தொழில் நுட்பம்.... தொலைக்கும் கலாச்சாரம்
நன்றி : விகடன்
செங்கல்பட்டு அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், ஒரு மாணவன் வகுப்பறையில் பயன்படுத்திய செல்போனை வாங்கி ஆசிரியர் பரிசோதித்தார். அதில் முழுக்கவே ஆபாச வீடியோக்கள். அதைவிட அதிர்ச்சி, பள்ளியின் ஆசிரியை ஒருவரை மிகவும் ஆபாசமான கோணங்களில் அந்த மாணவன் வீடியோ எடுத்திருந்தான். எச்சரிக்கப்பட்டு, பிரச்னை முடிக்கப்பட்டது. விஷயம் தெரிந்ததும் அந்த ஆசிரியை, 'இந்த வேலையே வேண்டாம்’ என்று விலகிச் சென்றுவிட்டார்.
கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியை தேர்வுத்தாளை திருத்திக்கொண்டிருந்தார். வினாத்தாளில் கேள்வி ஒன்றுக்கு, பாலியல் தொடர்பான தன் இச்சைகளை ஆசிரியையுடன் சம்பந்தப்படுத்தி ஒன்றரைப் பக்கத்துக்குப் பதிலாக எழுதியிருந்தான் ஒரு மாணவன்.
உயர் வர்க்கக் குழந்தைகள் படிக்கும் நாமக்கல் பள்ளி அது. சில மாணவர்கள் கழிப்பறையில் ஆபாச அடைமொழிகளால் பள்ளியில் பணிபுரியும் பலரையும் மாணவிகளின் பெயரையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். விசாரணையில் அந்த மாணவர்களைக் கண்டுபிடித்து பள்ளி நிர்வாகம் மாணவர்களை டிஸ்மிஸ் செய்தது. தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட அந்த மாணவர்கள், இப்போது மனநல ஆலோசனையில் இருக்கிறார்கள்.
பள்ளிக்கூட வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் ஒவ்வொரு நாளையும் பதற்றத்துடன் கழிக்கிறார்கள். '15 வயதில் ஆபாசப் படம், 16 வயதில் காதல், 17 வயதில் வீட்டைவிட்டு ஓடுவது’ எனச் சீரழிகிறது சிறுவர்களின் வாழ்வு. 'தங்கள் பிள்ளைகள் நல்லவர்கள்’ எனப் பெற்றோர்களின் உள்மனது அவர்களுக்கு ஆறுதல் சொன்னாலும், இன்னொரு புறம் சமூக யதார்த்தம் அவர்களைப் பதற்றத்திலேயே வைத்திருக்கிறது.
மாணவர்கள் மட்டும்தான் இப்படி என்று எண்ண வேண்டாம். இந்தப் படுகுழி சீரழிவில் மாணவிகளும் சிக்கியுள்ளனர்.
''சென்னையில் உள்ள மேல்தர வர்க்கக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடம் அது. வகுப்பு நடைபெறும்போது மாணவி ஒருத்தி வகுப்பறையில் மொபைலில் அடல்ட்ஸ் ஒன்லி வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதைக் கண்டுபிடித்த ஆசிரியை, 'உன் பெற்றோரை அழைத்துச் சொல்லட்டுமா?’ என்று கேட்க, 'நீங்க ஏன் இந்தக் கேள்வி எல்லாம் கேக்கிறீங்க? என் அப்பா அம்மாகிட்ட என்ன சொல்லப்போறீங்க? நான் நல்லாப் படிக்கிறேனா, ஒழுங்கா மார்க் வாங்குறேனா.... அதை மட்டும் பாருங்க’ என்று அலட்சியமாய் பதில் சொல்லியிருக்கிறாள். மதிப்பெண்களைத் தாண்டிய வாழ்க்கை மதிப்பீடுகளைக் கற்றுத் தராத பெற்றோர்களும் பள்ளிக்கூடங்களும்தான் இப்படியான நடத்தைகளுக்கு முழுப் பொறுப்பு'' என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.
