Thursday, August 22, 2013

மோஸர்-'சோலார் பாட்டில் லைட்’!
 
 
குடித்துவிட்டு தூக்கி எறியும் தண்ணீர் பாட்டிலைக்கொண்டு நம்மால் என்ன செய்ய முடியும்? நசுக்கிக் கசக்கி வீசி எறிய முடியும்! ஆனால், ஒரு தண்ணீர் பாட்டில் மூலம் உலகின் பல லட்சம் ஏழைகளை இருளில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்து வந்திருக்கிறார் ஆல்ஃபிரட் மோஸர்.
 
'நவீன உலகின் தாமஸ் ஆல்வா எடிசன்’ என்று கொண்டாடப்படும் இவரது கண்டுபிடிப்பின் பெயர், 'சோலார் பாட்டில் லைட்’!
 
ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் நீரை நிரப்பி, வீட்டுக் கூரையில் ஒரு துளையிட்டு, பாட்டிலின் அடிப்பகுதி வீட்டுக்குள் இருப்பதுபோல் மாட்டிவிட்டால் பகல் முழுவதும் மின்சாரம் இல்லாமலேயே வெளிச்சம் தயார்! உலகின் லட்சக்கணக்கான ஏழைகளின் வீடுகளில் ஒளியேற்றிக் கொண்டிருக்கும் இந்தக் கண்டுபிடிப்புக்கு, நோபல் பரிசு தர வேண்டும் என்ற குரல்கள் இப்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
 
ஆல்ஃபிரட் மோஸர், பிரேசில் நாட்டில் ஒரு மெக்கானிக். அவர் பெரிதாகப் படித்தவரோ, பணம் படைத்தவரோ அல்ல. 2002-ம் ஆண்டு பிரேசிலில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. 'தொழிற்சாலை களுக்கு மட்டுமே மின்சாரம்’ என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏழை மக்கள் மின்சாரம் இல்லாமல் தடுமாறினார்கள். அப்போதுதான் மோஸருக்கு தன் முதலாளி செய்த ஒரு செயல் ஞாபகம் வந்தது. மோஸரின் முதலாளி, ஒருமுறை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் நீரை நிரப்பி, அதில் சூரிய ஒளியைக் குவியச்செய்து, அந்த ஒளியில் கிடைத்த வெப்பத்தின் மூலம் காய்ந்துபோன புதர்களை எரித்திருக்கிறார். இது மோஸரின் மூளைக்குள் மின்னல் அடிக்க... அதே அறிவியலை சற்று மாற்றி யோசித்தார்.
 
இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பாட்டிலில், சுத்தமான நீரை நிரப்பிக்கொண்டார். அந்த நீர், பாசி பிடிக்காமல் வெண்மை நிறத்துடன் இருப்பதற்கு, சிறிது குளோரின் கலந்து, பாட்டிலை மூடினார். (பாட்டிலின் மூடி, கறுப்பு நிறத்தில் இருந்தால் கூடுதல் வெளிச்சம் வரும்!) வீட்டின் கூரை மீது ஏறி, பாட்டில் இறுக்கமாக நுழையும் அளவுக்கு கூரையில் ஒரு துளை அமைத்தார். பாட்டிலை உள்ளே செருகி, அதன் மேல்பகுதி (கால்வாசி) கூரையின் வெளியே தெரியுமாறும், மீதமுள்ள பகுதி (முக்கால்வாசி) வீட்டினுள் இருக்குமாறும் அமைத்தார். மழை நீர் உள்ளே வரக் கூடாது என்பதற்காக, அந்த பாட்டிலைச் சுற்றி ஒரு பசையைக் கொண்டு மூடினார். பிறகு, வீட்டுக்குள் வந்துப் பார்த்தார். 60 வாட்ஸ் பல்பின் வெளிச்சத்தில் வீடு பிரகாசித்தது.
 
உண்மையில், 'தான் ஓர் அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறோம்’ என்ற உணர்வு மோஸருக்கு ஏற்படவில்லை. 'ஏதோ நாம் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருப்பதாக’ நினைத்து மகிழ்ந்தார். இவரது சூரிய விளக்கைக் கண்ட அக்கம்பக்கத்து வீட்டினர், ஆர்வத்துடன் கேட்க... அவர்களுக்கும் செய்து கொடுத்தார்.
 
 
இந்த சோலார் பாட்டில் விளக்கு, 24 மணி நேரமும் வெளிச்சம் தராது. பகலில், சூரிய ஒளியின் அளவுக்கு ஏற்ப வீட்டுக்குள் வெளிச்சத்தைக் கொண்டுவரும். ஆனால், பகல் - இரவு என எல்லா நேரங்களிலும் இருண்ட தகரத் தடுப்புக்குள் வாழும் ஏழை மக்களுக்கு பகல் பொழுது முழுக்க, எந்தச் செலவும் இல்லாமல் வெளிச்சம் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா? மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டிய பெரும்பணத்தை, அந்த பாட்டில் விளக்கு மிச்சப்படுத்தியது!
 
