் எங்களுக்காக, எங்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டது என்று இறுமாப்பில் அனைத்தையும் போட்டு உடைத்தோம்.
உங்களுக்கென எதையும் மிச்சம் வைக்காமல், அனைத்தையும் அபகரித்து கொண்டுவிட்டோம். அதனால், உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னை, எங்கள் தலைமுறையை மன்னித்துவிடுங்கள்.
 
பணம் கொடுத்து எதையும் வாங்க முடியாது:
என் தாத்தா என் அப்பாவிடம் அழகிய புவியை ஒப்படைத்து சென்றார். அவரிடம் செல்வம் குவிந்திருந்த போதும் மண் வீட்டில்தான் வாழ்ந்தார். பெரும்பாலும், மானாவாரி உணவுவகைகளையே உண்டு வாழ்ந்தார். ஏன் குடிசையில் வாழ்கிறோம், ஏன் மானாவாரி நிலத்தில் விளைந்த உணவு வகைகளை உண்கிறோம் என்று தெரிந்து செய்தார். ஆனால், என் அப்பா படித்த கல்வி  மேலைநாட்டு நாகர்ரிகம் நோக்கி ஈர்த்தது.. வானுயர்ந்த கோபுரங்கள், பெரிய கட்டமைப்புகள்தான் வளர்ச்சி என்றது. என் அப்பா அதை அரை மனதுடன் ஏற்றுக் கொண்டார். இயன்ற வரை இயற்கையை சுரண்டாமலும் இருந்தார்.
 
ஆனால், நாங்கள் வரலாற்றில் இருள் சூழ்ந்த பக்கத்திற்குள் நுழைந்தோம். வளர்ச்சி என்ற பெயரால் எங்களுக்கு எதுவெல்லாம் காட்டப்பட்டதோ, அவை அனைத்தையும் நம்பினோம். பொருள் வாங்கி குவிப்பதுதான் கௌரவம் என்று சொல்லப்பட்டது. அதனால், அனைத்தையும் வாங்கி குவித்தோம். வாழ்வதற்காக அல்லாமல் வாங்குவதற்காக உழைத்தோம். ஒருவருக்கு இரண்டு கைபேசிகள், நான்கு காலணிகள், நாற்பது சட்டை பேண்ட்கள் என வாங்கி குவித்தோம்.
ஒரு  நாள் நாங்கள் வாங்கி குவித்த பொருட்கள்தான், இந்த புவிக்காக எமன் என்று புரிந்தது. எந்த அறிவியல் எங்களை அதிகம் நுகர சொல்லி தூண்டியதோ, அதே அறிவியல் இப்போது சொல்கிறது, ஒரு ஜீன்ஸ் தயாரிக்க ஒன்பதாயிரம் லிட்டர் நீர் தேவை என்றும், ஒரு ஜோடி காலணி தயாரிக்க இருபதாயிரம் லிட்டர் நீர் தேவை என்றும்.

ஆனால், இது எங்களுக்கு தெரிய வந்த போது நிலைமை படு மோசமாகிவிட்டது. ஒரு சொட்டு தண்ணீருக்காக அங்கொன்றும், இங்கொன்றுமாக சாவுகள் விழத் துவங்கிவிட்டது. சொல்லப்போனால், எம் தலைமுறைக்கே இயற்கையான தண்ணீரின் சுவை எப்படி இருக்கும் என்றே தெரியாது. எங்கள் டி. என். ஏவில் படிந்து இருப்பதெல்லாம் செயற்கை நீரின் சுவை மட்டுமே. பாட்டில் நீரின் சுவை அது.
சொந்தப் படுக்கையை மலினமாக்கினால் ஓர் இரவு சொந்தக் கழிவில் மூச்சு முட்டி இறக்க நேரிடும் என்று துவாமிஷ் சொன்ன வார்த்தைகளுக்கான முழு அர்த்தம் இப்போதுதான் புரிய துவங்கி இருக்கிறது.
இப்போது உணர்கிறோம், ஏசி வாங்கலாம், ஆனால் இயற்கையான காற்றின் புத்துணர்ச்சியை வாங்க முடியாது என்று, அழகான மின் விளக்குகள் வாங்கலாம் ஆனால் ஒரு காலமும் இயற்கையான ஒளி தரும் ஆனந்தத்தை வாங்க முடியாது என்று, குளிர் பானங்கள் வாங்கலாம், ஆனால் எப்போதும் நீரின் சுவையை வாங்க முடியாது என்று. உணர்ந்து மட்டும் இப்போது என்ன செய்ய முடியும்...?
 
நிச்சயம் இயற்கை மிக கருணையுடையது. நாங்கள் செய்த தவறுக்காக உங்களை தண்டிக்காது என்று நம்புகிறேன். தண்டித்து விடக் கூடாது என்று விரும்புகிறேன். உங்களுக்கு விட்டு செல்ல எங்களிடம் எதுவும் இல்லை, நல்ல அனுபவம் உட்பட. நாங்கள் பட்டாம்பூச்சிக்கு பின்னால் ஓடவில்லை, தும்பியை அமர்ந்து ரசிக்கவில்லை, பறவைகளின் கீச்சு இசையில் இன்பத்தை காணாமல் தீம் பார்க்கில் சந்தோஷத்தை கண்டடைந்தவர்கள் நாங்கள். 
 
எங்கள் மீது கோபம் கொண்டு தும்பியும், பட்டாம்பூச்சியும், பறவையும் இந்த புவியைவிட்டு செல்லாமல் இருந்தால், நீங்கள் அவர்களை நண்பர்களாக்கி கொள்ளுங்கள். என்னைவிட அவர்களுக்குதான் உங்களுக்கு சொல்லி தர அதிக விஷயம் இருக்கிறது.

மீண்டும் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு

Friday, April 22, 2016

இது கண்களுக்கான கணினி!



கார்க்கிபவா

`மை டியர் குட்டிச்சாத்தான்' ஞாபகம் இருக்கிறதா? அதில் சிறுவர்களுடன் ஒரு குட்டிச்சாத்தானும் சிறுவன் உருவில் சுற்றும். அந்தச் சிறுவன் மற்றவர் கண்களுக்குத் தெரிய மாட்டான். `ஃபேன்டசி கதை' என அன்று நாம் ஆச்சர்யமாகப் பார்த்ததை, இன்று நிஜமாக்கியிருக்கிறது தொழில்நுட்பம். வழக்கமாக கூகுள் நிறுவனம்தான் இப்படி `அட’ போடவைக்கும். இந்த முறை `ஹோலோலென்ஸ்’ உடன் களம் இறங்கியிருப்பது மைக்ரோசாஃப்ட்.

ஹோலோலென்ஸைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன்னர், ஹோலோகிராம் பற்றி பார்ப்போம். 

`ஹோலோஸ்’ என்பதற்கு கிரேக்க மொழியில் `முழுமையான’ என அர்த்தம். `கிராமா’ என்றால் தகவல். அதில் இருந்து வந்ததுதான் ஹோலோகிராம். புரொஜக்‌ஷன் மூலம் உருவாக்கப்படும் முப்பரிமாணப் பிம்பத்துக்கு `ஹோலோகிராம்’ எனப் பெயர். சென்ற ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், குதிரை ஒன்று பறந்துவந்து ஜெயலலிதாவுக்கு வணக்கம் வைத்தது நினைவில் இருக்கிறதா? அதுதான் ஹோலோகிராம்.

