Monday, June 26, 2023

 நீட் தேர்வு கோச்சிங் - பெற்றோர்களுக்கான சில நடைமுறை உபயோகக் குறிப்புகள்!

+2 தேர்வுடன் சேர்த்து நீட் தேர்வுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்கும் உறைவிடப்பள்ளிகள்தான் இப்போது சென்னையில் டிரெண்டிங். இந்தப் பள்ளிகளில் +2 தேர்வு என்பது ஒப்புக்குத்தான். அதற்கான தனிப்பட்ட பயிற்சிகள் எதுவும் அளிக்கப்படமாட்டாது. முழுக்கவனமும் நீட் தேர்வு கோச்சிங்கில்தான் இருக்கும். ஒரே மாணவரின் நீட் மதிப்பெண், +2 மதிப்பெண் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியும்.


உறைவிடப் பள்ளிக்கான கட்டணம் வருடத்திற்கு 3.5 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கும். தடங்கல் இன்றிப் படிக்க குறைந்த மாணவர்களுடன் அறையைப் பகிர்ந்துகொள்ளும் வசதி வேண்டுமென்றால் வருடத்திற்கு 6 லட்சம் வரை ஆகலாம். நீட் கோச்சிங் கட்டணம் வருடத்திற்கு 1.36 லட்சம் (இது போன வருடம், இந்த வருடம் இன்னும் அதிகரிக்கலாம்.)


இவை இல்லாமல் பேனா, பென்சில், பள்ளியில் தரப்படாத நோட்டு புத்தகங்களுக்கான செலவு, துணையாக வேறு ஆன்லைன் கோச்சிங், நீட் தயாரிப்பு மெட்டீரியல் வாங்கும் செலவுகள் தனி. சென்னையில் வசிக்காத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்க்க வரும் செலவுகள், ஊருக்கு அழைத்துச் செல்லும் செலவுகள், ஆடை, அணிகலன் செலவுகள் கூடுதலாக இருக்கும்.

தேர்வு நெருங்கும்போது அதாவது நீட் தேர்வுக்கு இரண்டு, மூன்று மாதங்கள் முன்பு, கோச்சிங் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், விடுதியில் போதிய கவனிப்பு இருக்காது என்பதால் அப்போது மட்டும் பள்ளிக்கு அருகில் தனியாக வீடு எடுத்துத் தங்கிப் படிப்பது அல்லது சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கிப் படிப்பது என்பது பொதுவாகப் பின்பற்றப்படும் நடைமுறை (நினைத்த நேரத்திற்கு காபி, தேநீர் போட்டுத்தர / படிக்க தொந்தரவு இல்லாத சூழலை அமைக்க / பழங்கள், சூப் கொடுத்துத் தேர்வுக்குத் தயார்படுத்த விடுதிகள் ஒத்துவராது). இதற்காகவே இரண்டு, மூன்று மாதங்கள் வாடகைக்கு விடப்படும் வீடுகள் (Furnished homes) கிடைக்கின்றன. இதன் செலவு தனி.

இவை இல்லாமல் லேப்டாப், தேசிய அளவில் பிற நிறுவனங்கள் நடத்தும் ஆன்லைன் ‘மாக் எக்ஸாம்’ போன்றவற்றிற்கான செலவுகள்...

இதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்கள் ஒரு வருடத்திற்கானவை. அவற்றை இரண்டு வருடங்களுக்குக் கணக்கிட்டுக்கொள்ளவும்.

Thursday, June 15, 2023

 அரசு சார்பாக மட்டும் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்காக 80-க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்தத் தேர்வுகளில் தேர்ச்சிபெற்றால் புகழ்பெற்ற பல கல்வி நிறுவனங்களில் மிகக்குறைந்த செலவில் படிக்க முடியும். இவற்றில் சுமார் 75 தேர்வுகளுக்கு பிளஸ் டூ மதிப்பெண் முக்கியமில்லை. சில நுழைவுத்தேர்வுகள், பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாகவே நடந்து முடிந்து விடுகின்றன. பல தேர்வுகளுக்கான விண்ணப்ப நடைமுறைகள் பிளஸ் டூ தேர்வுக்கு முன்பாகவே முடிந்துவிடுகின்றன. இந்தத்தேர்வுகள் பற்றியெல்லாம் நம் பிள்ளைகளுக்குத் தெரிவதேயில்லை. ஏன்... ஆசிரியர்களே அறிவதில்லை. எல்லாம் நம் வரிப்பணத்தில் இயங்கும் கல்வி நிறுவனங்கள்தான். பல தேர்வுகள் 50-60 வருடங்களாக நடந்துவருகின்றன. நாம்தான் அறியாமல் இருக்கிறோம். நம் தேடல் என்பது நம் மாவட்டத்துக்குள்ளாகவே முடிந்து போகிறது என்பதுதான் சோகம்.

இந்த இடத்தில் சுந்தர்ராஜனை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். உசிலம்பட்டி அருகேயுள்ள எழுமலை என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த தம்பி. அரசுப்பள்ளியில் படித்தவன்.