அந்த விளக்கைப் பொருத்த, எந்தத் தொழில்நுட்ப வல்லுநரும் தேவை இல்லை. ஒரு புரட்சியைப் போல மளமளவென சோலார் பாட்டில் விளக்குகள் பிரேசில் முழுக்கப் பரவின. மக்கள் 'மோஸர் லைட்’ என்றே அதை அழைத்தனர்.
 
இந்த விளக்கின் அறிவியல் அடிப்படை, மிக எளிமையான இயற்பியல் சூத்திரத்தின்படி அமைந்தது. ஒளியானது, எந்த ஓர் ஊடகத்தின் வழியே (காற்று, தண்ணீர்... போன்றவை) பயணிக்கிறதோ, அந்த ஊடகத்தின் தன்மைக்கேற்ப சிதறடிக்கப்படுகிறது. இந்த வகையில் தூய நீரின் வழியே ஒளி சிதறடிக்கப்படும்போது ஒளி விலகல் ஏற்பட்டு, வெளிச்சம் கிடைக்கிறது. ஒருவேளை, பாட்டில் நீரில் குளோரின் சேர்க்கப்படாமல் பாசி பிடித்து விட்டால், வீட்டுக்குள் வரும் வெளிச்சம் பச்சை நிறத்தில் இருக்கும், அவ்வளவுதான். இது எளிய தொழில்நுட்பம்தான்... ஆனால், இதுவரை யாரும் இதைக் கண்டறியவில்லை. எனினும், 2002-ம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த விளக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் ஊடகங்களில் பேசப்படுகிறது. ஆனால், அதற்குள் லட்சக்கணக்கான ஏழைகளின் வீடுகளில் இந்த மோஸர் விளக்கு பிரகாசித்துக்கொண்டிருந்தது. 
 
மின் இணைப்பு இல்லாத வீடுகளில் மட்டுமல்ல.. மின் இணைப்பு உள்ள வீடுகளிலும் பாட்டில் வெளிச்சம் பளிச்சிடுகிறது. காரணம், பல நாடுகளின் மின் கட்டணம், ஏழைகளால் கட்ட முடியாத அளவுக்கு மிக மிக அதிகமாக இருப்பதுதான். இந்த விளக்கு, அவர்களுக்கும் பெரிய அளவில் பணத்தை மிச்சப்படுத்தித் தருகிறது. வெளிச்சம் அதிகம் தேவைப்பட்டால், நான்கைந்து பாட்டில்களை செருகி வைத்துக்கொள்கிறார்கள். இதனால் பிரேசில், கென்யா, தான்சானியா, பங்களாதேஷ், ஃபிஜி, இந்தியா என உலக ஏழைகளின் சின்னம் போல இந்த விளக்கு பரவிக்கொண்டிருக்கிறது.
 
சதுர வடிவிலான சிறிய தகரத்தில் திருத்தமாகத் துளையிட்டு, அதில் பாட்டிலை பொருத்தி விற்பனை செய்யும் அளவுக்கு, இது ஒரு சிறு வணிகமாகவும் அங்கு மாறியிருக்கிறது. எந்தவித ஊடக விளம்பரங்களும் பெரிய நிறுவனங்களின் வர்த்தக நுணுக்கங்களும் இல்லாமல் இந்த விளக்கின் ஒளி பரவிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
இதன் மறைமுகமான பொருள் என்னவெனில், 'பகலில் மட்டுமேனும் வெளிச்சம் கிடைக்காதா?’ என ஏங்கித் தவிக்கும் கோடிக்கணக்கான ஏழை மக்கள், உலகமெங்கும் இப்போதும் நிறைந்திருக்கிறார்கள். நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள், பெரும்பாலும் மருத்துவம், எலக்ட்ரானிக் கருவிகள் போன்ற பணம் கொழிக்கும் துறைகளிலேயே சுற்றி வருகின்றன. ஏழைகளின் வாழ்க்கைச் சிக்கலை தீர்த்துவைக்கும் கண்டுபிடிப்புகள் மிகவும் குறைவே.
 
சோலார் பாட்டில் விளக்கை கண்டறிந்துள்ள ஆல்ஃபிரட் மோஸர், இப்போதும் வறுமையான மெக்கானிக்காகவே வாழ்ந்துவருகிறார். இருந்தபோதிலும், இந்த விளக்கை வைத்துப் பணம் பண்ண எண்ணாத மோஸர், இப்படிக் கூறுகிறார்...
 
''இத்தனை லட்சம் மக்கள் சோலார் பாட்டில் விளக்கைப் பயன்படுத்துவதை நினைத்து எனக்குப் பெருமையாக உள்ளது. ஆனால், இந்தக் கண்டுபிடிப்புக்கு நான் சொந்தம் கொண்டாட மாட்டேன். ஏனெனில், சூரிய ஒளியை நான் தயாரிக்கவில்லை. அதனால் அதற்கு நான் உரிமை கோரவும் முடியாது!''

No comments:

Post a Comment