Friday, April 8, 2016

ஆப்பிள் போனும் அமெரிக்க போலீஸும்!

 
டந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் சான் பெர்னார்டினோ நகரில் சையத் ரிஸ்வான் ஃபரூக் என்பவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர். ஃபரூக்கும் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து ஆப்பிள் 5C மாடல் மொபைல் ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். 

லாக் செய்யப்பட்டிருந்த அந்த மொபைலைத் திறந்தால் சில க்ளூக்கள் கிடைக்கும் என எஃப்.பி.ஐ நினைத்தது. அதற்காக ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்புகொண்டது. ஆப்பிளோ, `என் பயனரின் தகவலை என்னால்கூட எடுக்க முடியாது. அந்த அளவுக்கு ஆப்பிள் மொபைல்கள் பாதுகாப்பானவை' எனக் கைவிரித்துவிட்டது. இது போலீஸின் கோரிக்கை என அமெரிக்க போலீஸ் குரல் உயர்த்தியபோதும், `பேங்க்லயே காசு இல்லையாம்' என்பது போல, `என்னாலேயே எடுக்க முடியாது பாஸ். வேணும்னா கோர்ட்டுக்குப் போங்க' என்றது ஆப்பிள்.
 
பல மொபைல் கில்லாடிகளிடம் அன்லாக் செய்துதரும்படி கேட்டது எஃப்.பி.ஐ. எந்த ‘அண்டாகா கசம், அபூ கா ஹுக்குமும்' வேலைக்கு ஆகவில்லை. வேறு வழியின்றி எஃப்.பி.ஐ., கோர்ட்டுக்குப் போனது. `அன்லாக் செய்ய வழி இல்லை என்பது ஓ.கே. அதற்குப் பதிலாக, சையத் ஃபரூக்கின் அந்த ஒரு மொபைலுக்காக பிரத்யேகமாக ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் எழுதிக்கொடுங்கள்' என்று தன் வாதத்தில் கேட்டுக்கொண்டது எஃப்.பி.ஐ. அதற்கு ஆப்பிள் ஒரு கதை சொன்னது. 

`பொதுவாக லிஃப்ட்டுகள் அனைத்திலும் மாஸ்டர் கீ போடும் வழி ஒன்று இருக்கும். அவசரக் காலங்களில் அந்த மாஸ்டர் கீயைப் பயன்படுத்தி, லிஃப்ட் எங்கே நிற்க வேண்டும் என்பதை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். எல்லா லிஃப்ட் உற்பத்தியாளர்களும் அந்த மாஸ்டர் கீ செய்து, தீயணைப்புத் துறைக்கு தர வேண்டும். இப்போது, அந்த மாஸ்டர் கீ, சில ஆயிரங்கள் கொடுத்தால் எளிதாக மார்க்கெட்டில் கிடைக்கிறது. அந்த கீ இருக்கும் யாரும் ஒரு லிஃப்ட்டின் செயல்பாட்டை மாற்றி அமைக்க முடியும். அதுபோல என் கதையும் ஆகிவிடும். எனவே, தனி ஆபரேட்டிங் சிஸ்டம் எழுதித் தருவது சாத்தியம் இல்லை’ என்றது ஆப்பிள். `இன்று அமெரிக்க அரசு கேட்கிறது என நான் மாற்றுவழி செய்துகொடுத்தால், நாளை எல்லா நாடுகளும் என் காலரைப் பிடிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?' என்பது ஆப்பிள் லாஜிக்.
இதற்கு இடையில், `கடல்லயே இல்லையாம்ப்பா' என்பதுபோல, `எஃப்.பி.ஐ-யாலேயே ஆப்பிள் பாதுகாப்பு வளையத்தைத் தாண்ட முடிய வில்லையாம். இனி, நம் ஏடாகூடா செல்ஃபிக்களை ஆப்பிள் மொபைலில் பயம் இல்லாமல் வைத்துக்கொள்ளலாம்' என எல்லோரும் பேச ஆரம்பிக்க, ஆப்பிளின் பிராண்ட் வேல்யூ, கெயில் சிக்ஸர் தாண்டி எகிறியது. `இந்தப் பிரச்னையைத் தனது மார்க்கெட்டிங்குக் காகப் பயன்படுத்திக்கொள்கிறது ஆப்பிள்' என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