பிளஸ் டூ-வில் 1088 மதிப்பெண் எடுத்தான். கடுமையான வறுமையைக் கடந்து படித்தவன். மதுரையில் ஒரு கல்லூரியில் பி.எஸ்சி சேர்ந்திருக்கிறான். விடுதிக்கட்டணம் கட்ட முடியாமல் பாதியில் அந்தப் படிப்பை விட்டுவிட்டான். எங்கிருந்தோ முகவரி வாங்கி எனக்கொரு கடிதம் எழுதியிருந்தான். அந்தக் கடிதத்தில் இருந்த நேர்த்தியும் வார்த்தைகளும் என்னை ஈர்த்தன. அவனை அழைத்துப் பேசி கிண்டி பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்த்தேன். மாணவர்களுக்கு உதவி செய்யும் ஒரு அமைப்பிடம் பேசி அவனுக்கு ஒரு லேப்டாப்பும் வாங்கித்தந்தேன்.


இரண்டாம் வருடம் படித்தபோது சுந்தர்ராஜன் ஆப்பிள் நிறுவன மென்பொருளில் இருக்கும் பிழை ஒன்றைக் கண்டுபிடித்தான். அதையறிந்த ஆப்பிள் நிறுவனம் 5,000 டாலர் அவனுக்குப் பரிசாக வழங்கியது. இன்று படிப்பை முடித்து பெங்களூரில் பிலிப்ஸ் நிறுவனத்தில் மிகப்பெரிய சம்பளத்தில் வேலை செய்கிறான்.


இத்தனைக்கும் சுந்தர்ராஜன் தமிழ் மீடியத்தில் படித்தவன். தமிழ் மீடியத்தில் படித்தால் பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்குப் போகமுடியாது என்ற எண்ணம் இங்கே அழுந்த விதைக்கப்பட்டு விட்டது. பலபேர் பின்வாங்கி மிகப்பெரிய வாய்ப்புகளையெல்லாம் இழந்துவிடுகிறார்கள். உண்மையில் இது பெரிய மூடநம்பிக்கை. மொழியோ, பணமோ, உங்கள் பயணத்திற்கு ஒருகாலும் தடையாக இருக்காது. அவ்வளவு வாய்ப்புகள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. ஆங்கிலம் பேசும் சூழலில் மூன்று மாதங்கள் நீங்கள் இருந்தால் சரளமாக ஆங்கிலம் பேசிவிடுவீர்கள். ஜப்பானிய மொழி பேசும் இடத்தில் இருந்தால் அந்த மொழி உங்களுக்கு எளிதாக வந்துவிடும். மனிதன் சூழலுக்கேற்ப வாழப்பழகும் ஆற்றல் கொண்டவன்.

தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு நகரத்துக்கு வரும் மாணவர்களுக்கு முதல் ஆறு மாதங்கள் சற்று சிரமமாக இருக்கலாம். மிக எளிதில் இந்த சூழலையும் தேவைக்கேற்ப பழகிவிடலாம். நானே இதற்கு உதாரணம். இதுபோன்ற சின்னச் சின்ன இடர்களில் சோர்ந்துவிடாமல் நீங்கள் செய்யப் போகும் பெரிய செயலுக்கான வாசலைத் தேடவேண்டும். அதுதான் வெற்றிக்கான சூத்திரம். சுந்தர்ராஜனை நான் ஆகச்சிறந்த உதாரணமாக செல்லுமிடங்களில் எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.


நம்மிடமிருக்கும் பிரச்னை, நாம் வைரங்களைத் தேடாமல் மேலிருக்கும் மண்ணைக் கிளறிக் கொண்டிருக்கிறோம். நம்மிடம் பரந்துபட்ட பார்வை இல்லை. பத்தாம் வகுப்பிலேயே நாம் பிள்ளைகளை தரம் பிரித்துவிடுகிறோம். ‘நீ மருத்துவம் படி’, ‘நீ வணிகம் படி’, ‘நீ தொழிற்கல்வி படி’ என்று பாகுபடுத்திவிடுகிறோம். உலகில் வேறெங்கும் இந்தப் பாகுபாடு இல்லை. கல்வி என்பது தொடர் பயணம். அந்தப் பயணத்தில் எங்கேனும் தோன்றும் சிறு பொறி, உங்களை எதிர்பாராத ஒரு இடத்துக்கு நகர்த்திச் சென்றுவிடும். மருத்துவக் கனவை விதைத்து, அந்த ஒற்றை இலக்கில் நாம் தயார்படுத்தும் ஒரு மாணவன், அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறபோது மனம் உடைந்துவிடுகிறான். அடுத்து என்ன என்று தெரியாமல் நிலைகுலைந்து நிற்கிறான்.


