Friday, April 8, 2016

பாலிவுட்டின் ‘குயின்’!

டிகை கங்கனா ரணாவத்துக்கு 29 வயது. அதற்குள் மூன்று தேசிய விருதுகள். ‘தனு வெட்ஸ் மனு - ரிட்டர்ன்ஸ்’ படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்ட மார்ச் 28-ம் தேதி, கங்கனாவின் பிறந்த நாள். பர்த்டே கிஃப்ட்!

17 வயதில் நடிக்கத் தொடங்கியவர் கங்கனா. 12 ஆண்டுகால திரையுலக வாழ்க்கை. எதுவும் சீராக இருந்தது இல்லை. சர்ச்சைகள், குழப்பங்கள், கிசுகிசுக்கள், வழக்குகள், வன்முறைகள். 

கங்கனாவின் வீட்டில் முதலில் பிறந்தது ஓர் ஆண்குழந்தை. பிறந்த பத்தே நாட்களில் அது இறந்துபோனது. அடுத்த குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என குடும்பமே காத்திருக்க, அக்கா ரங்கோலி பிறந்தார். அடுத்து ஆண் குழந்தைதான் என குடும்பமே காத்திருக்க... பிறந்தது கங்கனா ரணாவத். அன்று தொடங்கி ‘ஒரு பையன் பிறப்பான்னு எதிர்பார்த்தோம். இவ வந்து பொறந்து தொலைச்சிட்டா’ என்று பெற்றோர் புலம்ப ஆரம்பித்தனர். ‘நம் பெற்றோருக்குத் தேவையில்லாத குழந்தையாக வளர்வது மிகவும் மோசமானது. அந்த நினைவுகள் இப்போதும் என்னைத் தொந்தரவு செய்கிறது’ என்பார் கங்கனா. சொந்த ஊர் இமாச்சலப்பிரதேசத்தின் மாண்டிக்கு அருகில் சிறிய கிராமம். அம்மா, பள்ளி ஆசிரியை, அப்பாவுக்கு சுயதொழில். எப்படியாவது மகளை டாக்டராக்கிவிட வேண்டும் என எந்நேரமும் நெருக்கடி தருகிற பெற்றோர். பள்ளியில் படிக்கும்போதே படிப்பைவிட மாடலிங்கில் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்பதுதான் கங்கனாவின் கனவு. வீட்டில் எல்லோரி டமும் சொல்லிவிட்டு, ‘இனி மாடலிங் தான்’ என டெல்லிக்குக் கிளம்பியபோது கங்கனாவுக்கு வயது 16.
மாடலிங்கில் க்ரியேட்டிவாகச் செயல்பட வாய்ப்பு இல்லை என்பது சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது. மீண்டும் எதிர்காலம் குறித்த குழப்பம். நாடகங்களை இயக்கிக் கொண்டிருந்த அர்விந்த் கவுர், அவரை மேடை நாடகங்களில் நடிக்கப் பயிற்றுவித்தார். அவர்தான் சினிமாவுக்கும் அனுப்பிவைத்தார்.   அனுராக் பாஸு இயக்கிய `கேங்ஸ்டர்' படத்தில் நாயகி வாய்ப்பு. ஆனால், ஷூட்டிங் உடனே தொடங்கவில்லை. அடுத்த ஆறு மாதங்கள் மும்பையில் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் ஏழு பேருடன் தங்கியிருந்தார். கையில் காசு இல்லை. பல நாட்களில் இரவு உணவு இருக்காது. சப்பாத்தியும் ஊறுகாயும்தான். 