ஹோலோலென்ஸ் என்பது, நம் கண்களில் அணியக்கூடிய ஒரு ஹோலோகிராஃபிக் கம்ப்யூட்டர். இது நாம் விரும்பும் ஹோலோ கிராஃபிக் பிம்பத்தை உருவாக்கும். அந்தப் பிம்பத்தைத் தொட்டு நாம் கொடுக்கும் சிக்னலுக்கு ஏற்ப வேலைசெய்யும்; நாம் சொல்வதைக் கேட்கும்; அதுவும் பேசும். 

ஹோலோலென்ஸை அணிந்துகொண்டு, அமெரிக்காவில் இருக்கும் உங்கள் கிளையன்ட்டுடன் ஸ்கைப்பில் வீடியோ கால் பண்ணலாம். லேப்டாப் திரையில் தெரியவேண்டிய அவரது வீடியோ, உங்களுக்கு முன்னால் தெரியும். அப்படியே நடந்துசென்றால், அவரும் உங்களுடன் வருவார். ஆனால், மற்றவர் கண்களுக்கு அந்த வீடியோ தெரியாது. ஹோலோலென்ஸில் இருக்கும் ஸ்பீக்கரில் அவர் பேசுவது கேட்கும். கிளையன்ட் ஏதேனும் தேவையில்லாமல் பேசினால், அவர் தலையில் லேசாகக் கொட்டலாம். அவருக்கு வலிக்காது என்பது மட்டும்தான் வித்தியாசம்.

ஏற்கெனவே ஆக்மென்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி எனப் பல வகை இருக்க, ஹோலோலென்ஸை `மிக்ஸட் ரியாலிட்டி' என்கிறார்கள். விர்ச்சுவல் ரியாலிட்டி என்றால், இல்லாத ஒன்றை இருப்பதுபோல் காட்டுவது. ஆக்மென்டட் ரியாலிட்டி என்றால், இருக்கும் ஒரு பொருள் மீது டிஜிட்டலாக சில தகவல்களைச் சேர்ப்பது. அதாவது, ஒரு புத்தகத்தை மொபைலில் ஸ்கேன் செய்தால், மொபைலில் புதிதாக ஒரு வீடியோ பாடும். மிக்ஸட் ரியாலிட்டி என்றால், நிஜத்தில் இருக்கும் பொருளோடு இல்லாத ஒன்றைச் சேர்த்துக் காட்டுவது. அதாவது, உங்கள் எதிரில் நிஜமாகவே உங்கள் பாஸ் நிற்பார். அவருக்குப் பக்கத்தில், ஊரில் இல்லாத கிளையன்ட் நிற்பதுபோன்று காட்டும். இருவரையும் ஒரே நேரத்தில் ஹோலோலென்ஸ் மூலம் பார்க்க முடியும். 

இந்த அளவுக்கு ஆச்சர்ய விஷயங்களைச் செய்யும் சாஃப்ட்வேரைச் சுமக்கும் ஹார்டுவேர் எப்படி இருக்க வேண்டும்? ஹோலோலென்ஸின் வடிவமைப்பு அதைத் தாங்கக்கூடியது. லேப்டாப்களில் இருக்கும் புராசஸரைவிட சக்திவாய்ந்த புராசஸரைப் பொருத்தி இருக்கிறார்கள். போட்டோ எடுப்பதற்கு 2 மெகாபிக்ஸல் கேமரா. அது தவிர, நம் சுற்றுப்புறத்தைக் கவனிக்க தனி கேமராக்கள். நாம் பேசுவதைக் கேட்க மைக்ரோஃபோன். நாம், அது சொல்வதைக் கேட்க 3டி ஸ்பீக்கர்கள், 2 அல்லது 3 மணி நேரம் இயங்குவதற்கு தேவையான பாட்டரி, புளூடூத் சிப்செட், 2 ஜிபி ராம் என ஹைடெக் பாகங்கள் அனைத்தையும், அவ்வளவு லேசான ஒரு கண்ணாடியில் அடக்கியிருக்கிறார்கள். இது எளிதில் உடையாததாகவும் இருக்கிறது. 

ஹோலோலென்ஸ் என்பது, ஒரு புதிய டெக்னாலஜி. இதைவைத்து கேம்ஸ் ஆடலாம்; மருத்துவத் துறைக்கு உதவலாம்; கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தேவைப்படலாம்... என என்னென்ன செய்யலாம் என்பது நமது க்ரியேட்டிவிட்டியைப் பொறுத்தது. இதற்கு டெவலப்பர்கள் தேவை. எல்லாவற்றையும் மைக்ரோசாஃப்ட்டே செய்ய முடியாது. அதனால் முதல் கட்டமாக சில ஆயிரம் ஹோலோ லென்ஸ்களை அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கும் டெவலப்பர்களுக்கு மட்டும் விற்கத் தொடங்கியிருக்கிறார்கள். விலை 3,000 டாலர் (கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய்). பொதுமக்களுக்கு விற்பனைக்கு வரும்போது இது இன்னும் குறையலாம்.

`ஹோலோலென்ஸ் கண்ணாடியைப் பயன்படுத்தி, மனித உடலின் தசைகள், இதயம், மூளை, எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம்... என அனைத்தையும் தனித்தனியாகக்  கண்காணிக்கலாம்’ என்கிறது கேஸ் வெல்டர்ன் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஓர் ஆராய்ச்சி வீடியோ. பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு தெரியவரும் சில விஷயங்களை, ஹோலோலென்ஸ் மூலம் எளிதாகக் கண்டறியலாம். 

`இது எல்லாம் ஹைடெக் டெக்னாலஜி... நமக்குத் தேவைப்படுமா?’ என நீங்கள் யோசிக்கலாம். வெளிநாட்டில் குடும்பத்துக்காக உழைக்கும் அப்பாவை, பிள்ளைகள் ஸ்கிரீனில் பார்த்தால் போதுமா? ஹோலோலென்ஸ், அவர்களை ஒன்றாக கிரிக்கெட்டே விளையாடவைக்கும். விஞ்ஞானம் தன் வேலையைச் செய்துகொண்டுதான் இருக்கும். அதை மனிதத் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துவதில்தான் அதன் உண்மையான வெற்றி இருக்கிறது

Thursday, April 14, 2016

மக்களின் நாயகன் அம்பேத்கர்

அம்பேத்கர் இந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர்.. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே போராடினார் அவர் என்கிற பொது பிம்பத்தில் இருப்பதுவருத்தத்துக்குரியது.  எண்ணற்ற இன்னல்களுக்கு உள்ளாகி இருட்டில்,துன்பத்தில்,அடக்குமுறையில் உழன்று கொண்டிருந்த இந்த தன் சக மக்களின் துயரத்துக்கு என்ன காரணம் ,சாதிகள் எப்படி தோன்றின ,சாதியம்
எப்படி சக மனிதனை சமமானவனாக கருதாத துயர் மிகுந்த போக்கை வளர்த்தது என்பதைப்பற்றி அவர் செய்த ஆய்வு அதைத்தொடர்ந்து எழுதிய நூல்கள் எல்லாமும் அசாத்தியமானவை. 

