Thursday, August 29, 2013

''குற்றப்பத்திரிகைக்கு ஒரு சட்டம்.. மெட்ராஸ் கஃபேக்கு வேறு சட்டமா? - சீமான்
''ஈழப் போராளி பிரபாகரனை கொச்சைப்படுத்தி எடுத்துள்ள 'மெட்ராஸ் கஃபே’ படத்தை வெளியிட தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் மறுத்துவிட்டனர். இந்தச் சூழ்நிலையில் வடநாட்டில் கடந்த 23-ம் தேதி 'மெட்ராஸ் கஃபே’ ரிலீஸாகி இருக்கிறது. 'இந்தியில் 'மெட்ராஸ் கஃபே’ படத்தை வெளியிட்டதன் மூலம் வட இந்தியர்கள் மனதில் பிரபாகரன் குறித்த தவறான பிம்பத்தை காங்கிரஸ் பரப்பி வருகிறது'' - சீற்றமாக சொல்கிறார் சீமான்.
 
''தமிழனைத் தரங்கெட்டவனாய் சித்திரித்து 'மெட்ராஸ் கஃபே’ படத்தை தயாரித்து இயக்கி இருக்கும் சுஜித் சிர்க்காரை கேட்கிறேன். உண்மையிலேயே நீ ஆண்மகனாய் இருந்திருந்தால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரனைத் தவறாகச் சித்திரித்து படம் எடுத்து இருப்பாயா?
இங்கே இந்தியில் படம் எடுக்கும் நீ எதற்காக இலங்கை சென்றாய்? இரண்டு முறை எதற்காக ராஜபக்ஷேவை சந்தித்தாய்? உண்மையைச் சொல். ராஜபக்ஷேவின் ரத்தம் வழியும் கைகளால் வாங்கிய பணத்தில்தான் 'மெட்ராஸ் கஃபே’ படத்தையே தயாரித்து இருக்கிறாய். நீ சன்மானம் பெற தமிழனின் தன்மானத்தின் மேல் கைவைக்கிறாயா? தொலைக்காட்சிப் பெட்டி இங்கே... ரிமோட் கன்ட்ரோல் ராஜபக்ஷே கையிலா? ராஜீவ் காந்தி இறந்து 22 வருடங்கள் ஆகிறது. உடலில் ஆறிப்போன காயத்தை மீண்டும் கத்திவைத்து புண்ணாக்கிப் பார்க்கும் புத்தி எப்படி வந்தது? ராஜீவ் காந்தியின் படுகொலையில் சுப்பிரமணியன் சுவாமி, சந்திராசாமிக்கு பங்கு உண்டு என்று ஜெயின் கமிஷன், வர்மா கமிஷன் வாக்குமூலங்களில் உள்ளது. நான் அவர்கள் கதாபாத்திரத்தை வைத்து ராஜீவ் கொலையைப் படமாக்கத் தயார். மத்திய அரசு அனுமதிக்குமா?
 
உன் நெஞ்சில் துணிவிருந்தால் இந்திரா காந்தி படுகொலையைப் படமாக்கப்போகிறேன் என அறிவித்துப் பார். சினத்தில் சீறிவந்து சீக்கியர்கள் உன்னைச் சின்னாபின்னமாய் சிதைத்துப் போட்டுவிடுவார்கள். பொற்கோயிலில் காலடி வைத்துப்பார். உன்னைக் கருவறுத்துக் கழுகுக்கு விருந்துவைப்பார்கள். உனக்குத் திராணி இருந்தால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதைப் படமாக்கப்போகிறேன் என்று சொல்லிப்பார். சங்பரிவார் அமைப்பினர் உன் சங்கை அறுப்பார்கள்.
 