ஆப்பிளின் செக்யூரிட்டி சுவாரஸ்ய மானது. ஆப்பிள் 5S மாடலில் இருந்துதான் கைரேகை மூலம் மொபைலைத் திறக்கும் வசதி வந்தது. மற்ற Finger print sensor-க்கும் இதற்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. தமிழ் சினிமாவில் வருவதுபோல சோப்பில் கைரேகையை டூப்ளிகேட் செய்தெல்லாம் திறக்க முடியாது. அந்த ரேகைக்கு கீழ் ரத்தம் ஓடுகிறதா என்பது வரை துல்லியமாக டெஸ்ட் செய்கிறது ஆப்பிள் போன். சையத் ஃபரூக்கின் மொபைல் 5C மாடல். அதில் Finger print sensor கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 

மொபைல் செக்யூரிட்டியில் `என்க்ரிப்ஷன் (Encryption)’ என ஒன்றிருக்கிறது. அதாவது நமது மொபைலில் இருக்கும் டேட்டாவை, ஒரு சீக்ரெட் கீ போட்டுப் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். அந்த கீ தெரிந்தால்தான், அந்தத் தகவலைப் படிக்க முடியும். அப்படி, நம் மொபைலில் இருந்து அனுப்பும் தகவல்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருந்தால், நமது டேட்டா பாதுகாப்பானது என அர்த்தம். ஆப்பிள் வழங்கிய iMessages வசதிதான் முதன் முதலாக 100 சதவிகிதம் என்க்ரிப்ட் செய்யப்பட்டது. அதாவது, நமது மொபைலில் இருந்து இன்னொரு ஆப்பிள் மொபைலுக்கு அனுப்பப்படும் மெசேஜை, ஆப்பிள் நிறுவனமே நினைத்தாலும் படிக்க முடியாது.
 
பிளாக்பெர்ரி நிறுவனம் முதலில் என்க்ரிப்டட் மெசெஜ் (BBM) சேவையைக் கொண்டுவந்தபோது, தீவிரவாதிகள் அதைப் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. அதனால், பல நாடுகளில் தங்கள் நாட்டில் சர்வரைவைத்து மெசேஜைக் கண்காணித்தால் மட்டுமே பிளாக்பெர்ரிக்கு அனுமதி என்றது. அதை பிளாக்பெரியும் ஏற்று எல்லா நாடுகளிலும் சர்வரை அமைத்தது. ஐ-மெசேஜில் அப்படி முடியாது. ஆப்பிளே நினைத்தாலும் பயனர்களின் தகவலை எடுக்க முடியாது.

ஆப்பிள் Vs. எஃப்.பி.ஐ சண்டையின் இறுதிச் சுற்றில், `நாங்களே மொபைல் லாக்கைத் திறந்துட்டோம்' என அறிவித்திருக்கிறது எஃப்.பி.ஐ. வழக்கையும் வாபஸ் வாங்கிவிட்டது. `எப்படித் திறந்தீர்கள்?' என ஆப்பிள் கேட்டால், `நான் கேட்டா சொல்ல மாட்ட. நீ கேட்டா நான் ஏன் சொல்லணும்?’ என எஃப்.பி.ஐ சொன்னாலும் சொல்லலாம் என்பதால், ஆப்பிள் செய்வதறியாது முழிக்கிறது. உடனே ஐபோன் பார்ட்டிகள், `இதையும் ஹேக் செய்யலாமா?' என குழம்பி, ஏடாகூட செல்ஃபிகளை அழிக்க ஆரம்பித்து உள்ளனர். நெட்டிலும் இதுபற்றி சூடான விவாதம்  நடக்கிறது. எஃப்.பி.ஐ எப்படித் திறந்திருப்பார்கள் என நூற்றுக்கணக்கான எக்ஸ்பர்ட்ஸ் தங்கள் வலைதளங்களில் எழுதித் தீர்க்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் அவை அனைத்தும் யூகங்களாகவே இருக்கின்றன. இன்னொரு பக்கம், `அதெல்லாம் திறக்கவே இல்லைப்பா. எஃப்.பி.ஐ அடிச்சுவிடுறான்’ என ஆப்பிள் பாய்ஸ் பதிலடி தருகிறார்கள். 

இன்னும் விடாமல் தொடர்கிறது ஆப்பிள் சர்ச்சை

No comments:

Post a Comment