எந்த இடத்திலும் எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்லக்கூடாது என்பதற்காக வரிக்கு வரி அவர் கொடுத்திருக்கும் அடிக்குறிப்புகள் எந்த வெறுப்புணர்வும் இல்லாமல் உண்மையை மட்டும் ஒடுக்கப்பட்டவர்களின் ஆன்மாவின் தீனக்குரலாக எழுப்பிய அற்புதம் அவரால் செய்யப்பட்டது.  வர்க்கத்துக்கும் வர்ணத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஆங்கிலேயருக்கு
அவர் எடுத்துக்காட்டும் புள்ளி அற்புதமானது. அது சமூகத்துக்கு எதிரானது அல்ல,பணம் பெற்றால் ஒருவர் முன்னேறி வர்க்க அடுக்கில் மேலே போய் விடலாம்-இங்கே அது சாத்தியம் இல்லை என்று தெளிவாக பதிவு செய்தார் அண்ணல்.

எப்படி கல்விக்கூடங்கள், அரசின் கவுன்சில்கள், வேலை செய்யும் இடங்கள்,வர்த்தகம் என்று பல்வேறு புள்ளிகளில் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று ஆதாரங்களோடு அவர் அடுக்கும் பொழுது அட போடுவீர்கள் நீங்கள் பலருக்கு தெரியாத தகவல் இந்தியாவின் ரிசர்வ் வங்கி உருவானது அண்ணலின் வழிகாட்டுதலில் தான். காந்தி தேசத்தின் விடுதலைக்கு பின் சமூகம் சார்ந்த விடுதலையை முன்னெடுப்பதை பார்ப்போம் என்ற பொழுது அவரோடு எண்ணற்ற உரையாடல்கள் நிகழ்த்திய அண்ணலின் பொறுமையை நாம் கற்க வேண்டும்  .பூனா ஒப்பந்தத்தை காந்தி தன் உண்ணா நோன்பின் மூலம் மாற்ற முயன்ற பொழுது துயரத்தோடு விட்டு கொடுத்த அண்ணலின் கருணை பெரும்பாலான தலைவர்களுக்கு இல்லாதது. 

அவருக்கிருந்த பல்துறை புலமை இன்றைக்கும் சிலிர்ப்பை உண்டு செய்கிறது .பொருளாதாரம், சட்டம், வரலாறு, சமூகவியல், புவியியல் என எண்ணற்ற துறைகளில் தனக்கான தேடலை விடாமல் செய்தவர் அவர்.  இந்திய அரசியல் சட்டத்தை உடனிருந்த உறுப்பினர்கள் பலர் நகர்ந்து கொள்ள ஒற்றை ஆளாக கிட்டத்தட்ட செதுக்கி உருவாக்கிய பெருமை அண்ணல் அவர்களையே சாரும். அதற்கு பின்னும் ஒரு முன்கதை உண்டு. இந்தியாவின் முதல் அமைச்சரவை பட்டியலோடு காந்தியை பார்க்க நேரு போன பொழுது அதில் அண்ணலின் பெயர் இல்லை. "எங்கே 'அம்பேத்கர்' அவர்களின் பெயர் ?"என காந்தி கண்களை குறுக்கி கேட்டார். நேரு அண்ணலை சட்ட அமைச்சராக ஆக்கினார். 

கிராம சுயராஜ்யம் என்கிற காந்தியின் வழியில் போனால் சாதியம் ஊற்றெடுக்கிற மண்ணாக இம்மண் போய் விடும் என்பதில் அண்ணல் தெளிவாக இருந்தார். அவர் இயற்றிய சட்டங்களின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு எனும் கனி கிடைக்கபெற்றது. அதையும் தொடர்ந்து அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று அண்ணல் சொல்லவில்லை என்பதை குறித்துக்கொள்ள வேண்டும். அவர் இயற்றிய அரசியலமைப்பு சட்டம் தான் இந்த நாட்டை செலுத்தும் வாகனம் என்றால் அது மிகையில்லை. இந்த நாட்டின் ஜனநாயகம் இன்னமும் உயிர்திருப்பதற்கு அண்ணலின் தொலைநோக்கு முக்கிய காரணம்.

பொதுவான இந்து சிவில் சட்டத்தை கொண்டு வர அவர் எடுத்த முயற்சிக்கு மதவாத சக்திகள் கடும் எதிர்ப்பை கிளப்பின. நேருஒத்துழைக்க வில்லை என எண்ணி அண்ணல் பதவி விலகினார். அவர் மரணமடைந்த சில மாதங்களில் அதை நேரு ஆறு தனித்தனி சட்டங்களின் மூலம் செய்து அண்ணலுக்கு அஞ்சலி செலுத்தினார் அண்ணலிடம் இருந்து படிக்கவேண்டிய மிகமுக்கிய பாடம் உண்டு. எதையும் அறிவுப்பூர்வமாக அவர் கையாண்டார். வெறுப்பால் எதையும் கட்டமைக்கவில்லை அவர். அவர் எழுதிய எந்த கட்டுரையிலும் இந்த நாட்டின் மீது வெறுப்பை உமிழ்கிற வார்த்தைகளை நீங்கள் பார்க்க முடியாது. மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும் என்கிற முனைப்பு அவரின் எழுத்தில் சிந்தனையில் தெரியும். சமூக விடுதலைக்காக ஏன் இந்த நாட்டின் இயக்கத்துக்கான விதை போட்ட அண்ணலை நினைவு கூர்வோம்.

Friday, April 8, 2016

பாலிவுட்டின் ‘குயின்’!

டிகை கங்கனா ரணாவத்துக்கு 29 வயது. அதற்குள் மூன்று தேசிய விருதுகள். ‘தனு வெட்ஸ் மனு - ரிட்டர்ன்ஸ்’ படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்ட மார்ச் 28-ம் தேதி, கங்கனாவின் பிறந்த நாள். பர்த்டே கிஃப்ட்!

17 வயதில் நடிக்கத் தொடங்கியவர் கங்கனா. 12 ஆண்டுகால திரையுலக வாழ்க்கை. எதுவும் சீராக இருந்தது இல்லை. சர்ச்சைகள், குழப்பங்கள், கிசுகிசுக்கள், வழக்குகள், வன்முறைகள். 

கங்கனாவின் வீட்டில் முதலில் பிறந்தது ஓர் ஆண்குழந்தை. பிறந்த பத்தே நாட்களில் அது இறந்துபோனது. அடுத்த குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என குடும்பமே காத்திருக்க, அக்கா ரங்கோலி பிறந்தார். அடுத்து ஆண் குழந்தைதான் என குடும்பமே காத்திருக்க... பிறந்தது கங்கனா ரணாவத். அன்று தொடங்கி ‘ஒரு பையன் பிறப்பான்னு எதிர்பார்த்தோம். இவ வந்து பொறந்து தொலைச்சிட்டா’ என்று பெற்றோர் புலம்ப ஆரம்பித்தனர். ‘நம் பெற்றோருக்குத் தேவையில்லாத குழந்தையாக வளர்வது மிகவும் மோசமானது. அந்த நினைவுகள் இப்போதும் என்னைத் தொந்தரவு செய்கிறது’ என்பார் கங்கனா. சொந்த ஊர் இமாச்சலப்பிரதேசத்தின் மாண்டிக்கு அருகில் சிறிய கிராமம். அம்மா, பள்ளி ஆசிரியை, அப்பாவுக்கு சுயதொழில். எப்படியாவது மகளை டாக்டராக்கிவிட வேண்டும் என எந்நேரமும் நெருக்கடி தருகிற பெற்றோர். பள்ளியில் படிக்கும்போதே படிப்பைவிட மாடலிங்கில் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்பதுதான் கங்கனாவின் கனவு. வீட்டில் எல்லோரி டமும் சொல்லிவிட்டு, ‘இனி மாடலிங் தான்’ என டெல்லிக்குக் கிளம்பியபோது கங்கனாவுக்கு வயது 16.
மாடலிங்கில் க்ரியேட்டிவாகச் செயல்பட வாய்ப்பு இல்லை என்பது சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது. மீண்டும் எதிர்காலம் குறித்த குழப்பம். நாடகங்களை இயக்கிக் கொண்டிருந்த அர்விந்த் கவுர், அவரை மேடை நாடகங்களில் நடிக்கப் பயிற்றுவித்தார். அவர்தான் சினிமாவுக்கும் அனுப்பிவைத்தார்.   அனுராக் பாஸு இயக்கிய `கேங்ஸ்டர்' படத்தில் நாயகி வாய்ப்பு. ஆனால், ஷூட்டிங் உடனே தொடங்கவில்லை. அடுத்த ஆறு மாதங்கள் மும்பையில் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் ஏழு பேருடன் தங்கியிருந்தார். கையில் காசு இல்லை. பல நாட்களில் இரவு உணவு இருக்காது. சப்பாத்தியும் ஊறுகாயும்தான். 