நம் கல்விக்கூடங்கள் பரந்துபட்ட வாய்ப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள ‘நான் முதல்வன்' திட்டத்தை நான் இதற்காகவே வரவேற்கிறேன். ஆனால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசின் ஆவலை எத்தனை ஆசிரியர்கள் முழுமையாக உள்வாங்கியிருக்கிறார்கள்? இத்திட்டத்தின் கருத்தாளர்களாக, பயிற்றுநர்களாக இருக்கும் ஆசிரியர்களில் எத்தனை பேர் மாணவர்களுக்குத் திறம்பட வழிகாட்டுகிறார்கள்? இந்தக் கேள்விகளை நான் என் சொந்த அனுபவத்திலிருந்தே முன்வைக்கிறேன்.

மருத்துவப் படிப்பென்றால் வெறும் எம்.பி.பி.எஸ் மட்டுமல்ல. இங்கே பொறியியல் படித்தவர்கள் முதுகலையில் மருத்துவப் படிப்பைப் படிக்கலாம். ஐ.ஐ.டி-க்களில் சட்டம் படிக்கலாம். நாம் தமிழ்நாட்டில் உள்ள வாய்ப்புகளையே நம் பிள்ளைகளுக்கு உணர்த்தவில்லை. தமிழகத்தைத் தாண்டி ஏராளமான அரசுக்கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. சரியான நேரத்தில் தயாரானால் வெகு எளிதாக அந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துவிட முடியும்.

நேஷனல் ஃபாரன்சிக் சயின்ஸ் பல்கலைக்கழகம் என்று ஒன்று இந்தியாவில் இருக்கிறது. அதை மத்திய அரசுதான் நடத்துகிறது. 1972-ம் ஆண்டில் இருந்து ஜெயப்ரகாஷ் நாராயணன் பெயரில் இயங்கிய இந்த நிறுவனம், 2020-ல் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் பற்றி நாம் அறிந்ததில்லை. தமிழகத்திலிருந்து இந்தப் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் செல்வதேயில்லை. தடய அறிவியலுக்கென்றே இயங்கும் உலகின் முதல் பல்கலைக்கழகம் இது. காந்தி நகர், டெல்லி, கோவா, புனே உட்பட பல நகரங்களில் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு வளாகங்கள் உள்ளன.

கற்பது உலகளவு - 3
கற்பது உலகளவு - 3

Criminology and Forensic Science, Criminology, Clinical Psychology, Cyber Security, Digital Forensics and Information Security, Artificial Intelligence and Data Science, Computer Science & Engineering என பல இரண்டாண்டு முதுநிலை, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளை இந்த நிறுவனம் வழங்குகிறது. கணிதம், இயற்பியல், உயிரியல் மற்றும் வேதியியல் பாடங்களைப் படித்து 60 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இப்படிப்புகளில் சேரலாம். B.B.A.; LL.B.(Hons.) என்ற படிப்பும் இங்கே இருக்கிறது. பிளஸ் டூ-வில் 50% மதிப்பெண் எடுத்து CLAT தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் படிக்கலாம்.

IIM-களை நாம் மேலாண்மைக் கல்வி தரும் நிறுவனங்களாக மட்டுமே அறிந்து வைத்திருக்கிறோம். ஹரியானாவில் உள்ள ROHTAK IIM-ல் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு Integrated Programme in Law (IPL) என்ற சட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. நவீனத் தொழில்நுட்பங்கள், வங்கி நடைமுறைகள், உளவியல் அனைத்தும் அடங்கிய இந்த ஐந்தாண்டுப் படிப்பில் நம் பிள்ளைகளும் படிக்கமுடியும். இதற்கு CLAT அல்லது IPMAT தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். IIM படிப்புகள் சற்று காஸ்ட்லிதான். இந்தச் சட்டப்படிப்பை முடிக்க குறைந்தது 30 லட்சம் வரையிலும் செலவாகலாம். ஆனால் இந்தக் கட்டணத்தைக் கண்டு மலைக்கத் தேவையில்லை. உங்களுக்கு இடம் கிடைத்துவிட்டால் ஸ்டேட் பேங்க் உங்களுக்கு முழுக் கட்டணத்தையும் கடனாக வழங்கக் காத்திருக்கிறது.

இதேபோல, LLB - Intellectual Property Law என்ற சட்டப்படிப்பை காரக்பூர் ஐ.ஐ.டி வழங்குகிறது. பி.இ, பி.டெக்., எம்.பி.பி.எஸ், இளநிலை சயின்ஸ், ஃபார்மஸி படித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேரமுடியும். காப்புரிமை, கண்டுபிடிப்புகள் தொடர்பான சட்டப்படிப்பு இது. ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இவற்றையெல்லாம் தமிழ்நாட்டு மாணவர்கள் ஏறெடுத்துப் பார்ப்பதேயில்லை. தெரிந்தாலும் நமக்கு எட்டாத உயரத்தில் இருப்பதாகக் கருதுகிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் இரண்டு மாதங்கள் நேரம் ஒதுக்கி நுழைவுத்தேர்வு எழுதினால் நிச்சயம் இடம் கிடைத்துவிடும்.


