Friday, April 22, 2016

இது கண்களுக்கான கணினி!



கார்க்கிபவா

`மை டியர் குட்டிச்சாத்தான்' ஞாபகம் இருக்கிறதா? அதில் சிறுவர்களுடன் ஒரு குட்டிச்சாத்தானும் சிறுவன் உருவில் சுற்றும். அந்தச் சிறுவன் மற்றவர் கண்களுக்குத் தெரிய மாட்டான். `ஃபேன்டசி கதை' என அன்று நாம் ஆச்சர்யமாகப் பார்த்ததை, இன்று நிஜமாக்கியிருக்கிறது தொழில்நுட்பம். வழக்கமாக கூகுள் நிறுவனம்தான் இப்படி `அட’ போடவைக்கும். இந்த முறை `ஹோலோலென்ஸ்’ உடன் களம் இறங்கியிருப்பது மைக்ரோசாஃப்ட்.

ஹோலோலென்ஸைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன்னர், ஹோலோகிராம் பற்றி பார்ப்போம். 

`ஹோலோஸ்’ என்பதற்கு கிரேக்க மொழியில் `முழுமையான’ என அர்த்தம். `கிராமா’ என்றால் தகவல். அதில் இருந்து வந்ததுதான் ஹோலோகிராம். புரொஜக்‌ஷன் மூலம் உருவாக்கப்படும் முப்பரிமாணப் பிம்பத்துக்கு `ஹோலோகிராம்’ எனப் பெயர். சென்ற ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், குதிரை ஒன்று பறந்துவந்து ஜெயலலிதாவுக்கு வணக்கம் வைத்தது நினைவில் இருக்கிறதா? அதுதான் ஹோலோகிராம்.

ஹோலோலென்ஸ் என்பது, நம் கண்களில் அணியக்கூடிய ஒரு ஹோலோகிராஃபிக் கம்ப்யூட்டர். இது நாம் விரும்பும் ஹோலோ கிராஃபிக் பிம்பத்தை உருவாக்கும். அந்தப் பிம்பத்தைத் தொட்டு நாம் கொடுக்கும் சிக்னலுக்கு ஏற்ப வேலைசெய்யும்; நாம் சொல்வதைக் கேட்கும்; அதுவும் பேசும். 

ஹோலோலென்ஸை அணிந்துகொண்டு, அமெரிக்காவில் இருக்கும் உங்கள் கிளையன்ட்டுடன் ஸ்கைப்பில் வீடியோ கால் பண்ணலாம். லேப்டாப் திரையில் தெரியவேண்டிய அவரது வீடியோ, உங்களுக்கு முன்னால் தெரியும். அப்படியே நடந்துசென்றால், அவரும் உங்களுடன் வருவார். ஆனால், மற்றவர் கண்களுக்கு அந்த வீடியோ தெரியாது. ஹோலோலென்ஸில் இருக்கும் ஸ்பீக்கரில் அவர் பேசுவது கேட்கும். கிளையன்ட் ஏதேனும் தேவையில்லாமல் பேசினால், அவர் தலையில் லேசாகக் கொட்டலாம். அவருக்கு வலிக்காது என்பது மட்டும்தான் வித்தியாசம்.

ஏற்கெனவே ஆக்மென்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி எனப் பல வகை இருக்க, ஹோலோலென்ஸை `மிக்ஸட் ரியாலிட்டி' என்கிறார்கள். விர்ச்சுவல் ரியாலிட்டி என்றால், இல்லாத ஒன்றை இருப்பதுபோல் காட்டுவது. ஆக்மென்டட் ரியாலிட்டி என்றால், இருக்கும் ஒரு பொருள் மீது டிஜிட்டலாக சில தகவல்களைச் சேர்ப்பது. அதாவது, ஒரு புத்தகத்தை மொபைலில் ஸ்கேன் செய்தால், மொபைலில் புதிதாக ஒரு வீடியோ பாடும். மிக்ஸட் ரியாலிட்டி என்றால், நிஜத்தில் இருக்கும் பொருளோடு இல்லாத ஒன்றைச் சேர்த்துக் காட்டுவது. அதாவது, உங்கள் எதிரில் நிஜமாகவே உங்கள் பாஸ் நிற்பார். அவருக்குப் பக்கத்தில், ஊரில் இல்லாத கிளையன்ட் நிற்பதுபோன்று காட்டும். இருவரையும் ஒரே நேரத்தில் ஹோலோலென்ஸ் மூலம் பார்க்க முடியும். 