‘தனியாக வாழ்கிற ஓர் இளம் பெண்ணாக, உங்களுக்குப் பின்னால் ஒரு பணக்காரத் தந்தையோ, அண்ணனோ, அரசியல்வாதியோ, நடிகரோ, தயாரிப்பாளரோ இல்லாத பட்சத்தில் உங்களை நீங்களேதான் காத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஒரே ஒரு பிழையோ, குறையோ கண்டுபிடித்துவிட்டாலும் உங்களை வேட்டையாடிவிடுவார்கள். பாலிவுட்டில் சிலர் குறிவைத்து விட்டால் என்ன பாடுபடுத்துவார்கள் என்பது கடவுளுக்கு மட்டும்தான் தெரியும். நீங்கள் உங்களை மிகச் சரியாக வைத்துக்கொள்வது மட்டும் தான் தப்பிப் பிழைக்க ஒரே வழி’ என்று பேட்டி ஒன்றில் தன் ஆரம்ப நாட்களை நினைவுகூர்கிறார் கங்கனா. 

`கேங்ஸ்டர்' வெளியானது. குடிகாரியாக நடித்த 18 வயது துறுதுறு பெண்ணை பாலிவுட் கவனித்தது. அந்தப் படத்தின் வெற்றி இன்னும் பல வாய்ப்பு களை அள்ளித் தந்தது. யாருமே ஏற்றுக்கொள்ளத் தயங்குகிற வேடங்களை அடுத்தடுத்து ஏற்று நடித்தார். ‘வோ லம்ஹே’யில் `ஸ்கீசோப் ரீனியா'வால் பாதிக்கப்பட்ட நடிகையாக, ‘ஃபேஷன்’ திரைப்படத்தில் போதைக்கு அடிமையாகி வாய்ப்புகளைத் தவறவிடும் மாடலிங் பெண்ணாக... அவர் ஏற்றுக்கொண்ட பாத்திரங்கள் எல்லாமே எதிர்மறையானவை; மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவை.
‘எனக்குக் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் முழுமனதோடு ஏற்றுக்கொண்டு நடித்தேன். 

`என் தலைமுடி ஏன் இப்படிச் சுருள்சுருளாக இருக்கிறது... எனக்கு ஏன் நீலநிறக் கண்கள் இல்லை... ஏன் நான் உயரமாக இல்லை?’ என்று ஏங்கியதே இல்லை. என்னிடம் என்ன இருக்கிறதோ... அதுதான் நான்’ என்று அந்தச் சமயத்தில் பேட்டி கொடுத்தார். 

2008-ம் ஆண்டு தொடங்கி 2010-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக அடுத்தடுத்து பல தோல்விப் படங்கள். தமிழில் அவர் நடித்த `தாம் தூம்' படம்கூட படுதோல்வி. தொடர்ச்சியாக மோசமான பாத்திரங்களை ஏற்று நடித்ததில் மனசு முழுக்கச் சொல்ல முடியாத வேதனைகள்; கூடவே காதல் தோல்வி. `அடுத்தது என்ன... இந்தப் போராட்டங்களிலேயே செத்துப்போய் விடுவோமா?’ அலைபாய்ந்த எண்ணம். அந்த நேரத்தில்தான் சூர்யா என்கிற யோகா குரு ஒருவரைச் சந்திக்கிறார் கங்கனா. அவர் விவேகானந்தரின் எழுத்துக்களையும் யோகாவையும் கங்கனாவுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். 
‘யோகா எனக்குள் புதிய உற்சாகத்தையும் பலத்தையும் உருவாக்கியது. எனக்குள் ஒரு தெளிவை உருவாக்கியது. வாழ்வை எதிர் கொள்வதற்கான வலிமையைக் கொடுத்தது’ என்கிறார் கங்கனா. இப்போதும் தானேவில் உள்ள ராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று யோகா பயிற்றுவிக்கிறார். 

தன் மனதுக்குச் சரி எனப் பட்டதைத் தயங்காமல் செய்வதில்தான் கங்கனா மற்ற நடிகைகளில் இருந்து வித்தியாசப்படுகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவப்பழகு க்ரீம் நிறுவனம் ஒன்று, விளம்பரத்தில் நடிக்க இரண்டு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம்செய்ய கங்கனாவிடம் வந்தது. உடனடியாக முடியாது என மறுத்துவிட்டார். ‘எதுக்கு ஒரு பொண்ணு சிவப்பா இருக்கணும்? இந்த கான்செப்ட்டையே என்னால புரிஞ்சுக்க முடியலை. என் அக்கா ரங்கோலிகூட கறுப்புதான். ஆனால் அழகானவள். இப்படி ஒரு விளம்பரத்தில் நடித்தால், அது அவளையே அவமானப்படுத்துவதாக ஆகாதா?’ என்றார். இந்த அதிரடிதான் கங்கனா. 

அவர் நடித்த படங்களைவிடவும் பெர்சனல் வாழ்க்கையை முன்வைத்தே கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து பேசப்பட்டார். முதலில் ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைத்துப் பேசப்பட்டார். பிறகு அஜய் தேவ்கானுடன் காதலில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. பிறகு மனிஷ் மல்ஹோத்ரா வந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த நிகோலஸ் லஃபார்டி என்ற டாக்டருடன் இணைத்துப் பேசப்பட்டார். இப்போதும்கூட சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் காதலில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து கங்கனா சொல்வது என்ன?  

‘நான் சதி சாவித்திரிபோல இருக்கவேண்டும் என எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், நான் அப்படிப்பட்டவள் அல்ல. நான் இன்றைய பெண்களில் ஒருத்தி. இந்தியர்களுக்கு, பழைமையான, அழக்கூடிய, எந்நேரமும் மற்றவர்களுடைய பச்சாதாபத்தை எதிர்பார்க்கிற நடிகைகளைத்தான்  பிடிக்கும். நான் அப்படிப்பட்டவள் அல்ல. என் வாழ்க்கையில் நடக்கிற எல்லா விஷயங்களுக்கும் நானே பொறுப்பு' என்கிறார் தடாலடியாக.
‘குயின்’ படத்துக்காக அவருக்கு வெவ்வேறு தொலைக்காட்சிகள் விருதுகளை அறிவித்தன. ஆனால், எதிலும் கங்கனா கலந்துகொள்ளவில்லை. ‘இந்த விருதுகள் முழுக்கப் போலியானவை. இந்த விருதுகளால் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு டி.ஆர்.பி கிடைக்கிறது என்பதைத் தாண்டி ஏதாவது பிரயோஜனம் உண்டா... என்றைக்காவது உண்மையான கலைஞர்கள் இந்த விழாக்களில் கௌரவிக்கப் பட்டது உண்டா?' - இதுதான் கங்கனாவின் நிலைப்பாடு. 