அருப்புக்கோட்டை அருகேயுள்ள வீரசோழம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சையது அன்சாரி, 100% விழித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி. அரசு பார்வையற்றோர் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தவர். அங்கு உரையாற்றச் சென்றபோது இவரைக் கண்டடைந்தேன். ‘‘சட்டம் படிக்க வேண்டும்’’ என்றார். CLAT எழுத வைத்தேன். தேர்ச்சி பெற்றார். கொச்சியில் உள்ள National University of Advanced Legal Studies என்ற கல்வி நிறுவனத்தில் இடம் கிடைத்தது. அந்நிறுவனத் துணைவேந்தரைத் தொடர்பு கொண்டு பேசினேன். ‘அவருக்கான முழுக் கல்விச்செலவையும் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார். எந்த அரியரும் இல்லாமல் படிப்பை முடித்தார். நெதர்லாந்து பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கான பணத்தைத் திரட்ட எவ்வளவு முயன்றும் முடியாமல் போனதால், நம் உச்ச நீதிமன்றத்தில் உள்ள Indian Law Institute-ல் சேர்ந்து முதுநிலை படித்து, திருச்சி சட்டக் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். இன்னும் அவர் தாகம் அடங்கவில்லை. தற்போது பிஹெச்.டி ஆய்வு செய்கிறார்.


எல்லோருக்கும் இங்கே ஒரே சாலைதான். முனைப்புதான் இலக்கு நோக்கி அழைத்துச் செல்லும். இதோ நம் கைக்கெட்டும் தொலைவில் இருக்கிற யாருமறியாத இன்னொரு வாய்ப்பைச் சொல்கிறேன்.

எம்.பி.பி.எஸ் படிக்கும் கனவோடு இருக்கும் மாணவர்கள் அந்தப் படிப்பு கிடைக்காவிட்டால் மனமொடிந்துபோகிறார்கள் அல்லவா... அவர்களுக்குத்தான் இந்தச் செய்தி. எம்.பி.பி.எஸ் கிடைக்காவிட்டால் என்ன? பொறியியல் படித்துவிட்டுக்கூட மருத்துவர்களோடு இணைந்து மருத்துவப் படிப்பைப் படிக்கலாம். அதுவும் புகழ்பெற்ற மூன்று கல்வி நிறுவனங்களில்... M.Tech Clinical Engineering என்ற ஒரு படிப்பு. மொத்தம் இரண்டு ஆண்டுகள். ஐ.ஐ.டி மெட்ராஸில் ஆறு மாதம், வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியில் ஆறு மாதம், திருவனந்தபுரத்தில் உள்ள  சித்திரைத் திருநாள் இன்ஸ்டிட்யூட் ஃபார் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் ஆறு மாதம் படிக்க வேண்டும். புராஜெக்ட்டுக்கு ஆறு மாதம்.

இதேபோல ஐ.ஐ.டி டெல்லி, எய்ம்ஸ் டெல்லி, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து இரண்டாண்டுக் கால பயோ டிசைன் படிப்புகளை வழங்குகின்றன. இதுவும் டாக்டர்களும் இன்ஜினீயர்களும் சேர்ந்து படிக்கும் படிப்பு. மூன்று கல்வி நிறுவனங்களிலும் அடுத்தடுத்து படிக்கவேண்டும். பி.இ அல்லது எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள் இந்தப் படிப்புகளில் சேரலாம்.


இன்று மருத்துவத் துறையில் பயன்படுத்தும் 80% மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றோம். நம் நாட்டிலேயே அவற்றையெல்லாம் உருவாக்கும் நோக்கில் மருத்துவர்களையும் பொறியாளர்களையும் ஒரே இடத்தில் பயிற்றுவிக்கும் இந்தப் படிப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன.


மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் Wild Life Institute of India என்ற கல்வி நிறுவனத்தை 1982-ம் ஆண்டு முதல் நடத்திவருகிறது. இந்தக் கல்லூரி டேராடூனில் உள்ளது. இங்கு M.Sc Wildlife Science, M.Sc Heritage Conservation என்ற இரு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இந்தப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்தப் படிப்புகளில் சேர ஏதாவது ஒரு பட்டப்படிப்பு போதும். இதற்குத் தனி நுழைவுத் தேர்வு உண்டு. M.Sc Heritage Conservation படிப்பு யுனெஸ்கோ அமைப்போடு இணைந்து வழங்கப்படுகிறது. புராதன சின்னங்கள், அதற்கான வரையறைகள், தொல்லியல் எனப் பல பாடப்பிரிவுகள் கொண்ட இந்தப் படிப்பை முடித்தவர்கள் யுனெஸ்கோ வரை சென்று பணியாற்ற முடியும்.

