ஒரு ஊர்ல ஒரு ரூபா...
புதைகுழியில் வீழ்ந்துகொண்டு இருக்கிறது இந்திய ரூபாயின் மதிப்பு. நீங்கள் ஒரு அமெரிக்க டாலரை வாங்க வேண்டுமானால், 65 இந்திய ரூபாய்களைக் கொடுத்தாக வேண்டும். இந்தியப் பொருளாதாரம், இத்தனை மோசமான நிலையில் இதற்கு முன்பு இருந்ததே இல்லை. சீட்டுக்கட்டு மாளிகையைப் போல சரிந்துவரும் இந்திய ரூபாயின் மதிப்புக் காரணமாக, பங்குச் சந்தை முதல் காய்கறிச் சந்தை வரையிலும் எங்கும் எதிலும் தடுமாற்றம்.
சரி... ரூபாயின் மதிப்பு ஏன் குறைந்தது?
இந்தக் கேள்விக்கான பதில், மொத்த இந்தியப் பொருளாதாரத்துடனும், அரசின் கொள்கைகளுடனும் பின்னிப்பிணைந்த ஒன்று. சமீபகாலமாக இந்தியப் பிரதமரும், நிதி அமைச்சரும் 'நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மிகவும் அபாயகரமான எல்லைக்குச் சென்றுகொண்டிருக்கிறது’ என்று கவலை தெரிவித்துவருவதைப் பார்த்திருக்கலாம். அது என்ன 'நடப்புக் கணக்குப் பற்றாக்குறை?’
'ஒரு நாட்டின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடைப்பட்ட இடைவெளி’ என்று இதை எளிமையாக புரிந்துகொள்ளலாம். இறக்குமதி அதிகம்; ஏற்றுமதி குறைவு. அதாவது செலவு அதிகம், வரவு குறைவு. இரண்டுக்கும் இடைப்பட்டப் பற்றாக்குறைதான் நடப்புக் கணக்குப் பற்றாக் குறை.
இந்திய ரிசர்வ் வங்கியின் வரையறைப்படி, நடப்புக்கணக்குப் பற்றாக்குறை என்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவிகி தத்துக்கு அதிகமாகக் கூடாது. ஆனால், இப்போ தைய நிலவரம் 5 சதவிகிதத்தைத் தொட்டு விட்டது. 2012-13 நிதியாண்டு நிலவரப்படி, இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் மதிப்பு 9,420 கோடி அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில், 5,65,200 கோடி ரூபாய். 'இப்படி அதிகரித்துக்கொண்டேபோனால், இந்தியா வுக்கான கடன் பெறும் தகுதியைக் குறைத்து விடுவோம்’ என்று ஸ்டாண்டர்டு அண்ட் புவர் என்ற சர்வதேசத் தர நிர்ணய நிறுவனம் எச்ச ரித்துள்ளது.
இதைச் சரிசெய்ய என்ன செய்வது?
ஏற்றுமதியை அதிகரிப்பது ஒரு நீண்ட காலத் தீர்வு. உடனடித் தீர்வு என்றால், தற்போது இந்தியாவிடம் அந்நியச் செலாவணியாக கையிருப்பில் உள்ள 29,000 கோடி டாலரில் இருந்து எடுத்து சமாளிக்கலாம். ஆனால், 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அடைத்தே ஆக வேண்டிய வெளிநாட்டுக் கடன் மட்டுமே 17,200 கோடி அமெரிக்க டாலர், மலைபோல் மிரட்டுகிறது. இந்தப் பணத்தையும் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் இருந்து எடுத்து அடைத்துவிட்டால், இந்தியாவிடம் வெறும் 2,500 கோடி டாலர் மட்டுமே அந்நியச் செலாவணியாக மிச்சம் இருக்கும். அப்புறம் உலகில் எந்த நாடும் இந்தியாவை மதிக்காது. இந்திய ரூபாயின் மதிப்பு என்பது, எவ்வளவு அதிகமான அமெரிக்க டாலர்களை அந்நியச் செலாவணியாக வைத்திருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. ஆகவே, அந்நியச் செலாவணியில் அதிகம் கைவைக்க முடியாது.
வேறு என்னதான் செய்வது?