எதையுமே ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிற இயல்பு கங்கனாவிடம் உண்டு. யோகா கற்றுக்கொண்டதும், அதைத் தொடர்ந்து தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டதும் அப்படித்தான். மாடலிங்கில் வாய்ப்புத் தேடி அலைந்த நாட்களில் முறையாக இசை கற்றுக்கொண்டார். சென்ற ஆண்டு அமெரிக்கா சென்று திரைக்கதை எழுதுவது குறித்த கோர்ஸ் ஒன்றை முடித்திருக்கிறார். தன் ஊரான இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு நிலத்தை வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். 

கங்கனா தொடர்ந்து கற்கிறார். கற்பதை அவர் நிறுத்தவே இல்லை. அதனால்தான் எந்நேரமும் கும்பிடு போட்டு, பிழைப்பு நடத்துகிற ஒரு துறையில் அவர் தனித்துவம் மிக்கவராக இருக்கிறார். அதனால்தான் அவர் சமூகம் நிர்பந்திக்கிற ஸ்டீரியோடைப் விஷயங்களை உடைக்கிறார். ஒரு சிறிய கிராமத்தில் இருந்து கிளம்பிவந்து, அத்தனை பெரிய பாலிவுட்டில் எந்தவிதத் துணையும் இல்லாமலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர்கள் மத்தியில் விதைக்கிறார்

ஆப்பிள் போனும் அமெரிக்க போலீஸும்!

 
டந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் சான் பெர்னார்டினோ நகரில் சையத் ரிஸ்வான் ஃபரூக் என்பவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர். ஃபரூக்கும் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து ஆப்பிள் 5C மாடல் மொபைல் ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். 

லாக் செய்யப்பட்டிருந்த அந்த மொபைலைத் திறந்தால் சில க்ளூக்கள் கிடைக்கும் என எஃப்.பி.ஐ நினைத்தது. அதற்காக ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்புகொண்டது. ஆப்பிளோ, `என் பயனரின் தகவலை என்னால்கூட எடுக்க முடியாது. அந்த அளவுக்கு ஆப்பிள் மொபைல்கள் பாதுகாப்பானவை' எனக் கைவிரித்துவிட்டது. இது போலீஸின் கோரிக்கை என அமெரிக்க போலீஸ் குரல் உயர்த்தியபோதும், `பேங்க்லயே காசு இல்லையாம்' என்பது போல, `என்னாலேயே எடுக்க முடியாது பாஸ். வேணும்னா கோர்ட்டுக்குப் போங்க' என்றது ஆப்பிள்.
 
பல மொபைல் கில்லாடிகளிடம் அன்லாக் செய்துதரும்படி கேட்டது எஃப்.பி.ஐ. எந்த ‘அண்டாகா கசம், அபூ கா ஹுக்குமும்' வேலைக்கு ஆகவில்லை. வேறு வழியின்றி எஃப்.பி.ஐ., கோர்ட்டுக்குப் போனது. `அன்லாக் செய்ய வழி இல்லை என்பது ஓ.கே. அதற்குப் பதிலாக, சையத் ஃபரூக்கின் அந்த ஒரு மொபைலுக்காக பிரத்யேகமாக ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் எழுதிக்கொடுங்கள்' என்று தன் வாதத்தில் கேட்டுக்கொண்டது எஃப்.பி.ஐ. அதற்கு ஆப்பிள் ஒரு கதை சொன்னது. 

`பொதுவாக லிஃப்ட்டுகள் அனைத்திலும் மாஸ்டர் கீ போடும் வழி ஒன்று இருக்கும். அவசரக் காலங்களில் அந்த மாஸ்டர் கீயைப் பயன்படுத்தி, லிஃப்ட் எங்கே நிற்க வேண்டும் என்பதை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். எல்லா லிஃப்ட் உற்பத்தியாளர்களும் அந்த மாஸ்டர் கீ செய்து, தீயணைப்புத் துறைக்கு தர வேண்டும். இப்போது, அந்த மாஸ்டர் கீ, சில ஆயிரங்கள் கொடுத்தால் எளிதாக மார்க்கெட்டில் கிடைக்கிறது. அந்த கீ இருக்கும் யாரும் ஒரு லிஃப்ட்டின் செயல்பாட்டை மாற்றி அமைக்க முடியும். அதுபோல என் கதையும் ஆகிவிடும். எனவே, தனி ஆபரேட்டிங் சிஸ்டம் எழுதித் தருவது சாத்தியம் இல்லை’ என்றது ஆப்பிள். `இன்று அமெரிக்க அரசு கேட்கிறது என நான் மாற்றுவழி செய்துகொடுத்தால், நாளை எல்லா நாடுகளும் என் காலரைப் பிடிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?' என்பது ஆப்பிள் லாஜிக்.
இதற்கு இடையில், `கடல்லயே இல்லையாம்ப்பா' என்பதுபோல, `எஃப்.பி.ஐ-யாலேயே ஆப்பிள் பாதுகாப்பு வளையத்தைத் தாண்ட முடிய வில்லையாம். இனி, நம் ஏடாகூடா செல்ஃபிக்களை ஆப்பிள் மொபைலில் பயம் இல்லாமல் வைத்துக்கொள்ளலாம்' என எல்லோரும் பேச ஆரம்பிக்க, ஆப்பிளின் பிராண்ட் வேல்யூ, கெயில் சிக்ஸர் தாண்டி எகிறியது. `இந்தப் பிரச்னையைத் தனது மார்க்கெட்டிங்குக் காகப் பயன்படுத்திக்கொள்கிறது ஆப்பிள்' என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

ஆப்பிளின் செக்யூரிட்டி சுவாரஸ்ய மானது. ஆப்பிள் 5S மாடலில் இருந்துதான் கைரேகை மூலம் மொபைலைத் திறக்கும் வசதி வந்தது. மற்ற Finger print sensor-க்கும் இதற்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. தமிழ் சினிமாவில் வருவதுபோல சோப்பில் கைரேகையை டூப்ளிகேட் செய்தெல்லாம் திறக்க முடியாது. அந்த ரேகைக்கு கீழ் ரத்தம் ஓடுகிறதா என்பது வரை துல்லியமாக டெஸ்ட் செய்கிறது ஆப்பிள் போன். சையத் ஃபரூக்கின் மொபைல் 5C மாடல். அதில் Finger print sensor கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 

மொபைல் செக்யூரிட்டியில் `என்க்ரிப்ஷன் (Encryption)’ என ஒன்றிருக்கிறது. அதாவது நமது மொபைலில் இருக்கும் டேட்டாவை, ஒரு சீக்ரெட் கீ போட்டுப் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். அந்த கீ தெரிந்தால்தான், அந்தத் தகவலைப் படிக்க முடியும். அப்படி, நம் மொபைலில் இருந்து அனுப்பும் தகவல்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருந்தால், நமது டேட்டா பாதுகாப்பானது என அர்த்தம். ஆப்பிள் வழங்கிய iMessages வசதிதான் முதன் முதலாக 100 சதவிகிதம் என்க்ரிப்ட் செய்யப்பட்டது. அதாவது, நமது மொபைலில் இருந்து இன்னொரு ஆப்பிள் மொபைலுக்கு அனுப்பப்படும் மெசேஜை, ஆப்பிள் நிறுவனமே நினைத்தாலும் படிக்க முடியாது.
 