ஒரு மிஸ்டுகாலில் தொடங்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையிலான உரையாடல், 'உங்க குரல் ரொம்ப அழகா இருக்கு’ என்று இழுத்து, ஆறே மாதத்தில் வீட்டைவிட்டு ஓடி வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளும் அளவுக்குச் செல்கிறது. சிறுவர்களோ, ஆபாசப் படங்களில் பார்க்கும் பெண்களைத் தேடிச் செல்வது, அதற்காகப் பணம் செலவழிப்பது, பணம் இல்லாதபோது பழகிய வீடுகளிலேயே திருடுவது, அதுவே சில நேரங்களில் கொலை வரை செல்வது என்று விபரீதமாகிவிடும். இத்தகைய சம்பவங்கள் பெரும்பாலானவற்றின் காரணங்களை ஆராயும்போது, சமூக வலைத்தளங்களும், செல்போன்களும்தான் முக்கியக் காரணமாக இருக்கின்றன. சமீபத்தில் மும்பையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று இதை உறுதிசெய்கிறது.
மும்பையைச் சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், நாடு முழுக்க பள்ளிச் சிறுவர்களிடம் நடத்திய ஆய்வில், 14 முதல் 18 வயது வரையிலான இளம் சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபட சமூக வலைத்தளங்களும், இணையம், செல்போன்களே முக்கியக் காரணம் என்று தெரியவந்துள்ளது. ஆய்வில் கலந்துகொண்டதில் 96 சதவிகித மாணவர்கள், போலிப் பெயர்களில் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்துள்ளனர். மிகவும் இறுகிய மனதுடன் சிதைந்த கூட்டுக்குள் வாழும் இளையோர், தங்களின் மனக்குறைகளை முகமே தெரியாத யாரோ ஒருவரிடம் முகநூலில் கொட்டித் தீர்க்கிறார்கள். விளைவு, இளவயது காதல், டேட்டிங், ஆடம்பரச் செலவுகளுக்காக கொலை, கொள்ளை என்று அவர்களின் வாழ்க்கை திசை மாறுகிறது. நவீன அறிவியல் புரட்சியின் சின்னங்களான இணையமும், செல்போனும் நம் பிள்ளைகளின் மனங்களை சிதைத்து வீசுகின்றன.
''நம் கற்பனைக்கு எட்டாத வகையில் தொழில்நுட்பம் உள்ளங்கைக்குள் மிக மலிவான விலையில் கிடைக்கிறது. அதன் பெரிய பக்கங்களில் அறிவுச் செல்வங்களும், அறிவியல் வியப்புகளும் கொட்டிக்கிடக்க... இன்னொரு பக்கத்தில் ஆபாச வக்கிரங்களும், அதை வடிகாலாக பயன்படுத்திக்கொள்ளும் வசதிகளும் இருக்கின்றன. இந்தத் தொழில்நுட்பங்கள் எப்படி தங்களின் குழந்தைகளைப் பாதிக்கின்றன என்பதுகூட பெரும்பாலான பெற்றோர்களுக்குப் புரிவதில்லை. அவசியத் தேவைக்கு ஒரு தொலைபேசி என்பதற்கு அப்பால், அதிநவீனத் தொலைபேசியை பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பதில் ஒளிந்திருப்பது குடும்ப கௌரவம். ஆனால், அந்த அதிநவீனத் தொலைபேசி எப்படி குடும்ப கௌரவத்தைக் காவு வாங்குகிறது என்பதைக்கூட இந்தப் பெற்றோர்கள் அறியாமல் இருப்பதுதான் அதிர்ச்சி. ஒருகாலத்தில் நடுத்தர வயதில் இருப்பவர்கள் செய்த ஆபாச சேட்டைகளை, இப்போது 12, 13 வயது சிறுவர்களே செய்கிறார்கள். மகனைப் போல், பேரனைப் போல இருக்கும் சிறுவன்கூட, தவறான எண்ணத்தோடு ஒரு பெண் மீது சாய்கிறான்!'' என்று ஆதங்கம் தெரிவிக்கிறார் அருள்மொழி.
