Wednesday, May 13, 2020

அமெரிக்காவில் அமர்க்களமாய் குறள் பறை முழங்க தாலியில்லா திருமணம்!

பறையிசையுடன் திருமண நிகழ்வு
`














பஸ் லேட்டாயிடுச்சு... அதனால, தாலி கட்டற நேரத்துக்கு வர முடியல' என்று ஒவ்வொரு திருமணத்தின்போதும் உறவினர்களில் ஒருவராவது சொல்வதைக் கேட்டிருப்போம்.

திருமணத்தின்போது ஏராளமான சடங்குகள், பழக்கங்கள் இருந்தாலும் தாலிக்கட்டுவதே முதன்மையாகப் பார்க்கப்படும். ஆனால், தமிழகத்தில் மாலை மாற்றி, உறுதிமொழி ஏற்கும் சுயமரியாதைத் திருமணப் பழக்கம் சுமார் நூறாண்டுகளாக இருக்கிறது. சி.என்.அண்ணாதுரை முதல்வரானபோது, இச்சுயமரியாதைத் திருமணங்களும் சட்டப்படி செல்லும் என்று அறிவித்தார்.

சுயமரியாதை திருமணங்கள் எல்லாம், திராவிட இயக்கங்களோடு தொடர்பிலிருக்கும் குடும்பங்களில் மட்டுமே நடக்கின்றன என்ற பேச்சை உடைந்தெறிந்திருக்கிறது ராம் செல்லமுத்து - அகிலா திருமணம்.

ராம் செல்லமுத்து - அகிலா திருமணம் தாலி, மந்திரச் சடங்குகள் இல்லாது நடைபெற்றிருக்கிறது. மந்திரங்களுக்குப் பதிலாக ஐந்து திருக்குறள்கள் அடங்கிய பாடல்களை ஒலிக்கவிடுவது, மேளம், நாகஸ்வரத்துக்குப் பதிலாக பறை இசையை வாசித்தல், மணஏற்பு உறுதிமொழியாக இந்தச் சமூகத்துக்குத் தம்பதியாக என்ன செய்யப் போகிறோம் என்பதைச் சொல்வது என்று தனது திருமணத்தில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள்.

கரூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் ராம் செல்லமுத்து. இவர், அமெரிக்காவில் யெஸ்பாஸ் க்ளவுடு (spos cloud) எனும் சாஃப்ட்வேர் கம்பெனியைச் சொந்தமாக நடத்தி வருகிறார். இவரின் தந்தை செல்லமுத்து, பிரபல மருத்துவர். ராம் கரம் பிடித்திருக்கும் அகிலாவுக்குச் சொந்த ஊர், கரூர் மாவட்டத்தில் உள்ள ஓந்தாம்பட்டி. இவரும் அமெரிக்காவிலுள்ள பிரபல சாஃப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற இவர்களின் இந்த வித்தியாச திருமணம், பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

நான் பொறியியல், எம்.எஸ். படித்தது எல்லாம் இந்தியாவில்தான். பத்து வருஷத்துக்கு முன் மைக்ரோசாஃட் கம்பெனியில் வேலை கிடைச்சு, அமெரிக்காவுக்கு வந்தேன். இரண்டு வருஷத்துலேயே சொந்தமா யெஸ்பாஸ் க்ளவுடு சாஃப்ட்வேர் கம்பெனியைத் தொடங்கிட்டேன். நினைச்ச வாழ்க்கை; கனவை எட்டிப்பிடித்த திருப்தி எல்லாம் இருந்தாலும், திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை. திருமணப் பந்தம் நம்ம கனவுகளைச் சிதைச்சிடுமோ என்ற பயம்தான். அகிலாவுக்கும் அத்தகைய எண்ணம்தான். நண்பர்கள் மூலமா மூன்று வருடங்களுக்கு முன்புதான் அகிலா பழக்கமானாங்க. பழகிய சில நாள்கள்லேயே, அவங்களை எனக்கும், என்னை அவங்களுக்கும் பிடிச்சுப் போச்சு. அதுக்குக் காரணம் இருவரின் சிந்தனைகளும் ஒத்திசைவா இருந்ததுதான். இரண்டு வீட்டுலயும் கொஞ்சம் யோசித்துதான் எங்க காதலை ஏத்துக்கிட்டாங்க. மூன்று வருடங்கள் காதலித்துவிட்டு, இப்போது திருமணம் பண்ண முடிவெடுத்தோம்.

ஆனால், தமிழ் முறைப்படியும், தாலி இல்லாமலும் திருமணம் பண்ண முடிவு பண்ணினோம். அதை ஒரு விழிப்புணர்வா மாற்றவும் விரும்பினோம். அதனால், கரூரைவிட அமெரிக்காவில் அப்படி பண்ணினா, உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் பார்வைக்குப் போகும்னு நினைத்தோம். அதனால், இங்கேயே திருமண ஏற்பாடுகளைச் செய்தோம். கரூரிலிருந்து நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே வந்தாங்க. இங்க பழக்கமான நண்பர்கள் 200 பேர் எங்க திருமணத்துக்கு வந்தாங்க. என்னதான் நாம் கலாசார வளர்ச்சிப் பற்றிப் பேசினாலும், ஆணோடு பெண்ணும், பெண்ணோடு ஆணும் நட்பா பழகுறதையே இன்னும் தவறாகப் பார்க்கும் சூழல் நம்மிடம் இருக்கிறது. அதை முதலில் உடைக்க நினைத்தோம்.