பிளாக்பெர்ரி நிறுவனம் முதலில் என்க்ரிப்டட் மெசெஜ் (BBM) சேவையைக் கொண்டுவந்தபோது, தீவிரவாதிகள் அதைப் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. அதனால், பல நாடுகளில் தங்கள் நாட்டில் சர்வரைவைத்து மெசேஜைக் கண்காணித்தால் மட்டுமே பிளாக்பெர்ரிக்கு அனுமதி என்றது. அதை பிளாக்பெரியும் ஏற்று எல்லா நாடுகளிலும் சர்வரை அமைத்தது. ஐ-மெசேஜில் அப்படி முடியாது. ஆப்பிளே நினைத்தாலும் பயனர்களின் தகவலை எடுக்க முடியாது.

ஆப்பிள் Vs. எஃப்.பி.ஐ சண்டையின் இறுதிச் சுற்றில், `நாங்களே மொபைல் லாக்கைத் திறந்துட்டோம்' என அறிவித்திருக்கிறது எஃப்.பி.ஐ. வழக்கையும் வாபஸ் வாங்கிவிட்டது. `எப்படித் திறந்தீர்கள்?' என ஆப்பிள் கேட்டால், `நான் கேட்டா சொல்ல மாட்ட. நீ கேட்டா நான் ஏன் சொல்லணும்?’ என எஃப்.பி.ஐ சொன்னாலும் சொல்லலாம் என்பதால், ஆப்பிள் செய்வதறியாது முழிக்கிறது. உடனே ஐபோன் பார்ட்டிகள், `இதையும் ஹேக் செய்யலாமா?' என குழம்பி, ஏடாகூட செல்ஃபிகளை அழிக்க ஆரம்பித்து உள்ளனர். நெட்டிலும் இதுபற்றி சூடான விவாதம்  நடக்கிறது. எஃப்.பி.ஐ எப்படித் திறந்திருப்பார்கள் என நூற்றுக்கணக்கான எக்ஸ்பர்ட்ஸ் தங்கள் வலைதளங்களில் எழுதித் தீர்க்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் அவை அனைத்தும் யூகங்களாகவே இருக்கின்றன. இன்னொரு பக்கம், `அதெல்லாம் திறக்கவே இல்லைப்பா. எஃப்.பி.ஐ அடிச்சுவிடுறான்’ என ஆப்பிள் பாய்ஸ் பதிலடி தருகிறார்கள். 

இன்னும் விடாமல் தொடர்கிறது ஆப்பிள் சர்ச்சை

Thursday, April 7, 2016

உங்கள் சம்பளத்தின் ஒவ்வொரு ரூபாயிலும் அரசியல் இருக்கிறது தமிழ் சினிமா கலைஞர்களே!

“உனக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...?” - இது நம் அனைவருக்கும் பிடித்தமான வசனம். இதை வெறும் நகைச்சுவை வசனமாக மட்டும் கடந்து சென்றுவிட முடியாது. நம் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் விஷயங்களில் இதைப் பொருத்தி பார்த்துக் கொள்ள முடியும் என்பதுதான் இதன் தனிச் சிறப்பு. இப்போது இந்த வசனம் மிகச் சரியாக நடிகர் சங்கத்துக்கு பொருந்துகிறது. ஆம். சாமானியனின் வாழ்வாதார பிரச்னைகளை துச்சமாக மதித்த, மதிக்கின்ற நடிகர்கள்,  அவர்களுக்கொரு பிரச்னை என்றவுடன் கொந்தளிக்கிறார்கள். 

கலைஞனுக்கு அரசியல் வேண்டாமா...?
இங்கு அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. நான் அரசியல் என்று குறிப்பிடுவது கட்சி அரசியலையோ, தேர்தல் அரசியலையோ இல்லை. நீங்கள் தினமும் காலையில் விழித்து பல் துலக்க துவங்குவதிலிருந்தே, உங்களுக்கும் அரசியலுக்குமான தொடர்பு துவங்கி விடுகிறது.  வேப்பங் குச்சியை பிடுங்கிவிட்டு, நம் கைகளில் பற்பசையை திணித்ததில் ஒரு வணிக அரசியல் இருக்கிறது.கேப்ப்க் களி மறைந்து நம் உணவு தட்டை நூடுல்ஸ் ஆக்கிரமித்து பின் இப்போது நவ தானியங்கள் உடலுக்கு மிக நல்லது என்று சொல்வதில் ஒரு உணவரசியல் இருக்கிறது. நாம் உடுத்தும் உடை எத்தனை நீர் நிலைகளை அழித்தது என்பதில் சூழலியல் அரசியலும், பெரு நிறுவனங்களின் அரசியலும் ஒளிந்து இருக்கிறது. ஆகையால், இங்கு அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை உயர்திரு திரைக் கலைஞர்களே. 

ஆனால், நீங்கள் இது எதையும் கணக்கில் கொள்ளாமல், “காவிரி பிரச்னை உள்ளிட்ட விஷயங்களில் அரசாங்கம்தான் செயல்பட வேண்டும். அரசியல் விவகாரங்களில் கண்டிப்பாக நாங்கள் பங்கேற்க மாட்டோம்...” என்கிறீர்கள். அதாவது, திரை கலைஞனுக்கும், சாமானியனுக்கும் உள்ள தொடர்பு அந்த மூன்று மணி நேர சினிமா என்பது மட்டும்தான் என்பது உங்கள் வாதம். சரி. ஒரு பேச்சுக்கு உங்கள் வாதம் சரி என்று வைத்துக் கொண்டால் கூட, பின் இப்போது ஏன் நட்சத்திர கிரிக்கெட் விளையாடி, டிக்கெட் விற்பனை, விளம்பர வருமானம் என மக்கள் பணத்தில் நடிகர் சங்கக் கட்டடத்தைக் கட்ட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்...? உங்கள் அடிப்படை தேவைக்காகக் கூட ஒரு சாமானியனின் பாக்கெட்டில்தான் கை விடுவீர்கள் என்பது எவ்வகை நியாயம். 

பாலனுக்கு உதவுவது மட்டுமில்லை அரசியல்:
உங்களை தட்டையாக விமர்சித்துவிடவும் முடியாது. மழை வெள்ளத்தின் போது மக்களுக்காக உங்கள் கரம் நீண்டது உண்மைதான். தஞ்சை விவசாயி பாலனுக்கு விஷால் உட்பட உங்களில் சிலர் பண உதவி செய்தீர்கள். மகிழ்ச்சிதான். ஆனால், இதை நீங்கள் கணக்கு காட்டி தப்பித்துவிட முடியாது.  இது போன்ற மனிதாபிமான உதவிகள் வரவேற்கதக்கதுதான் என்றாலும், இது ஒருபோதும் போதுமானதாக இருக்கப் போவதில்லை. விவசாயி பாலன்களின் சிறு கடனுக்கு பின்னாலும், விஜய் மல்லையாக்களின் பெரும் வாரா கடன்களுக்குப் பின்னாலும், ஒரு மிகப் பெரிய அரசியல் இருக்கிறது. ஒரு வேளை நீங்கள் அதைக் கண்டித்து அழுத்தமான கருத்துக்களைத் தெரிவித்து இருந்தீர்களானால், நீங்கள் நிச்சயம் நிஜ கதாநாயகனாக உயர்ந்து இருப்பீர்கள். ஆனால், நீர் வளத்தைச் சுரண்டும் குளிர்பான விளம்பரங்களில் நடித்துக் கொண்டே, பாலனுக்காக  கண்ணீர் வடிப்பதை எந்த கணக்கில் சேர்ப்பது?   