இந்த அளவுக்கு ஆச்சர்ய விஷயங்களைச் செய்யும் சாஃப்ட்வேரைச் சுமக்கும் ஹார்டுவேர் எப்படி இருக்க வேண்டும்? ஹோலோலென்ஸின் வடிவமைப்பு அதைத் தாங்கக்கூடியது. லேப்டாப்களில் இருக்கும் புராசஸரைவிட சக்திவாய்ந்த புராசஸரைப் பொருத்தி இருக்கிறார்கள். போட்டோ எடுப்பதற்கு 2 மெகாபிக்ஸல் கேமரா. அது தவிர, நம் சுற்றுப்புறத்தைக் கவனிக்க தனி கேமராக்கள். நாம் பேசுவதைக் கேட்க மைக்ரோஃபோன். நாம், அது சொல்வதைக் கேட்க 3டி ஸ்பீக்கர்கள், 2 அல்லது 3 மணி நேரம் இயங்குவதற்கு தேவையான பாட்டரி, புளூடூத் சிப்செட், 2 ஜிபி ராம் என ஹைடெக் பாகங்கள் அனைத்தையும், அவ்வளவு லேசான ஒரு கண்ணாடியில் அடக்கியிருக்கிறார்கள். இது எளிதில் உடையாததாகவும் இருக்கிறது. 

ஹோலோலென்ஸ் என்பது, ஒரு புதிய டெக்னாலஜி. இதைவைத்து கேம்ஸ் ஆடலாம்; மருத்துவத் துறைக்கு உதவலாம்; கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தேவைப்படலாம்... என என்னென்ன செய்யலாம் என்பது நமது க்ரியேட்டிவிட்டியைப் பொறுத்தது. இதற்கு டெவலப்பர்கள் தேவை. எல்லாவற்றையும் மைக்ரோசாஃப்ட்டே செய்ய முடியாது. அதனால் முதல் கட்டமாக சில ஆயிரம் ஹோலோ லென்ஸ்களை அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கும் டெவலப்பர்களுக்கு மட்டும் விற்கத் தொடங்கியிருக்கிறார்கள். விலை 3,000 டாலர் (கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய்). பொதுமக்களுக்கு விற்பனைக்கு வரும்போது இது இன்னும் குறையலாம்.

`ஹோலோலென்ஸ் கண்ணாடியைப் பயன்படுத்தி, மனித உடலின் தசைகள், இதயம், மூளை, எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம்... என அனைத்தையும் தனித்தனியாகக்  கண்காணிக்கலாம்’ என்கிறது கேஸ் வெல்டர்ன் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஓர் ஆராய்ச்சி வீடியோ. பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு தெரியவரும் சில விஷயங்களை, ஹோலோலென்ஸ் மூலம் எளிதாகக் கண்டறியலாம். 

`இது எல்லாம் ஹைடெக் டெக்னாலஜி... நமக்குத் தேவைப்படுமா?’ என நீங்கள் யோசிக்கலாம். வெளிநாட்டில் குடும்பத்துக்காக உழைக்கும் அப்பாவை, பிள்ளைகள் ஸ்கிரீனில் பார்த்தால் போதுமா? ஹோலோலென்ஸ், அவர்களை ஒன்றாக கிரிக்கெட்டே விளையாடவைக்கும். விஞ்ஞானம் தன் வேலையைச் செய்துகொண்டுதான் இருக்கும். அதை மனிதத் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துவதில்தான் அதன் உண்மையான வெற்றி இருக்கிறது

No comments:

Post a Comment