இன்னொரு வித்தியாசமான படிப்பையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். Cognitive Science என்று ஒரு துறை உண்டு. நம் மூளையைப் பகுத்தாய்ந்து படிக்கும் படிப்பு. எதிர்காலம் இனி இதில்தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். குஜராத்தில் உள்ள ஐ.ஐ.டி காந்திநகர் நிறுவனம், MSc in Cognitive Science என்ற படிப்பை வழங்குகிறது. இந்தப் படிப்பில் B.A, B.Sc, B.Tech, M.B.B.S, B.Com உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் 50% மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சிபெற்றவர்கள் சேரலாம். ஆன்லைன் நுழைவுத்தேர்வு வழியாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சுந்தர்ராஜன், உஷா, சையது அன்சாரி
சுந்தர்ராஜன், உஷா, சையது அன்சாரி

நான் கூறியுள்ள இந்தப் படிப்புகளுக்கெல்லாம் போட்டி குறைவு. NEET போல, JEE போல லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டி போடுவதில்லை. சில ஆயிரம் மாணவர்களே நுழைவுத்தேர்வு எழுதுவார்கள். கொஞ்சம் நடைமுறைப் புரிதலோடும் தெளிவான சிந்தனையோடும் முயன்றால் வெகு எளிதாக இந்தத் தேர்வுகளை ஜெயிக்கலாம்.


உற்சாகப்படுத்தினால் நம் பிள்ளைகள் நிச்சயம் சாதிப்பார்கள். பலநேரம் நம் பிள்ளைகளின் திறன் கண்டு நான் அதிசயத்திருக்கிறேன். அரவக்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த உஷா பிளஸ் டூ-வில் 68% மதிப்பெண் பெற்றிருந்தார். அவரைப் பல நுழைவுத்தேர்வுகள் எழுத வைத்தேன். அகமதாபாத்தில் உள்ள National Institute of Design-ல் அவருக்கு இடம் கிடைத்தது. உஷாவின் அம்மா அவரை அனுப்ப ரொம்பவே பயந்தார். அம்மாவை தைரியப்படுத்திவிட்டு B.Des Exhibition Design படிப்பில் சேர்ந்த உஷா, மூன்றாம் ஆண்டில் ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட் நகருக்குச் சென்று அங்கு இரண்டு அருங்காட்சியகங்களை டிசைன் செய்துவிட்டுத் திரும்பினார். இன்று அவர், இந்தியாவின் மிகப்பெரிய டிசைனர்.

இத்தனை ஆண்டுக்கால அனுபவத்தில் எனக்குக் கிடைத்த பாடம், மாணவர்களைச் சுருக்கக்கூடாது. அவர்களுக்கான பாதையை நாம் போடக்கூடாது. எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் காட்டினால் போதும். ஆசிரியர்கள் முதலில் அப்டேட் ஆக வேண்டும். மாணவர்களை அவர்களால் மட்டுமே தயார்படுத்த முடியும். தேடலை விரிவு செய்தால் வாய்ப்புகள் தேடிவரும்!

- கற்போம்...

*****

உலகின் ஆகப்பெரிய கண்டுபிடிப்புகள் பலவும் உயர்கல்வி் நிறுவனங்களில்தான் நடந்துள்ளன. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி மையங்களில் பல ஸ்டார்ட் அப்கள் உருவாகி இன்று மிகப்பெரும் நிறுவனங்களாக வளர்ந்துள்ளன. அமெரிக்காவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில்தான் முதல் கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டது. அங்கு படித்த காலத்தில்தான் லாரி பேஜ், செர்ஜி பிரின் இருவரும் கூகுள் நிறுவனத்தைத் தொடங்கினார்கள். இன்று அதுதான் உலகை ஆள்கிறது. கூகுளின் வருமானத்தில் ஒரு பங்கு இப்போதும் ராயல்டியாக ஸ்டான்போர்டுக்கு வருகிறது. இந்தப் பணத்தைக் கொண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதோடு கல்விக்கட்டணத்தையும் குறைவாகப் பெறுகிறது ஸ்டான்போர்டு.

ஐ.ஐ.டி டெல்லி, எய்ம்ஸ் டெல்லி, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து பயோ டிசைன் படிப்புகளை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன. சமீபத்தில் இங்கு படிக்கும் மூன்று மாணவர்கள் இணைந்து ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்கள். இதயப் பிரச்னை இருப்பவர்களுக்குப் பொருத்தப்படும் பேஸ்மேக்கர் கருவி, காலப்போக்கில் வேறு இடத்துக்கு நகர்ந்துவிடும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்கும் விதமாக popsicle stick ஒன்றைக் கண்டறிந்துள்ளார்கள். அதுவும் 10 டாலர் என்ற மலிவான விலையில். உலகம் முழுவதும் ஓராண்டுக்கு 4 லட்சம் பேஸ்மேக்கர் கருவிகள் பொருத்தப்படுகின்றன. அவற்றுக்கான மொத்த popsicle stick-குகளையும் இவர்களது ஸ்டார்ட் அப் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இதிலிருந்து ஒரு தொகை மூன்று கல்வி நிறுவனங்களுக்கும் ராயல்டியாகக் கிடைக்கிறது.