’எங்களுக்குத்தான் அரசியல் வேண்டாம் என்கிறோமே... நாங்கள் சாதாரண கலைஞர்கள்.ஏன் எங்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்...?’ என்பது உங்கள் வாதமாக இருக்குமாயின், அதை எங்களால் ஒருபோதும் நிச்சயம் எற்றுக்கொள்ள முடியாது. உங்களை பற்றி நீங்களேதான் ஒரு பிம்பத்தை கட்டமைத்தீர்கள்; அதை சாமானிய ரசிகனை நம்ப வைத்தீர்கள். நீங்கள் ரசிக மன்றங்களை ஊக்குவித்தீர்கள். உங்கள் திரைப்பட விளம்பர பதாகைகளில் பால் அபிஷேகம் செய்யும் போது ரசித்தீர்கள். சொல்லப்போனால் அந்த சாமானிய வெள்ளந்தி ரசிகன், உங்கள் ஒவ்வொரு பிரச்னையிலும் துணை நின்றிருக்கிறான். உங்களைத் தவறாக பேசியவர்களைக் கொலை கூட செய்திருக்கிறான். இதையெல்லாம் தடுத்து, உங்கள் ரசிக மன்றங்களை கலைத்து, நான் வெறும் சினிமா கலைஞன் மட்டும்தான், ’எனக்கு வேறு எந்த சமூக பிரக்ஞையும் இல்லை’ என்று சொல்லி இருப்பீர்களாயின், அவன் உங்களிடம் எதையும் எதிர்பார்க்கப் போவதில்லை. ஆனால், நீங்கள் அதையெல்லாம் செய்யாமல், மீண்டும் உங்களுக்கொரு பிரச்னை என்றவுடன், அவனைப் பயன்படுத்திக் கொள்ள, அல்லது அவனை மேலும் சுரண்ட நினைப்பது எவ்வகை நியாயம் என்று நீங்களே உங்கள்  ரசிகர்களுக்கு விளக்குங்கள்! 

அண்டை மாநிலங்களிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்:
அண்டை மாநிலங்களில், எந்த சமூகப் பிரச்னை என்றாலும், அங்கு முதலில் ஒலிப்பது கலைஞர்களின் குரலாகத்தான் இருக்கும். குறிப்பாக மலையாள சினிமா கலைஞர்கள். அவர்கள் சினிமாவில் மட்டும் சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில்லை. அவர்கள் சினிமாவிற்கு வெளியேயும் சமூகப் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்கள். அவர்கள் மக்களுடன் மக்களாக இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் மக்களின் பிரச்னைகளை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அதை சினிமாவிலும் பிரதிபலிக்க முடிகிறது. அங்கு ஒரு நிகழ்வில் அமைச்சர் கலந்து கொள்கிறார். அவர் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர். குத்து விளக்கு ஏற்றுவது தம் மதத்துக்கு எதிரானது என்று குத்துவிளக்கு ஏற்ற மறுக்கிறார். ஆனால், அதை அந்த மேடையிலேயே நடிகர் மம்முட்டி கண்டிக்கிறார். இந்த அளவிற்கு அவர்களால் தைரியமாக செயல் படமுடிகிறது. அவர்கள் அட்டைக்கத்திகளாக இருப்பதில்லை.  

மலையாள திரை உலகம் மட்டுமில்லை, அதிகம் வளர்ச்சி அடையாத கன்னட திரை உலகத்தினரும்  சமூக பிரச்னைகளுக்கு அழுத்தமாக குரல் கொடுத்து வருகிறார்கள். (அதற்காக இனவெறி, மொழி வெறி போராட்டங்களை இங்கு நியாயப்படுத்தவில்லை!) ஆனால், நீங்கள் உங்களை நீங்களே தேவ தூதர்களாக கருதி, மக்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டீர்கள். அதனால்தான் சென்னையில் நடந்த ஹிதேந்திரன் கதையை டிராஃபிக்காவும், மதுரை நாராயண கிருஷ்ணன் கதையை உஸ்தாத் ஓட்டாலாகவும் மலையாள கலைஞர்கள் முந்திக் கொண்டு எடுக்கிறார்கள்.  

திருட்டு டிவிடியும், சினிமா டிக்கெட்டும்:
திருட்டி டிவிடிகளுக்கு எதிராகப் பொங்கும் கலைஞர்களே... உங்களின் கோபத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இங்கு கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்ட பின்பும், சினிமா டிக்கெட் விலை குறையாமல் இருக்கிறதே, அதற்காக எப்போது பொங்கப் போகிறீர்கள்...? கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டால், நியாயமாக டிக்கெட் விலை குறைய வேண்டும். ஆனால், இங்கு எல்லா படங்களுக்கும் ஒரே விலைதான். கேளிக்கை வரி ரத்து செய்யப்படாத பாபநாசம் படத்திற்கும் 120 ரூபாய் டிக்கெட் தான், கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்ட காக்கா முட்டைக்கும் அதே 120 தான்.
 படப்பிடிப்புக்குச் செல்லும் இடமெல்லாம், திருட்டு டிவிடிக்கு எதிராக காவல் துறையில் புகார் அளிக்கும் விஷால் அவர்களுக்கு, சென்னை திரையரங்கங்கள் அடிக்கும் கொள்ளை பற்றி தெரியாதா... இல்லை அவர் திரையரங்கத்திற்குச் செல்லாமல், திருட்டு டிவிடியில்தான் படம் பார்க்கிறாரா...? உங்கள் ரசிகன் இதனால் நேரடியாகப் பாதிக்கப்படுகிறான். உங்களுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. ஆனால், உங்களுக்கொரு பிரச்னை என்றவுடன், அவன் பாக்கெட்டிலேயே தஞ்சமடைவது என்ன நியாயம்...?

முதலில் கொஞ்சம் இறங்கி வாருங்கள். மக்களோடு மக்களாக இருங்கள். அவர்களின் பிர்ச்னைகளை புரிந்து கொள்ளுங்கள். அதை தீர்க்க வழிகள் இருக்கிறதா என்று பாருங்கள். முடியவில்லையா, காந்தி, “Exhibit the Injustice" என்பார். அதாவது தமக்கு நேரும் அநீதியை பொது வெளிக்கு எடுத்துச் செல்வது. அது உங்களால் இயலும். மக்களுக்கு நடக்கும் அநீதிகளை எந்த சமரசமும் இல்லாமல் பேசுங்கள். பின்பு வாருங்கள், நீங்கள் கஷ்டப்பட்டு கிரிக்கெட் ஆட வேண்டும் என்று இல்லை. மக்கள் நீங்கள் கேட்காமலேயே பணத்தை வாரிக் கொடுப்பார்கள். 

 உங்கள் ரசிகனாக இருக்கிறான் என்கிற ஒரே காரணத்திற்காக, அவனை மேலும், மேலும் சுரண்டாதீர்கள். இது நீங்கள், உங்கள் ரசிகனுக்கு செய்யும் பச்சைத் துரோகம்

Friday, April 1, 2016

வயிறும் மனசும் நிறைஞ்சாச்சு!

