காலம் ரொம்ப மாறிப்போச்சு.
ஆமாம் ப்ரோ... முன்னாடி எல்லாம் 45 வயசைத் தாண்டினவங்கதான் அட்வைஸ் பண்ணினாங்க. இப்ப அட்வைஸ் பண்றவங்களோட ஆவரேஜ் வயசு ரொம்பக் குறைஞ்சிடுச்சு. எதிர்ல 20 வயசுப் பையனைப் பார்த்துட்டா போதும், 30 வயசு ஆள்கூட `ஏன்டா எந்நேரமும் செல்போனை நோண்டிக்கிட்டு இருக்கே... உருப்படியா ஏதாவது பண்ணுடா’னு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிடுறார்.
ஆனா, இந்தக் காலத்து இளைஞர்களான நாங்க எவ்ளோ யோசிக்கிறோம் தெரியுமா? மூளை எந்நேரமும் புராசஸிங் மோட்லதான் இருக்கு... அப்படி என்ன யோசிப்போம்? மீம்ஸ் போடத்தான். ஆமா... இப்போ நாங்கதான் ட்ரெண்ட் செட்டர்ஸ். நாங்க ட்ரெண்ட் பண்றதைத்தான் அகில உலக மீடியா முதல் அத்தனை செலிபிரிட்டிகளும் ஃபாலோ செய்கிறார்கள். இந்த நேரத்துல ஒரு கவிதையை நிச்சயமா சொல்லியே ஆகணும் `ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் நாங்கள் மூழ்கும் பெர்முடா முக்கோணங்கள்’னு கவிதையைக்கூட நாங்க சோஷியல் மீடியாவை மனசுலவெச்சுத்தான் யோசிப்போம்.
உருப்படியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காகவே எதுவும் செய்யாமல் இருக்கும் கிரியேட்டர்கள்தான், இன்றைய சோஷியல் நெட்வொர்க்கின் என்டர்டெய்னர்ஸ். `வருமானத்துக்கு வழி பார்க்கிறீங்களா, இல்லையா தம்பி?’ எனக் கேட்டால் `வாய்ப்பு வரட்டும்னு காத்திருக்கோம்'னு மீம்ஸாகவே பதில் சொல்வார்கள்.
வாட்ஸ்அப் ஸ்மைலிகளைப் பயன்படுத்துறதே இல்லை. கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம்னு ஒன்லி இவங்க ஃபேஸ் ரியாக்ஷன்ஸ்தான். பேசாம இந்த வாட்ஸ்அப் கம்பெனி ஸ்மைலிகளை எடுத்துட்டு, வடிவேலு எக்ஸ்பிரஷன்ஸையே வெச்சுக்கலாம்.
வாட்ஸ்அப் காலேஜ் குரூப் இன்னும் களைகட்டும். நைட்டு சாப்பிடுட்டு 9 மணிபோல என்ட்ரி ஆனோம்னா அதிகாலை 3 மணி வரை டைம்பாஸ் ஆகிரும். மொத்த கிளாஸ்ரூமுக்கும் ஒரு குரூப், பொண்ணுங்க மட்டும் ஒரு குரூப், பசங்க மட்டும் ஒரு குரூப், க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஒரு குரூப்னு பல குரூப்கள். மீம்ஸ்களைப் பகிர்ந்து, புன்னகை பூக்கச்செய்வது எல்லாம் தெய்வ லெவல்தானே!
அம்மா, வீட்டில் என்ன சாப்பிட்டாள் எனத் தெரியாது. ஆனால், அமெரிக்கத் தோழி சிற்றுண்டி சாப்பிட பீட்சா கடையில் இப்போது க்யூவில் நிற்கிறாள் என்பது வரை தெரியும்.
`இன்ஸ்டாகிராம்'னு ஓர் அமைதிப் பூங்கா இருக்கு. தல-தளபதி சண்டை இன்னும் வராத சமூக வலைதளம் இதுவாகத்தான் இருக்கும். காலையில பீச்சுக்கு வாக்கிங் போறவங்களைவிட, சூரியன் உதிக் கிறதை போட்டோ எடுக்க வர்றவங்கதான் அதிகம். சூரியன் என்ன பாவம் பண்ணிச்சோ... அதை மறைய விடுறதே இல்லை. ஒரு செடி, கொடி, பூ, மலை, மரம்னு இயற்கையைக் கொஞ்சிக்குலாவும் அந்த இன்ஸ்டாகிராம்ல அக்கவுன்ட் வெச்சிருந்தாலே போதும், நாம எல்லாம் `மயக்கம் என்ன' தனுஷ் மாதிரி பெருமையா உணர ஆரம்பிச்சுருவோம். பூனை, நாய், கோழி, ஆடுனு போட்டோ எடுத்து `பட்டி, டிங்க்கரிங்' பண்ணி போஸ்ட் பண்ணாத்தான் `Wild life போட்டோகிராஃபி' எடுத்தாப்ல இருக்கும்.