அதனால், எனக்கு மணமகன் தோழியாக பவித்ரா என்பவரும், அகிலாவுக்கு மணமகள் தோழனாக ரவிக்குமார் என்பவரும் இருந்து, எங்களை இருவரும் அறிமுகப்படுத்தினாங்க. தாலி அணிவிக்காமல், அகிலாவுக்கு மாலை மட்டும் அணிவித்தேன்; அவங்களும் எனக்கு மாலை அணிவித்தாங்க. திருவள்ளுவர் சிலைகளை வைத்து, அதற்கு முன்பாக சம்ஸ்கிருத மந்திரங்களுக்குப் பதிலாக, ஐந்து திருக்குறள்கள் அடங்கிய பாடலை ஒலிக்கவிட்டோம்.
அதோடு, சமீபகாலமாக அமங்கள இசையாக மாற்றிவிட்ட பறை இசையை எல்லோரும் மங்கள இசையாக இசைத்தோம். அகிலாவும் பறை வாசித்தாங்க. தொடர்ந்து, ஜாலியான போட்டிகள், நடனம் என்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினோம். வந்திருந்த எல்லோருக்கும் தென்னிந்திய உணவுகளைப் பரிமாறினோம். திருமணத்துக்கு வந்திருந்த யாரும் எங்களுக்கு பரிசுப்பொருள்கள் எதையும் தரக் கூடாது என்று சொல்லியிருந்தோம்.
ஆனால், நாங்கள் வந்திருந்த அனைவருக்கும் எங்க திருமண பரிசாக, சூழலுக்குக் கேடுதராத மெட்டீரியலால் ஆன வாட்டர் பாட்டிலைத் தந்தோம். இதன்மூலமாக, அனைவரையும், `பிளாஸ்டிக் பயன்பாட்டை 100 சதவிகிதம் தவிருங்கள்' என வலியுறுத்தினோம். எங்க திருமணத்தை அர்த்தபூர்வமாக நடத்தியதில் எனக்கும், அகிலாவுக்கும் அளவில்லாத ஆனந்தம்" என்றார், மகிழ்ச்சியாக.

தொடர்ந்து பேசிய, மணப்பெண் அகிலா, "தமிழ்வழி நடக்கும் திருமணங்களிலேயே பலரும், மணமக்கள் உறுதியேற்கும் விஷயத்தையே டெம்ப்ளேட்டாக வைத்திருப்பார்கள். அங்கேயும் நாங்க புதுமை பண்ண நினைத்தோம். படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம் எல்லாம் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிதான். அதுவும், `நமது குடும்பம்' என்ற சுயநல வட்டத்துக்குள் மட்டுமே உள்ள நிலைகள் அவை. அதைத்தாண்டி, `இந்தச் சமூகத்துக்கு நாங்கள் என்ன செய்யப் போகிறோம்' என்பதை நாங்கள் இருவரும் முடிவு செய்து அதை தனித்தனியாக நாங்களே எழுதி, அதையே மணமக்கள் உறுதிமொழி ஏற்பாக வாசித்தோம். `சமூக விஷன்' என்ற பெயரில் அதை முன்மொழிந்தோம்

ராம் செல்லமுத்து, டீன் போர்ஸ் (teen force) ங்கிற அமைப்பைத் தொடங்கி, அதன்மூலமாக 16 வயதிலிருந்து 23 வயது வரை உள்ள மாணவர்களுக்கு உதவப்போறதா உறுதிமொழி எடுத்துக்கிட்டார். அதற்காக, தனது சொத்தில் 50 சதவிகிதத்தைச் செலவிடப் போறதா அறிவித்ததும், பலரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். மைக்ரோசாஃப்ட் அதிபர் பில்கேட்ஸ், அந்தக் கம்பெனி பொறுப்பில் இருந்து விலகி, தனது சொத்தில் பெரும்பகுதியை உலக அளவில் கல்விக்காகச் செலவிடப் போறதாக அறிவித்தார். என் கணவரும் தனது சொத்தில் 50 சதவிகிதத்தைக் கல்விக்காக அறிவித்த நொடியில், என் கணவர் மீதான காதல் பன்மடங்கு கூடியது.

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தப் போட்டி யுகத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு திறன்களை வளர்த்துக்கொள்ளும் வசதி வாய்ப்புகள் கிடைப்பதில்லை. குறிப்பாக, கிராமப்புற அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்புகள் இல்லை. இது ஒருபக்கம் என்றால், அடிப்படைக் கல்வியைக் கற்பதற்கே அவர்கள் நிதிச்சுமையில் தத்தளிக்க வேண்டிய நிலைமை. இதை மாற்ற, பல்வேறு அமைப்புகள், பயிற்சியாளர்கள் மூலமாக தமிழக மாணவர்களுக்குப் போதிய திறன்களை வளர்க்க என் கணவர் முடிவு செய்திருக்கிறார். அதேபோல், மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே ஆன்லைன் மூலமாக நல்ல சம்பளத்தில் பார்ட் டைம் வேலை பார்க்க வசதி ஏற்படுத்தி தர இருக்கிறார்.

பல கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகளிடம் அணுகி, அதற்கான வாய்ப்பை உருவாக்க இருக்கிறார். இது அவர் முன் வைத்த சமூக விஷன். அதேபோல், நான் வைத்த சமூக விஷன் என்னவென்றால், சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்கப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான். சாதி, மதம், ஆண், பெண், பொருளாதாரம் என்று இந்தச் சமூகம் பிரிந்து கிடப்பதற்கு பல காரணிகள் இருக்கின்றன. ஆனால், அதெல்லாம் வேண்டியதில்லை; நாம் அனைவரும் மனிதர்கள்; நமக்கு எல்லோரும் சமமே' என எல்லோருக்குள்ளும் மனிதநேயத்தை, அன்பை விதைப்பதற்காக பல்வேறு முயற்சிகளைச் செய்ய இருக்கிறேன்" என்றார், உறுதி மேலிட!

No comments:

Post a Comment