ந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றாலும் சோற்றுக்குத் தொட்டுக்க என்ன என்று கேட்பதுதான் வழக்கம். ஆனால் இலை முழுவதும் விதவிதமாய் மட்டன், சிக்கன் என்று அடுக்கி, சோற்றை தொட்டுக்கொள்ள வைத்தால்..இப்படி ஒரு ஹோட்டல் ஈரோட்டில் இருக்கிற விபரம் அறிந்து சென்றோம்.
 
ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலிருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சீனபுரம் என்ற கிராமம். அங்கு சென்று யு.பி.எம் ஹோட்டல் எனக் கேட்டாலே ‘இப்படியே நடந்து போனீங்கனா வகை வகையா காருக நிற்கும். அதுதான் யு.பி.எம்.’ என்கிறார்கள். அவர்கள் சொன்னபடியே கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஆனாலும் சிறிய கீற்று வேய்ந்த வீட்டில்தான் அந்த உணவகம் இயங்குகிறது. உள்ளே நுழைந்ததுமே சந்தனம், குங்குமம் வைத்து தம்பதி சமேதராய் நம்மை வரவேற்கிறார்கள். முதலாளியின் பெயர் கருணைவேல். அட!

அதன் பிறகு நம்மை அமர வைத்து, இரண்டரை அடி நீளத்துக்கு தலைவாழை இலை போடுகிறார்கள். அதில் வைக்கப்படும் உணவு வகைகளைப் பார்த்தாலே பசி தீர்ந்துவிடும் போலிருக்கிறது. இப்படி ஓர் அசைவ விருந்தை இதற்கு முன்பு கேள்விப்பட்டதுகூட இல்லை என்ற அளவுக்கு இருக்கிறது.
இலையில் முதலில் உப்பு வைக்கிறார். தொடர்ந்து அவருடைய மனைவி சொர்ணலட்சுமி இரத்தப்பொரியலை வைக்கிறார். வைக்கும்போதே அடுத்து சாதத்தை வைக்கிறார். அடுத்து அவர் வைக்கும் வகைகள் சாப்பிடவந்த அனைவரையுமே மலைக்க வைக்கும் ரகங்கள். உப்பு, இரத்தப்பொரியல், குடல் கறி, தலைக்கறி, ஈரல், கொத்துக்கறி, மட்டன், நல்லி எலும்பு, கால் பாயா, சிக்கன், பெப்பர் சிக்கன், சிக்கன் குழம்பு, நாட்டுக்கோழி, வான்கோழி, புறாக்கறி, காடை, மீன், லெக்பீஸ், பிரியாணி, முட்டை, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, உப்புமீன் - இவைதான் அந்த வெரைட்டி விருந்து!

இந்த உணவு வகைகளைப் பார்த்ததுமே சிலர் போதும் வேண்டாம் என்கிறார்கள். அதற்கு கருணைவேலுவின் பதில் ‘அஞ்சு நிமிசம் சாப்பிடுங்க, முடியாதபட்சத்துல அடுத்து பத்து நிமிசம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அப்புறம் அஞ்சு நிமிசம் சாப்புடுங்க’ என்கிறார். வேலை ஆட்கள் யாருமே உள்ளே இல்லை. சமைப்பது முதல் பரிமாறுவது வரை கருணைவேலும் அவரது மனைவியும்தான். 60 வயதைத் தொட்டாலும் இளைஞராய் சுறுசுறுவென வேலை செய்கிறார். எந்த இலையில் எது குறைந்தாலும் மீண்டும் வைக்கிறார்கள். இவ்வளவையும் பரிமாறி முடித்தபின் சாப்பிட வந்தவர்கள் கொடுக்கும் பணத்தை எண்ணிப்பார்க்காமல் சட்டைப்பைக்குள் வைத்துக்கொள்கிறார். அந்த உணவகத்தில் கல்லாப்பெட்டியே கிடையாது. அதையும் மீறி எவ்வளவு பில் எனக்கேட்டால் ‘நமக்குள்ள என்ன கண்ணு... நீ குடுக்குறத குடு கண்ணு’ என உரிமையோடு சொல்கிறார்.
இந்த உணவகத்துக்கு இயக்குநர் சந்தானபாரதி தொடங்கி, இயக்குநர் பாண்டியராஜன் குடும்பத்தினர், நடிகர் பிரபு குடும்பத்தினர், மயில்சாமி எனப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இன்னும் இந்தப் பகுதியில் எங்காவது படப்பிடிப்பு என்றால் இங்குதான் சாப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கு சினிமாத் துறையினர் மத்தியில் இந்த உணவகம் பிரசித்தி பெற்றிருக்கிறது. இங்கு சாப்பிட வேண்டும் என்றால் காலை 11 மணிக்கு போன் செய்து புக் செய்ய வேண்டுமாம்.

‘‘எனக்கு 60 வயசாயிருச்சி. இங்க வர்ற எல்லாரையுமே என்னோட சொந்தக்காரங்களாத்தான் பார்க்கிறேன். சமைக்கிறதுல இருந்து பரிமாறுவது வரைக்கும் நாங்களே பார்க்கிறதால காலையில எழுந்து இன்னைக்கு எத்தனைப் பேருக்கு நம்மால சாப்பாடு கொடுக்க முடியும்னு முடிவு பண்ணிருவோம். அதுக்குப் பிறகு புக் பண்றவங்களை வெச்சி முடிவு பண்றோம். யாருக்கும் ஒரு ஹோட்டல்ல சாப்பிடுறோம்ங்கிற மனநிலை வந்துடக் கூடாதுங்கிறதுல கவனமா இருக்கிறோம். அதனால அவங்க கொடுக்கிற பணத்தை எண்ணிக்கூட பார்க்கிறதில்லை. எனக்குக் காசு பணம் முக்கியமில்லை. எங்க பிரதான நோக்கமே இங்கே வர்றவங்க எந்த விதத்துலேயும் சந்தோஷக் குறைவா போயிடக் கூடாது. அதனாலதான் வேலைக்கு ஆட்களே வெச்சிக்காம நாங்க ரெண்டு பேருமே இந்த வேலையை விரும்பிப் பார்க்குறோம்’’ என்கிறார் கருணைவேல்.
அவரது மனைவி சொர்ணலெட்சுமி ‘‘நாங்க இங்க வர்றவங்க முகத்தைப் பார்க்கிறதில்லை. மனசை மட்டும்தான் பார்க்கிறோம். அதனாலதான் இன்னைக்கு வரைக்கும் எங்களால இதை நடத்த முடிஞ்சுருக்கு’’ என்றார். ‘‘உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்களேன்’’ என்றதும் கண் கலங்கிவிட்டனர். பிறகுதான் தெரிந்தது. அவரது மகன் இறந்துவிட்டார் என்பது. அதுமுதலே இங்குவரும் அனைத்து இளைஞர்களையும் தனது மகனாய் நினைத்தே இருவருமே உபசரிக்கிறார்கள். ஒரே மகளையும் தனது வீட்டோடு வைத்திருக்கிறார்கள்.

இவ்வளவு பேருக்கும் அசைவ விருந்து கொடுத்து அசத்தும் இந்தத் தம்பதிகள் அசைவத்தைத் தொட்டுக்கூட பார்ப்பதில்லை என்பதுதான் இதில் ஹை லைட்