DSLR கேமரா வைத்திருப்பவன்தான் நண்பர்கள் கூட்டத்தின் ஹீரோ. அவனைக் கூட்டிட்டுப்போயி வீக் எண்ட்ல ஃபேஸ்புக் புரொஃபைல் பிக்சருக்காக போட்டோ செஷன் நடத்துறது இளசுகள் மத்தியில் பெரிய கிரேஸ். முன்னாடி எல்லாம் பொழுது போக்குக்காக பார்க், பீச்சுனு போவோம். இப்போ போட்டோ எடுக்கிறதுக்குன்னே போறோம். அதுவும் இந்த DSLR கேமரா வாங்கினதுக்காகவே, காடுகள், மலை, செடி, கொடிகள்னு டோரா-புஜ்ஜியைவிடவும் அதிக முறை பயணம் செய்திருக்கிறான் நண்பன் ஒருவன்.
வீக் எண்ட்ல படம் புக் பண்ணலாம், என்ஜாய் பண்ணலாம்னு வாட்ஸ்அப் குரூப்ல டிஸ்கஷன் நடத்தி, முடிவுக்கு வர்றதுக்குள்ள வீக் எண்ட் முடிஞ்சுருது. என்ன டிரெஸ் போடலாம்கிறதைவிட, எந்த போட்டோவை டி.பி-யா வைக்கலாம்னு யோசிக்கிறதே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. இப்பல்லாம் `ஒரு தடவை வெச்ச டி.பி-யைத் திரும்பவைக்கிறது இல்லை’னு துபாய் ரிட்டர்ன் வடிவேலுவைவிடவும் அதிகம் சீன் போடுறாங்க.
தூரத்தில் இருக்கிறவரை பக்கத்துல இழுத்து, பக்கத்துல இருக்கிறவரை தூரத்துக்குத் தள்ளிவிடுற இந்த சோஷியல் மீடியா போதை, மது போதையைவிட அதிகம் அடிமைப் படுத்திடுது. மொபைலைப் பார்த்துக்கிட்டே நடந்து வர்ற பெண்ணைப் பார்த்து என்கிட்ட திட்டுற அம்மாகிட்ட, `அவ கூகுள் மேப் பார்த்துக்கிட்டே வர்றா’னு சப்போர்ட் செய்றேன்.
சொந்த ஊருக்குப் போனா `எப்ப வந்த?' எனக் கேட்கும் முகங்கள், இப்பல்லாம் கண்டுக்கிறதே இல்லை. வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடியே, அங்கே இருக்கிறவங்களுக்கு வாட்ஸ்அப் நியூஸ் போயிருது. ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்குப் போனாலும், இப்போ எப்படி இருப்பான்னு கற்பனை பண்ண வாய்ப்பே கிடைக்கிறது இல்லை. நேத்து எப்படி இருந்தாங்கங்கிறது வரை தெரிஞ்சுருது. விருந்தினரோட செல்ஃபி எடுத்துக்கிட்டு ஃபேஸ்புக்குல போடுறதும் விருந்தோம்பல் பண்புகள்ல இப்போ இணைஞ்சிடுச்சு.
என் வயசுல அப்பா எவ்வளவு வேலை செஞ்சாரோ அதுல பத்துல ஒரு பங்கு செஞ்சுட்டு ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பக்கங்களை ரெஃப்ரெஷ் செஞ்சுக்கிட்டிருக்கேன். பொது அறிவோட, பொதுவா அறிவும் சேர்ந்து வளருது. `வெட்டியாவா டைம்பாஸ் பண்ற... ஏதோ கத்துக்கிறேல்ல?’ என சமாதானம் செய்யுது ஒரு மனசு. `சுட்டது எருமை, அதுல என்ன பெருமை?' என சந்தானம் கமென்ட்டடிக்கிறார் இன்னொரு மைண்ட் வாய்ஸில். எத்தனை நாளைக்கு இந்த மோகம், போதை இதெல்லாம்னு யோசிச்சா, `கண்ணா... எல்லாம் கொஞ்ச காலம்தான்'னு செல்ஃப் மோட்டிவேஷன் செஞ்சுக்கிறேன். இப்போதைக்கு என் கவலை எல்லாம் வாட்ஸ்அப் எமோஜிகளை மாதிரி முகபாவனை செஞ்சுக்கிட்டே பேசிடுவேனோங்கிறதுதான்.
`3ஜி அத்தியாவசியம்... 4ஜி ஆடம்பரம்’னு `கத்தி’ விஜய் மாதிரி வீர வசனம் வேற பேசிக்கிறோம். அதுலயும் பாருங்க, இந்த நெட்பேக் போடாத காலத்துல, `ஓர் ஆதிவாசியைப்போல உணருகிறேன்’கிறான் பொறியியல் படிக்கும் நண்பன் ஒருத்தன். `தனிமையின் இனிமையை இணையத்துல காண்போம்’கிறான் இன்னொரு நண்பன். `தனிமையை அனுபவிக்க இணையம் நல்ல சாய்ஸ்’ங்கிறா ஒரு பொண்ணு.
இணைய நண்பர்களை நேர்ல பார்த்தாக்கூட அவங்களோட நிஜப் பெயரைவிட இணையப் பெயரைச் சொல்லித்தான் அழைக்கத் தோணுது. இந்தக் கட்டுரைக்குக்கூட என்னோட இயற்பெயரைப் போடுறதா, இணையப் பெயரைப் போடுறதானு குழம்பி, இணையப் பெயரையே போடுவோம்கிற முடிவுக்கு வந்திருக்கேன்னா பாருங்க, இணையத்தின் பாதிப்பை!
No comments:
Post a Comment