Monday, June 5, 2023

 விரும்பிப் படிக்கலாம் வேளாண்மையை!

இந்தியா ஒரு வேளாண்மை சார்ந்த நாடு. பெரும்பான்மை இந்தியர்களின் வாழ்க்கை வேளாண்மையைச் சார்ந்தாகவே உள்ளது. வேளாண் தொழிலில் சிறப்புப்பெற்ற ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வேளாண் திட்டங்களைத் தமிழகத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்திவருகின்றன. குறிப்பாக, உணவு உற்பத்தியில் பற்றாக்குறை என்ற நிலையிலிருந்து தொடர்ந்து தன்னிறைவை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது, வோளாண்மை என்ற தொழிலைப் பல்தொழில் சார்ந்த நிலைக்கு விரிவுபடுத்துவதே. குறிப்பாக வேளாண் பொறியியல், உணவுத் தொழில்நுட்பம், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, வேளாண் தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், மீன்வளம், கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, பட்டு வளர்ப்பு எனப் பல்வேறு தொழில்கள் வளர்ச்சி பெற, வேளாண்மை மையமாக உள்ளது. ஆனாலும் இன்றைய நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு வருமானத்தில், வேளாண்மை 13 சதவிகிதம்தான் உள்ளது. இந்தப் பங்களிப்பு குறைவான ஒன்றாகும்.


தமிழகம் எட்டுக் கோடி மக்கள் தொகையைக் கொண்ட பெரிய மாநிலம். இந்த மக்களுக்கான உணவுத்தேவை என்பது வளர்ந்துகொண்டே உள்ளது. இன்னும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் மக்காச்சோள உற்பத்தியில் தேவையை எட்டமுடியவில்லை. இந்திய அளவிலும், இத்தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சோஷியல் மீடியாவின் தாக்கத்தால், மக்களின் உணவுப்பழக்கமும் மாறிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக தானிய உணவு வகைகள் கடந்து பழங்கள், காய்கறிகள் மற்றும் மாமிச உணவுகள் எனத் தேடி உண்பது அதிகரித்துள்ளது. அதற்கேற்ப உற்பத்தியில் மாற்றங்களைச் செய்வதையும், வேளாண்மை எதிர் கொண்டுள்ளது. இத்துடன் மாறிவரும் தட்பவெட்பச் சூழலில், மழை பொய்ப்பது, நீர்ப்பற்றாக்குறை எனப் பல பிரச்னைகளால் வேளாண்மை உற்பத்தி பெரிதும் பாதிக்கிறது. இந்த பாதிப்பு, மானாவாரிப் பயிர்களில் பெரிதும் உணரப்படுகிறது. வருங்காலத்தில், மாறிவரும் நீர்த் தட்டுப்பாட்டிற்கேற்ப வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. உயிரியல் தொழில் நுட்பம், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, டேட்டா தொழில்நுட்பம் எனப் புதிய புதிய தொழில் நுட்பங்களை வேளாண்மையில் பயன்படுத்த, வேளாண்மை பற்றிய அறிவு அவசியமான ஒன்றாக உள்ளது. எனவே வரும் காலங்களில் வேளாண் கல்வி தவிர்க்க முடியாத ஒன்று.
விரும்பிப் படிக்கலாம் வேளாண்மையை!
விரும்பிப் படிக்கலாம் வேளாண்மையை!

இதைக் கவனத்தில்கொண்டே இதற்கான மனித வளத்தை உருவாக்கிடும் பெரும் பணியைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தொடர்ந்து நடை முறைப்படுத்திவருகிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழகம் முழுவதும் அதன் உறுப்புக் கல்லூரிகளையும், ஆராய்ச்சி நிலையங்களையும், வேளாண் அறிவியல் நிலையங்களையும் நிறுவி, செயல்படுத்திவருகிறது.

பல்கலைக்கழகத்தின் நேரடி உறுப்புக் கல்லூரிகள் 18 உள்ளன. இவைதவிர, இதனுடன் இணைக்கப்பட்ட 28 தனியார் கல்லூரிகள் உள்ளன. பல்கலைக்கழகக் கல்லூரிகளில் மொத்தம் 14 பிரிவுகளில் பட்டப் படிப்புகள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் வேளாண் இளநிலைப் பட்டமும், இரண்டு கல்லூரிகளில் இளநிலை தோட்டக்கலைப் பட்டமும் கொடுக்கப்படுகின்றன. இளநிலை வேளாண்மை படிக்க ஆண்டுக்கு ஒன்றரை முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகலாம்.

விரும்பிப் படிக்கலாம் வேளாண்மையை!