‘தனியாக வாழ்கிற ஓர் இளம் பெண்ணாக, உங்களுக்குப் பின்னால் ஒரு பணக்காரத் தந்தையோ, அண்ணனோ, அரசியல்வாதியோ, நடிகரோ, தயாரிப்பாளரோ இல்லாத பட்சத்தில் உங்களை நீங்களேதான் காத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஒரே ஒரு பிழையோ, குறையோ கண்டுபிடித்துவிட்டாலும் உங்களை வேட்டையாடிவிடுவார்கள். பாலிவுட்டில் சிலர் குறிவைத்து விட்டால் என்ன பாடுபடுத்துவார்கள் என்பது கடவுளுக்கு மட்டும்தான் தெரியும். நீங்கள் உங்களை மிகச் சரியாக வைத்துக்கொள்வது மட்டும் தான் தப்பிப் பிழைக்க ஒரே வழி’ என்று பேட்டி ஒன்றில் தன் ஆரம்ப நாட்களை நினைவுகூர்கிறார் கங்கனா. 

`கேங்ஸ்டர்' வெளியானது. குடிகாரியாக நடித்த 18 வயது துறுதுறு பெண்ணை பாலிவுட் கவனித்தது. அந்தப் படத்தின் வெற்றி இன்னும் பல வாய்ப்பு களை அள்ளித் தந்தது. யாருமே ஏற்றுக்கொள்ளத் தயங்குகிற வேடங்களை அடுத்தடுத்து ஏற்று நடித்தார். ‘வோ லம்ஹே’யில் `ஸ்கீசோப் ரீனியா'வால் பாதிக்கப்பட்ட நடிகையாக, ‘ஃபேஷன்’ திரைப்படத்தில் போதைக்கு அடிமையாகி வாய்ப்புகளைத் தவறவிடும் மாடலிங் பெண்ணாக... அவர் ஏற்றுக்கொண்ட பாத்திரங்கள் எல்லாமே எதிர்மறையானவை; மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவை.
‘எனக்குக் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் முழுமனதோடு ஏற்றுக்கொண்டு நடித்தேன். 

`என் தலைமுடி ஏன் இப்படிச் சுருள்சுருளாக இருக்கிறது... எனக்கு ஏன் நீலநிறக் கண்கள் இல்லை... ஏன் நான் உயரமாக இல்லை?’ என்று ஏங்கியதே இல்லை. என்னிடம் என்ன இருக்கிறதோ... அதுதான் நான்’ என்று அந்தச் சமயத்தில் பேட்டி கொடுத்தார். 

2008-ம் ஆண்டு தொடங்கி 2010-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக அடுத்தடுத்து பல தோல்விப் படங்கள். தமிழில் அவர் நடித்த `தாம் தூம்' படம்கூட படுதோல்வி. தொடர்ச்சியாக மோசமான பாத்திரங்களை ஏற்று நடித்ததில் மனசு முழுக்கச் சொல்ல முடியாத வேதனைகள்; கூடவே காதல் தோல்வி. `அடுத்தது என்ன... இந்தப் போராட்டங்களிலேயே செத்துப்போய் விடுவோமா?’ அலைபாய்ந்த எண்ணம். அந்த நேரத்தில்தான் சூர்யா என்கிற யோகா குரு ஒருவரைச் சந்திக்கிறார் கங்கனா. அவர் விவேகானந்தரின் எழுத்துக்களையும் யோகாவையும் கங்கனாவுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். 
‘யோகா எனக்குள் புதிய உற்சாகத்தையும் பலத்தையும் உருவாக்கியது. எனக்குள் ஒரு தெளிவை உருவாக்கியது. வாழ்வை எதிர் கொள்வதற்கான வலிமையைக் கொடுத்தது’ என்கிறார் கங்கனா. இப்போதும் தானேவில் உள்ள ராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று யோகா பயிற்றுவிக்கிறார். 