'இந்த நிலைமையைச் சமாளிக்க அந்நிய முதலீடுகளை நாட்டுக்குள் மேலும் கொண்டுவர வேண்டும். அதிகமான முதலீடுகள் உள்ளே வரும்போது இந்த நிலைமை சரியாகும்’ என்கிறார் சிதம்பரம். ஆனால், யதார்த்தம் அவ்வாறு இல்லை. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 500 கோடி டாலர் மதிப்புள்ள அந்நிய முதலீடுகள், இந்திய சந்தையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
ஏன் அவர்கள் வெளியேறினார்கள்? அதற்கு இரண்டு காரணங்கள். அவர்களுக்கு இந்திய சந்தையில் கிடைக்கும் லாபம் போதுமானதாக இல்லை. மன்மோகன் மேற்கொள்ளும் 'சீர்திருத்தத்தின்’ வேகம் போதவில்லை என்று அவர்கள் கருதுகின்றனர். இரண்டாவது, இந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தண்ணீர் உள்ள இடத்தை நோக்கிப் பறக்கும் கொக்குகள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் மிகப் பெரிய பொருளாதாரத் தள்ளாட்டம் ஏற்பட்டபோது, அங்கிருந்த தங்கள் முதலீடுகளை உருவிக்கொண்டுவந்து இந்திய சந்தைகளில் கொட்டினார்கள். இப்போது அமெரிக்காவில் நிலைமை கொஞ்சம் சீரடைந்துள்ளது. உடனே இங்குள்ள முதலீடுகளை பெயர்த்து எடுத்துக்கொண்டு அங்கு கிளம்பிவிட்டார்கள். இப்படிப்பட்ட பச்சோந்தி முதலீட்டாளர்களால்தான் இந்தியப் பொருளாதாரம் எதிர்பாராத பெரும் சரிவுகளை சந்திக்கிறது. ஆனால், பிரதமரும் நிதி அமைச்சரும் 'அதே முதலீட்டாளர்களை மேலும் ஈர்க்க வேண்டும், அதுதான் தீர்வு’ என்கிறார்கள்.
இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன், கடந்த ஆறு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2009-ம் ஆண்டு 13,53,000 கோடி ரூபாயாக இருந்த வெளிநாட்டுக் கடன், 2012 மார்ச் மாதத்தில் 43,43,400 கோடியாக உயர்ந்தது. இந்தக் கடன்களில் 44 சதவிகிதத்தை வாங்கியிருப்பது, ரத்தன் டாடா மற்றும் அம்பானி குழும நிறுவனங்களே. இவை தனிப்பட்ட நிறுவனங்கள் என்றபோதிலும், இவர்கள் வாங்கிஇருக்கும் வெளிநாட்டுக் கடன்களுக்கும் இந்திய அரசுதான் பொறுப்பு. இந்த நிறுவனங்கள் வாங்கியிருக்கும் பல லட்சம் கோடிக் கடன்களை திருப்பிச் செலுத்தாததும், ரூபாய் மதிப்பு சரிவடைய இன்னொரு முக்கியக் காரணம்.
மறுபக்கம் அந்நியச் செலாவணி, டாலர் கையிருப்பு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை... இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டுதான் இந்தியப் பொருளாதாரத்தின் தடுமாற்றத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. இந்திய விவசாயிகள் தொடர்ச்சியாகத் தற்கொலை செய்துகொள்வதும், அத்தியாவசியப் பொருட்கள் மேலும் மேலும் விலை உயர்ந்து கொண்டே செல்வதும்தான் பொருளாதாரத் தள்ளாட்டத்துக்கான உண்மையான அறிகுறிகள். அவற்றைச் சரிசெய்ய, சிதம்பரமும் பேசுவது இல்லை; மன்மோகனும் பேசுவது இல்லை. மாறாக, விவசாயம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு வழங்கப்பட்டுவரும் மானியங்களை தொடர்ந்து துண்டித்துக்கொண்டே வருகிறார்கள்.
வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் தொலைக்காட்சிகளுக்கு, 35 சதவிகிதம் வரை வரி விதித்துள்ளார் சிதம்பரம். நான்கைந்து வருடங்கள் சிங்கப்பூரில் உழைத்துவிட்டு, ஊருக்கு வரும்போது ஒரு டி.வி. வாங்கி வந்தவர்கள் இனி அதைக்கூட செய்ய முடியாது. இதைவிட அதிர்ச்சி என்னவெனில், இதுபோன்ற 'சீர்திருத்தங்கள்’ மேலும் தொடருமாம்.
