'இந்த பூமியிலேயே பெண்கள் வாழ்வதற்கு மிகவும் அபாயகரமான நாடுகளில் ஒன்று இந்தியா’ என்கிறது அண்மையில் வெளியான பி.பி.சி-யின் டாக்குமென்டரி ஒன்று. அதை உண்மை என உணர்த்துகிறது, இப்போது மும்பையில் பெண் புகைப்பட நிருபர் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் பாலியல் வன்கொடுமை.
'பாரதத் தாய்’ என்றும், 'பூமி மாதா’ என்றும் பூச்சுற்றும் நமது ஆண்களின் ஆழ்மன வக் கிரம், டெல்லியிலும், மும்பையிலும், இந்த நாட்டின் பல்லாயிரக்கணக்கான சிறு நகரங்களிலும், லட்சக்கணக்கான கிராமங்களிலும் ஒவ்வொரு நாளும் பெண்களை வதைத்துக் கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் திருச்சியில் வல்லுறவுகளுக்கு பலியாகி தண்டவாளத்தில் உடல் சிதறிக் கிடந்த தௌஹித் சுல்தானா என்ன பாவம் செய்தாள்? பெண்கள், வீட்டைவிட்டு வெளியே வரமுடியவில்லை. வெறிநாயின் வேட்கையோடு ஆண்கள் காத்திருக்கிறார்கள். தத்தமது வீடுகளில் தாய்க்கு மகனாக, தங்கைக்கு அண்ணனாக, குழந்தைக்கு தந்தையாக இருக்கும் இவர்கள்... வாசல் தாண்டி வெளியே வந்ததும் மிருகங்களாகிவிடுகின்றனர். அதனால்தான், இந்தியாவில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறாள்.
டெல்லியில் 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டு வல்லுறவால் கொல்லப்பட்ட போது தேசமே கொந்தளித்தது. இந்திய சுற்றுலாப் பொருளாதாரம் 35 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்தது. இப்போது மறுபடியும் இந்தியாவின் சுற்றுலா பொருளாதாரம் ஆட்டம் காண ஆரம் பித்துள்ளது. காரணம், அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 'மிக்கலா கிராஸ்’ என்கிற மாணவியின் பேட்டிதான்.
தற்போதைய மும்பை சம்பவத்துக்கு சில நாட்கள் முன்பாக, மிக்கலா கிராஸ் தனது இந்தியப் பயணம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் ''நான் இந்தியாவில் இருந்த நாட்களில், 48 மணி நேரத்தில் இரு முறை பாலியல் வன்முறையில் இருந்து தப்பித்தேன். இந்தியா, அழகான நாடு. ஆனால், இந்திய ஆண்கள் அருவருப்பாக நடந்துகொள்கிறார்கள்'' என்று குமுறினார். ஒரு மாதத்துக்கு முன்பு வெளியான பி.பி.சி. டாக்குமென்டரியும் இதையேதான் சொன்னது.
வெளிநாட்டுப் பெண்கள், உள்ளூர் பெண்கள் என்ற எந்த வேறுபாடும் இல்லை. மொத்தத்தில் பெண்ணுக்குப் பாதுகாப்பற்ற நாடாக இந்தியா மாறிவிட்டது. மும்பை சம்பவம்குறித்து, இன்று நாடு தழுவிய அளவில் பேசப்படலாம். டெல்லி மாணவி வழக்கில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு அதிவேகமாகத் தண்டனையும் கிடைத்திருக்கலாம். ஆனால், நாளை மறுநாளும் இந்தியப் பெண்களுக்கு இப்படியான ஆபத்துகள் காத்திருக்கின்றன.
இதை தடுத்து நிறுத்தவேண்டிய அரசோ, ஒரு சட்டம் கொண்டுவருவதில்கூட ஜவ்வாக இழுத்தடிக்கிறது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய வர்மா கமிஷனின் அறிக்கை, மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. பெண்ணுடன் விருப்பமின்றி உறவுகொள்ளும் ராணுவம், காவல் துறை, அரசியல்வாதி என யாராக இருந்தாலும், குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் தொடங்கி ஆயுள் தண்டனை வரை பரிந்துரைத்தது வர்மா கமிஷன். இன்னும் அவை பரிந்துரைகளாகவே உள்ளன; சட்டமாகவில்லை. ஒருவேளை காஷ்மீரிலும் தண்டகாரண்யாவிலும் பெண் உடலை போர்த் தந்திரமாகக் கையாளும் ராணுவத்தினர், இந்தச் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படலாம் என்ற அச்சம் அரசுக்கு இருக்கிறதோ? என பெண்கள் அமைப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.
சமூகத்தில் ஆணும் பெண்ணும் சம உரிமையுள்ள உயிரியல் கூட்டாளிகள் என்பதையே ஆண் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை அல்லது சமூகம் அவனுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. சட்டம், ஒழுங்கு, சமூக அமைப்பு எனப் பல வகைகளில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிப்பவன், பெண் என்று வரும்போது இயல்பாகவே அவனது ஆண் திமிருடன் நடந்துகொள்கிறான். அவனது ஆழ்மனதில், 'பெண் என்பவள் தன்னைவிடத் தகுதி குறைந்தவள்’ என்ற எண்ணமே எஞ்சி இருக்கிறது. நம் குடும்ப அமைப்பும் சமூகமும் பெண்களை சொத்தாக வும் போகப் பொருளாகவும் சித்திரிக்கும் பணியைத் தொடர்ந்து செய்துவருகின்றன. அன்பையும் நட்பையும் பொதுவில் வைக்கும் நமது கலாசாரம், ஒழுக்கத்தைப் பெண்ணுக்கு மட்டுமே போதிக்கிறது.