ராஜீவ் காந்தி மரணத்தில் நிகழ்ந்த உண்மையான நிகழ்வுகளை இயக்குநர் செல்வமணி தன்னுடைய 'குற்றப்பத்திரிகை’ படத்தில் பதிவுசெய்திருந்தார். செலவழித்து எடுத்த படத்தின் படச்சுருளை குப்பைக் குவியலாகத் தூக்கி வீசியது சென்சார் போர்டு. தமிழன் படைக்கும் படத்துக்கு ஒரு சட்டம். வடநாட்டு இயக்குநர் இயக்கிய 'மெட்ராஸ் கஃபே’ படத்துக்கு வேறு சட்டம். மும்பையில் 'நாம் தமிழர் இயக்கம்’, 'பாரதிய ஜனதா கட்சி’யைச் சேர்ந்தவர்கள் 'மெட்ராஸ் கஃபே’ படத்தை எதிர்த்துப் போராடுகின்றனர்.
 
அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி அப்பாவியான 20 ஆயிரம் ஈழத் தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜீவ் காந்தி கதாநாயகன்; தமிழ் மக்களைத் தற்காத்து நின்ற பிரபாகரன் வில்லனா? காங்கிரஸார் பிரபாகரனை ஆயுத வியாபாரி என்கிறார்களே... போஃபர்ஸ் பீரங்கியை 400 கோடிக்கு வாங்கிக் குவித்த ராஜீவ் காந்தி ஆயுத வியாபாரியா? தன்னுடைய உயிரையே ஆயுதமாக ஏந்திப் போராடும் பிரபாகரன் ஆயுத வியாபாரியா? ராஜீவ் காந்தியை எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்ந்துகொள். ஆனால், பிரபாகரனை இகழ்வதற்கு நீங்கள் யார்? நாங்கள் ஈழத்தைப் பற்றி பேசினால் அது வெளிநாட்டு விவகாரம் என்று விமர்சித்த காங்கிரஸ், இப்போது இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகட்டிக் கொடுத்து இருக்கிறோம்; மருத்துவமனை கட்டித் தந்திருக்கிறோம் என்று எதற்காக தம்பட்டம் அடித்துக்கொள்கிறது? நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது வேறு காங்கிரஸ் கட்சிக்குத் தோல்வி காய்ச்சல் அடிக்க ஆரம்பித்துவிட்டது. இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்போது 'மெட்ராஸ் கஃபே’ படத்தை வெளியிட்டு ராஜீவை கதாநாயகனாகவும் பிரபாகரனை வில்லனாகவும் தோற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.
 
ஆஸ்திரேலியாவில் வட மாநில மாணவனை அடித்தால் 'இந்திய மாணவன்’ என்று இறுமாப்பாய் குரல் கொடுக்கும் பிரதமர், ராமேஸ்வர மீனவனை அடித்தால் 'தமிழக மீனவன்’ என்று தள்ளிவைக்கிறார்.
இப்போது உலகத்தில் வாழும் ஒட்டுமொத்த தமிழனையும் பயங்கரவாதிபோல சித்திரிக்கிறது 'மெட்ராஸ் கஃபே’ திரைப்படம். இது வட மாநில சகோதரர்களிடம் இருந்து தமிழர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி.
 
தி.மு.க. ஆட்சியில் என்னை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்க கருணாநிதி காட்டிய சட்டக் காரணம் என்ன தெரியுமா? 'நீ பிரபாகரனை சொந்த அண்ணன் என்று சொல்கிறாய்? அதனால் உன்னைச் சிறையில் அடைக்கிறேன்’ என்றுதான் என்னைச் சிறையில் அடைத்தார்கள். காந்தி தாத்தா... நேரு மாமா... சோனியா அன்னை என்றால் தப்பில்லை. ஆனால், தேசிய தலைவர் மேதகு பிரபாகரனை அண்ணன் என்று சொன்னால் அவதூறு என்று சொல்லி என்னைச் சிறையில் அடைத்தனர். இந்த மனோபாவத்தை விதைக்க நினைக்கிறார்கள். விடமாட்டான் மானமுள்ள தமிழன்'' எனப் பொங்குகிறார் சீமான்.
மும்பைக்கு இவரை அழைத்துச் சென்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டு வருகிறார்களாம் அங்குள்ள நாம் தமிழர் இயக்கத்தினர்!
- எம்.குணா

No comments:

Post a Comment