வேளாண் பொறியியல் பட்டப்படிப்பை, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பல தனியார் பொறியியல் கல்லூரிகளும் தொடங்கியுள்ளன. B.Tech Agricultural Engineering எனப்படும் அந்தப் படிப்பு, முழுக்க முழுக்க பொறியியல் சார்ந்தது. வழக்கமாக வேளாண் பல்கலைக்கழகம் வழங்கும் வேளாண் படிப்புகள் படிக்க உயிரியல் அவசியம். ஆனால் B.Tech Agricultural Engineering படிப்புக்குக் கணிதம், இயற்பியல், வேதியியல் மட்டும் போதும்.

இன்ஜினீயரிங் படிக்க விரும்புபவர்கள், கல்லூரியில் அந்தப் படிப்புக்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்று நன்றாக ஆய்வுசெய்து சேரவேண்டும்.

‘‘இந்திய வேளாண் துறையின் தேசிய வருமானம் ஆண்டுக்கு 3% வளர்ந்துவருகிறது. இதற்கு இணையாக வேளாண் பட்டதாரிகளின் தேவையும் வளர்ந்துகொண்டிருக்கிறது. வேளாண் பட்டப்படிப்புகளை வழங்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு கடந்த 5 ஆண்டுகளாக, ஆண்டுக்கு 50,000-க்கும் மேல் விண்ணப்பங்கள் வருகின்றன.

வேளாண் கல்வி என்பது அறிவியல், பொறியியல், சமூகவியல், கணிதவியல், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் மொழித்திறன் மேம்பாடு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கி இருக்கும். எல்லாப் பாடங்களிலும் 60% நடைமுறைப் பயிற்சியாகும். பட்டப்படிப்பின் இறுதியாண்டில் 6 மாதங்கள் மாணவர்கள் கிராமம் மற்றும் வேளாண் சார்ந்த தொழிற் சாலைகளில் தங்கிக் களப்பயிற்சி பெறுகின்றனர். வேளாண் பட்டதாரிகளுக்கு மத்திய மாநில அரசுத்துறைகள், வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், அரசு சாரா சேவை மையங்கள், பொதுநிர்வாகம், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களில் பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் தொழில் முனைவோர் ஆகின்றனர். நம் வேளாண் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள், முன்னேறிய நாடுகள் மட்டுமன்றி உகாண்டா, கென்யா, ருவாண்டா போன்ற நாடுகளிலும் நிபுணர்களாகப் பணியாற்றுகின்றனர்...’’ என்கிறார், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சி.ராமசாமி.

விரும்பிப் படிக்கலாம் வேளாண்மையை!
விரும்பிப் படிக்கலாம் வேளாண்மையை!

இன்று பெரும்பாலும் வேளாண் படிப்புகளில் சேர்பவர்கள், விவசாயத்தை நேசித்தோ, வேளாண்மையின் முக்கியத்துவத்தை அறிந்தோ, வேளாண்மைத் தொழில்நுட்பத் தேவையை உணர்ந்தோ, வேளாண்மையில் அதிகமாகத் திறன்பெற்ற மனிதவளத் தேவையைத் தெரிந்தோ தேர்வு செய்வதில்லை என்பது ஒரு வருத்தமான உண்மை.

நீட் தேர்வால் மருத்துவப் படிப்பு வாய்ப்பை இழந்தவர்கள், பொறியியல் பட்டத்தில் கணிதம் கண்டு அஞ்சுபவர்கள், அறிவியல் பிரிவில் வேறு பாடத்திட்டம் கிடைக்காதவர்களே வேளாண் படிப்புக்கு வருகிறார்கள். வேளாண்மை படித்தால் சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதுவது சுலபம் என்று கருதி இங்கு வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதைப் புரிந்துகொண்ட பல தனியார் கல்லூரிகள், தங்களின் கல்லூரிகளில் குடிமைப்பணி போட்டித் தேர்வுக்கான பயிற்சி இரண்டாம் ஆண்டில் இருந்தே கொடுக்கப்படுவதாகக் கூறி அவர்களை ஈர்க்கின்றனர். உயர்கல்வியை இந்த மனநிலையுடன் தேர்வு செய்வது சரியல்ல!

 சி.ராமசாமி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெறாத வேறு கல்வி நிறுவனங்களில் வேளாண் படிப்புகளைப் படிப்பவர்கள், அரசு வேளாண் கல்லூரிகளில் தங்களின் மேற்படிப்பைத் தொடர இயலாது. அக்கல்லூரி களின் உள்கட்டமைப்பு, பேராசிரியர்களின் தகுதி, தேவையான நிலத்தின் அளவு, ஆய்வகங்களின் நிலை போன்றவற்றைக் கண்காணிக்கவும், வழிகாட்டவும் வேளாண்மை சார்ந்த அரசு நிறுவனங்கள் எதுவும் இல்லை. எனவே இக்கல்லூரிகளில் சேர விரும்புகிறவர்கள், அவர்களாகவே இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையே உள்ளது. இது வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள சில தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். இங்கும் போதுமான உள்கட்டமைப்புகள், தகுதியான பேராசிரியர்கள், தரமான ஆய்வகங்கள் உள்ளனவா என்பதை அறிந்துகொண்டு முடிவுகள் எடுக்க வேண்டும்.