உலகமயம் உருவாக்கிய ஒழுக்கம், பெண்ணை நவீனப் நுகர்வுப் பண்டமாக மாற்றிவிட்டது. பணம் உள்ளவன், தன் தகுதிக்கேற்ப ஒரு பெண்ணை வாங்கலாம். பணமே இல்லாதவன், பாலியல் பலாத்காரம் மூலம் ஒரு பெண்ணை அடையலாம் என்பதுதான் உலகமயம் உருவாக்கி இருக்கும் நவீனக் கருத்து. பாலியல் வேட்கையைத் தீர்க்க முடியாதவர்கள், கருத்துகள் வழியே பெண்ணுடலை அவதூறுகளால் அபகரிக்கிறார்கள் இணையத்தில்.
சரி, இந்தப் பாலியல் வேட்கை, பெண்ணுக்கு இல்லையா? அவளும் மனுஷிதானே... ஆனால், அவள் எந்த ஆணையும் பலாத்காரம் செய்வது இல்லை. காதலை மறுத்தவனின் முகத்தில் எந்தப் பெண்ணும் ஆசிட் அடித்தது இல்லை. ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மன அளவில் வலிமைகொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். பாலியல் வல்லுறவுகளுக்கு உள்ளான டெல்லி பெண் ஆகட்டும், இப்போதைய மும்பை பெண் ஆகட்டும் ''நான் விரைவில் குணமடைந்து விடுவேன். என் பழைய வேலைக்குத் திரும்பிவிடுவேன்'' என்று நம்பிக்கையோடு பேசியிருக்கிறார்கள்.
பெண்கள் உடுத்தும் விதம்தான் பாலியல் பலாத்காரம் நடக்க காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். ஐந்து வயது குழந்தைகூட வல்லுறவுக்குப் பலியாகும் வக்கிர உலகம் இது. குழந்தைக்கு என்ன 'உடை நாகரிகத்தை’ப் போதிப்பீர்கள்?
'சமூக ஏற்றத்தாழ்வுகளே இத்தகைய பலாத்காரத்துக்குக் காரணம்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். உண்மைதான், அடிப்படைக் கல்வியும் வறுமையுமே பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்றால்... வாச்சாத்தி முதல் சிதம்பரம் பத்மினி, திண்டிவனம் ரீட்டாமேரி என்று நீளும் காவல் துறைப் பலாத்காரங்களும், சூரியநெல்லி போன்ற அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளையும் என்ன சொல்வது?
கல்வி, அறிவு, அந்தஸ்து என உலகம் போற்றும் பண்புகள் எத்தனை வந்தாலும், 'பெண் என்பவள் எப்போதும் மோகத்துக்கு உரியவள்; ஆணின் சொல்லுக்குக் கீழ்ப்படிய வேண்டிய கடமை அவளுக்கு இருக்கிறது’ என ஆணின் மனம் எண்ணுகிறது. அது இயல்பாக நடக்கவில்லை எனில், அதற்காக வன்முறையையும் கையாள்கிறது. இந்த மனநோயில் இருந்து வக்கிர எண்ணம் கொண்ட ஆண்கள் விடுபட வேண்டும். இல்லையெனில், பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக இந்தியா மாறிவிடும்!
செய்ய வேண்டியவை!
'பெண்கள் மீது வன்முறை செலுத்தினால், கடும் தண்டனைகளை அனுபவிக்க வேண்டும்’ எனும் விழிப்பு உணர்வைச் செய்திப் படமாக எடுத்து, அதை இந்திய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
கட்டற்று பெண்களின் உடலை போகப்பொருளாக மாற்றும் சினிமா, தொலைக்காட்சிகளுக்கு சரியான தணிக்கை முறை உருவாக்கப்பட வேண்டும்.
இந்த மாற்றங்களை நமது வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். பெண் மீது அன்பும் மரியாதையும் ஏற்படும் விஷயங்களை ஆண் பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும்.
பாலியல் வன்முறையைத் தடுக்க, சட்டம் தன் வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும். பாலியல் குற்றங்களை விசாரிக்க, மாவட்டம்தோறும் தனி நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
ஆண் சார்ந்த நமது கல்விமுறை மாற்றப்பட வேண்டும். உழைப்பிலும் சமூக உற்பத்தியிலும் பெண்களின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்குப் புகட்ட வேண்டும்.
ஆண்தான் குடும்பத்தின் 'தலைவன்’ என்ற நிலையை மாற்றி, நமது குடும்பத்தை ஜனநாயகரீதியில் அமைக்க வேண்டும். பெண்கள் தலைமை ஏற்கும் குடும்பங்கள் உருவாக வேண்டும்
No comments:
Post a Comment