அய்யய்யோ!
ஏன் சரிந்தது இந்திய ரூபாய்?
வ.நாகப்பன், பங்கு சந்தை பொருளாதார நிபுணர்
''இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதற்கு, டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது ஒரு காரணம். அதைத் தவிர்த்துப் பார்த்தால் நமது பொருளாதாரம் வலுவாக இல்லை என்பதுதான் நிஜமான காரணம். இது இன்று நேற்று நடந்தது இல்லை. மிக நீண்ட வருடங்களாக சுணக்கம் அடைந்துவந்த இந்தியப் பொருளாதாரம், கடந்த நான்கைந்து ஆண்டுகளாக மிகவும் கீழே சென்றுவிட்டது. அதன் எதிரொலிதான் ரூபாய் மதிப்பு சரிவு. குறிப்பாக, இந்திய சந்தையில் இருந்த பெரும் தொகையிலான முதலீட்டை, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மொத்தமாக எடுத்துச் சென்றுவிட்டதுதான் இந்த திடீர் சரிவுக்குக் காரணம். இதை சீரமைக்க நிதியமைச்சர் சிதம்பரம் எடுத்துவரும் நடவடிக்கைகள் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளன. ஒருவேளை இந்த நடவடிக்கைகள் நான்கைந்து வருடங்களுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டிருந்தால் நிலைமை இப்போது இன்னும் சீரடைந்திருக்கலாம்''
ஷோமே கமிட்டி தெரியுமா?
இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்துள்ள நாடு எது தெரியுமா? இந்தியப் பெருங்கடலில், ஆப்பிரிக்காவுக்கு அருகில் அமைந்துள்ள சின்னஞ்சிறு தீவான மொரீஷியஸ்தான். பொதுவாக, வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்தியாவில் மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். இந்த வரியை தங்கள் நாட்டிலும் கட்டலாம் அல்லது இந்தியாவிலும் கட்டலாம். மொரீஷியஸில் மூலதன ஆதாய வரி 0%. இதனால் இந்தியாவில் முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், மொரீஷியஸில் பெயருக்கு ஓர் அலுவலகத்தை திறந்து விடுகின்றன. சட்டப்படி அங்கு பதிவுசெய்துவிட்டு, அங்கிருந்து இந்தியாவில் முதலீடு செய்கிறார்கள். இதனால் மூலதன ஆதாய வரியாக செலுத்தவேண்டிய பல்லாயிரம் கோடி அவர்களுக்கு லாபம்.
வோடஃபோன் நிறுவனம் இப்படி 11,000 கோடி ரூபாய் மூலதன ஆதாய வரியைச் செலுத்தாமல் தப்பித்தது. 'அதைக் கட்டவேண்டும்’ என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை, 'செலுத்தத் தேவையில்லை’ என உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அப்போது நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, வரி தவிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான பொது விதியை (General Anti Avoidance Rules) உருவாக்கினார். இதன்படி, வரி தவிர்ப்பை மட்டுமே நோக்கமாக கொண்ட வெளிநாட்டு முதலீட்டுகளுக்கு வரிச் சலுகைகள் ரத்து செய்யப்படும். உண்மையாகவே இந்தச் சட்டம் இந்தியாவுக்கு நன்மை செய்யக்கூடியதுதான். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களோ... 'நாங்கள் மொத்தமாக முதலீடுகளைத் திரும்பப் பெற்றுவிடுவோம்’ என்று மிரட்டின. இதற்கிடையே சிதம்பரம் நிதி அமைச்சர் ஆனார். வந்த வேகத்தில் ஷோமே கமிட்டி (Shome Committee) யை அமைத்து, பிரணாப் அமைத்த விதியை ஆராயச் சொன்னார். எதிர்பார்த்ததுப் போலவே அந்த கமிட்டி ஆராய்ந்து, 'பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழக்கம்போலவே வரிச் சலுகைகளை வழங்கலாம்’ என்று பரிந்துரைத்தது. அதைச் சிதம்பரமும் ஏற்றுக்கொண்டார்.
இந்த மொரீஷியஸ் நிறுவனங்களுக்கு மூலதன ஆதாய வரியை முறையாக வசூலித்தாலே, ஒவ்வோர் ஆண்டும் பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் இந்தியாவுக்குக் கிடைக்கும்!
No comments:
Post a Comment