தன் மனதுக்குச் சரி எனப் பட்டதைத் தயங்காமல் செய்வதில்தான் கங்கனா மற்ற நடிகைகளில் இருந்து வித்தியாசப்படுகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவப்பழகு க்ரீம் நிறுவனம் ஒன்று, விளம்பரத்தில் நடிக்க இரண்டு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம்செய்ய கங்கனாவிடம் வந்தது. உடனடியாக முடியாது என மறுத்துவிட்டார். ‘எதுக்கு ஒரு பொண்ணு சிவப்பா இருக்கணும்? இந்த கான்செப்ட்டையே என்னால புரிஞ்சுக்க முடியலை. என் அக்கா ரங்கோலிகூட கறுப்புதான். ஆனால் அழகானவள். இப்படி ஒரு விளம்பரத்தில் நடித்தால், அது அவளையே அவமானப்படுத்துவதாக ஆகாதா?’ என்றார். இந்த அதிரடிதான் கங்கனா. 

அவர் நடித்த படங்களைவிடவும் பெர்சனல் வாழ்க்கையை முன்வைத்தே கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து பேசப்பட்டார். முதலில் ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைத்துப் பேசப்பட்டார். பிறகு அஜய் தேவ்கானுடன் காதலில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. பிறகு மனிஷ் மல்ஹோத்ரா வந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த நிகோலஸ் லஃபார்டி என்ற டாக்டருடன் இணைத்துப் பேசப்பட்டார். இப்போதும்கூட சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் காதலில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து கங்கனா சொல்வது என்ன?  

‘நான் சதி சாவித்திரிபோல இருக்கவேண்டும் என எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், நான் அப்படிப்பட்டவள் அல்ல. நான் இன்றைய பெண்களில் ஒருத்தி. இந்தியர்களுக்கு, பழைமையான, அழக்கூடிய, எந்நேரமும் மற்றவர்களுடைய பச்சாதாபத்தை எதிர்பார்க்கிற நடிகைகளைத்தான்  பிடிக்கும். நான் அப்படிப்பட்டவள் அல்ல. என் வாழ்க்கையில் நடக்கிற எல்லா விஷயங்களுக்கும் நானே பொறுப்பு' என்கிறார் தடாலடியாக.
‘குயின்’ படத்துக்காக அவருக்கு வெவ்வேறு தொலைக்காட்சிகள் விருதுகளை அறிவித்தன. ஆனால், எதிலும் கங்கனா கலந்துகொள்ளவில்லை. ‘இந்த விருதுகள் முழுக்கப் போலியானவை. இந்த விருதுகளால் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு டி.ஆர்.பி கிடைக்கிறது என்பதைத் தாண்டி ஏதாவது பிரயோஜனம் உண்டா... என்றைக்காவது உண்மையான கலைஞர்கள் இந்த விழாக்களில் கௌரவிக்கப் பட்டது உண்டா?' - இதுதான் கங்கனாவின் நிலைப்பாடு. 

எதையுமே ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிற இயல்பு கங்கனாவிடம் உண்டு. யோகா கற்றுக்கொண்டதும், அதைத் தொடர்ந்து தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டதும் அப்படித்தான். மாடலிங்கில் வாய்ப்புத் தேடி அலைந்த நாட்களில் முறையாக இசை கற்றுக்கொண்டார். சென்ற ஆண்டு அமெரிக்கா சென்று திரைக்கதை எழுதுவது குறித்த கோர்ஸ் ஒன்றை முடித்திருக்கிறார். தன் ஊரான இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு நிலத்தை வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். 

கங்கனா தொடர்ந்து கற்கிறார். கற்பதை அவர் நிறுத்தவே இல்லை. அதனால்தான் எந்நேரமும் கும்பிடு போட்டு, பிழைப்பு நடத்துகிற ஒரு துறையில் அவர் தனித்துவம் மிக்கவராக இருக்கிறார். அதனால்தான் அவர் சமூகம் நிர்பந்திக்கிற ஸ்டீரியோடைப் விஷயங்களை உடைக்கிறார். ஒரு சிறிய கிராமத்தில் இருந்து கிளம்பிவந்து, அத்தனை பெரிய பாலிவுட்டில் எந்தவிதத் துணையும் இல்லாமலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர்கள் மத்தியில் விதைக்கிறார்

No comments:

Post a Comment