13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பார்க்கவோ, பயன்படுத்தவோ அனுமதி இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில் கூறியிருந்தது. விபரீத செய்கைகளுக்கு வழிவகுக்கும் சமூக இணையதளங்கள் உள்ளிட்ட 13 இணையதளங்களைத் தடைசெய்ய அமெரிக்காவிடம் இந்தியா ஒத்துழைப்பும் கோரியிருந்தது. ஆனால், 'கருத்துரிமையில் தலையிட முடியாது’ என்று அமெரிக்க உள்துறை இதை நிராகரித்துவிட்டது. இந்த நிலையில், உள்ளூர் காவல் துறையால் இத்தகைய குற்றங்களைக் கண்காணிக்க முடியுமே தவிர, கட்டுப்படுத்த முடியாது என்பதே சமூக யதார்த்தம்.
12, 13 வயதினை உள்ளடக்கிய வளரிளம் பருவத்தில் குழந்தைகள் நுழையும்போது அவர்களின் மனம் புதிய விஷயங்களைத் தேடுகிறது. அவர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பது பெற்றோர்களுக்குத் தெரிவதே இல்லை. 'தன் பிள்ளை தப்பு செய்யாது’ என்று ஒவ்வொரு பெற்றோரும் தீர்மானமாக நம்புகின்றனர். யார் பிள்ளையாக இருந்தாலும் நடைமுறை உலகத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பதே உண்மை. அவர்கள், தாங்கள் சிறுவர்களாக இருந்த அந்தக் காலத்து பழங்கதைகளை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உள்ளங்கையில் அடங்கும் செல்போனில் உலகத்தின் அத்தனை வன்மங்களையும் பாதுகாத்துக்கொள்வதும், கண்டுபிடிக்கும் சூழல் எழும் சமயம், அவற்றை ஆதாரமே இல்லாமல் அழித்துவிடுவதும் இப்போது வெகு சுலபம். பெற்றோர்களுக்கு இந்தத் தொழில்நுட்பங்கள் புரிவது இல்லை. தங்கள் பிள்ளைகள் ஸ்மார்ட்போனில் சகல அப்ளிகேஷன்களையும் பயன்படுத்துவது குறித்து அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். மாறாக, அந்தப் பிள்ளைகள் உள்ளே வேறு ஒரு வினோத வக்கிர பயங்கர உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிதர்சனத்தைப் பெற்றோர் உணர்வதும் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் இப்போதைய அதிஅவசியப் பக்குவத் தேவை!
சமூகத்தில் என்ன மாற்றம் தேவை? - ஜெயந்தினி, உளவியல் மருத்துவர்
ஆண், பெண் குழந்தைகள் இணைந்து படிக்கும் பள்ளிக்கூடங்கள் இப்போது அருகி விட்டன. 2 வரை ஆண்கள் தனியாக பெண்கள் தனித்தனியாகப் படித்துவிட்டு, கல்லூரி செல்லும்போது திடீரென இருபாலரும் இணைந்து படிக்கும்போது அதிகக் கிளர்ச்சியடைகிறார்கள். எதிர்பாலினக் கவர்ச்சியைக் குறைத்து இயல்பான ஆண், பெண் நட்பை வளர்த்தெடுக்கும் விதத்தில் இருபாலர் பள்ளிகள் துவங்கப்பட வேண்டும்,
18 வயதுக்குக் கீழானவர்கள் இணையத்தைப் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். உலகின் பல நாடுகளில் இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதை அரசே செய்ய வேண்டும். செய்யாதபட்சத்தில் அரசியல் கட்சிகளும் சமூக இயக்கங்களும் இதற்காகப் போராட வேண்டும்.
மனிதர்கள் யாராக இருந்தாலும் ஒழுக்கம் தேவை. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஒழுக்கமின்மையை அனுமதிக்க முடியாது. சமூகச் சூழலை கருத்தில்கொண்டு, இத்தகைய வேலி நம் பிள்ளைகளுக்கு அவசியமாகிறது. அதை நெருக்கியும் போடவேண்டியதில்லை. மிகவும் விலக்கியும் போட வேண்டியதில்லை. பெற்றோர்களாகிய உங்களிடம் இருந்து அன்பு கிடைக்கவில்லை என்றால், கிடைக்கும் இடம் தேடி அவர்கள் சென்று விடுவார்கள்!
பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
நம்மால் கைவிட முடியாத எதையும் நம் குழந்தைகள் கைவிட மாட்டார்கள். நாம் கையில் ஒன்றும், பையில் ஒன்றுமாக இரண்டு செல்போன்கள் வைத்துக்கொண்டு பிள்ளைகளைப் 'பயன்படுத்த வேண்டாம்’ என்று சொன்னால் அதை அவர்கள் ஏற்கமாட்டார்கள். ஆகவே, தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவதைக் காட்டிலும் அதன் ஆபத்தான பக்க விளைவுகளை முதலில் பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதைச் சரியான முறையில், பொருத்தமான சந்தர்ப்பத்தில் குழந்தைகளுக்கும் புரியவைக்க வேண்டும்.
அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் பள்ளிக்கூடம் படிக்கும் மகனுக்கோ, மகளுக்கோ செல்போன் என்பது அவசியமாகிறது. அதுவே, யாரோ ஒருவர் வேலைக்குச் சென்று, ஒருவர் வீட்டில் இருக்கிறார் என்றால் பிள்ளைகளுக்கு ப்ளஸ் 2 முடிக்கும் வரை செல்போன் அவசியம் இல்லை. எப்படி இருந்தாலும் பள்ளிச் சிறுவர்களுக்கு செல்போன் வாங்கித் தரும்போது, அது அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட மாடல் செல்போனாக இருப்பது அவசியம். அவர்களுக்கு அது போதுமானதும் கூட. 'ஏழை வீட்டுப் பையன் வெச்சிருக்குற அதே சாதாரண செல்போனை, என் பையனும் வெச்சிருக்குறதா?’ என இதில் கௌரவம் பார்த்து, ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுப்பதும், பின்னர் நிகழும் விளைவுகளுக்கு பெரும்பாலும் காரணமாகும்!
இன்று சமூக வலைத்தளங்களே கதி என கிடப்பதும், விட்டில்பூச்சிகளாக அதன் கவர்ச்சியில் சிக்கி சீரழிவதும் பெரும்பகுதி கல்லூரி மாணவர்களே. நண்பர்களுடனான புகைப்படங்களை பகிர்வதில் துவங்கி, குடும்பம் பற்றிய தகவல்களை பொதுவெளியில் கொட்டுவது வரை அது எல்லையற்றுப் போகிறது. ஆகவே, கல்லூரி வயதில் உள்ளப் பிள்ளைகளின் பெற்றோர் எது அந்தரங்கம், எது பொதுவானது என்பதை பிள்ளைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.
றீ வீதியில் இறங்கி உடல் தசைகள் புத்துணர்வு பெற ஓடியாடுவதுதான் விளையாட்டு. வீடியோ கேம்ஸ் என்பது விளையாட்டு அல்ல, அது நோய். தங்கள் பிள்ளைகள் சிறப்பாக வீடியோ கேம்ஸ் ஆடுவதாக மகிழ்ச்சி அடைவதை நிறுத்திக்கொண்டு, அவர்களுக்கு நடைமுறை விளையாட்டுகளை பழக்கப்படுத்த வேண்டும். பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்க ஊக்குவிக்க வேண்டும்!
எந்நேரமும் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கும் குழந்தைகளின் கற்பனைத் திறனும், மூளையின் செயல்பாடும் முழு வளர்ச்சியடைவதில்லை. கையால் எழுதுவதும், ஓவியங்கள் வரைவதும் மூளை நரம்புகளை உற்சாகப்படுத்தும்.
பெண் குழந்தை வயதுக்கு வருவதை பெரிய விழாவாகக் கொண்டாடி, 'நீ பெரியவள் ஆயிட்டே. இனி வெளியில் போகாதே’ என முடக்கிப் போடாமல், அது பருவ வயதின் இயற்கையான மாற்றம் என்பதை உணர்ந்து அதை இயல்பாக எதிர்கொள்ளும் மன தைரியத்தை உருவாக்குங்கள்!
குழந்தைகளின் முதல் ரோல்மாடல் அப்பா, அம்மாதான். ஆகவே, அவர்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நல்ல பல பழக்கங்களை நீங்கள் கைக்கொள்ளுங்கள். நல்ல ரோல்மாடல் பெற்றோரிடமிருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, மோசமான நடத்தைகளை கற்பூரமாகப் பற்றிக்கொள்வார்கள்... உஷார்
No comments:
Post a Comment