கல்லூரியைத் தேர்வு செய்வதற்கு முன், அங்கு படித்த மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள், நிர்வாகத்தை அறிந்தவர்களின் பரிந்துரைகளை ஒப்பிட்டுப் பார்த்துத் தேர்வு செய்வது சரியாக இருக்கும்.

உலகம் மூன்று வேளை உண்ண வேண்டும். மக்களுக்கு உணவுப்பொருள்கள் தேவை என்றால், உலகத்திலேயே ஆகப்பெரிய தொழில் வேளாண்மைதான். எதிர்காலம் வேளாண்மைக் கான காலமாகவே இருக்கப்போகிறது. வேளாண் படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு வளமான எதிர்காலம் நிச்சயம்.

****
இங்கும் படிக்கலாம்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வேளாண் பட்டப் படிப்புகள் உள்ளன. இவை தவிர தமிழகத்தில் உள்ள பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் இப்போது வேளாண் இளநிலைப் பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டு, சில ஆண்டுகளாகப் பட்டங்கள் கொடுக்கப்படுகின்றன. வேளாண் படிப்புகளை வழங்கும் சில தனியார் பல்கலைக்கழகங்கள்:

 வி.ஐ.டி பல்கலைக்கழகம், வேலூர்

 எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், சென்னை

 அமிர்தா விஸ்வ வித்யாபீடம், கோவை

 கலசலிங்கம் பல்கலைக்கழகம், ஸ்ரீவில்லிபுத்தூர்

 காருண்யா பல்கலைக்கழகம், கோவை

 சத்யபாமா பல்கலைக்கழகம், சென்னை

 என்.எம்.வி பல்கலைக்கழகம், அருப்புக்கோட்டை

 வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை

 பாரத் பல்கலைக்கழகம், சென்னை

வேளாண் பல்கலைக்கழக உறுப்புக்
கல்லூரிகளில் தரப்படும் 14 பட்டப்படிப்புகள்!

 B.Sc Agriculture (தமிழ் / ஆங்கிலம்)

 B.Sc Horticulture (தமிழ் / ஆங்கிலம்)

 B.Sc Fisheries

 B.Sc Food and nutrition and dietetics

 B.Sc Forestry

 B.Sc Sericulture

 B.Sc Agriculture Business Management

 B.Tech Agricultural Engineering

 B.Tech Food Technology

 B.Tech Biotechnology

 B.Sc (Hons) Agri-Business Management

 B.Tech Agriculture Information Technology

 B.Tech in Bioinformatics

 சிவில் சர்வீஸ் தேர்வுங்கிறது நிறைய பேருக்கு சிறுவயதுக் கனவா இருக்கும். எனக்கு காலேஜ் இறுதியாண்டு படிக்கும்போதுதான் அந்த எண்ணமே வந்துச்சு. மொத்தமே ரெண்டு வருஷம்தான் அதுக்குப் பயிற்சியெடுத்தேன். ஆனா, ரொம்பவே சின்சியரா படிச்சேன். அந்த முயற்சிக்குத்தான் இப்போ பலன் கிடைச்சிருக்கு” - உற்சாகமும் மகிழ்ச்சியும் ததும்புகின்றன ஜீஜீயின் வார்த்தைகளில். யு.பி.எஸ்.சி தேர்வில், முதல் முயற்சியிலேயே இந்திய அளவில்107-வது இடத்தையும் தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும் பிடித்து சாதித்திருக்கிறார் சென்னை, கொளத்தூரைச் சேர்ந்த ஜீஜீ. இன்னொரு பெருமிதமான செய்தி, ஜீஜீ ‘சுட்டி ஸ்டார்’ ஆகத் தேர்வாகி சுட்டி விகடன் இதழில் பல கட்டுரைகளை எழுதியவர். ஜீஜீக்கு வாழ்த்துகள் சொல்லி உரையாடினேன்.

ஜீஜீ
ஜீஜீ

“நிச்சயம் பாஸ் பண்ணுவேன்னு தெரியும். ஆனா, தமிழ்நாடு அளவுல முதலிடத்தைப் பிடிச்சது எனக்கே ஆச்சர்யம்தான். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த வெற்றிக்குக் காரணம் என் பெற்றோர் கொடுத்த ஊக்கம்தான். அப்பா சுரேஷ் எலெக்ட்ரீஷியன். மிடில் கிளாஸ் குடும்பம்தான். எனக்கு என்ன படிக்க விருப்பமோ அதை சுதந்திரமா படிக்கவச்சார். என் அண்ணன் மனோஜ்தான் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். ஒரு தொண்டு நிறுவனத்தில் சோஷியல் ஒர்க்கரா இருக்கார். ‘பணம், பொருள், செல்வாக்கு மட்டுமே உலகமில்லை. நிறைய மனிதர்கள் வறுமையாலும் உரிமைகள் கிடைக்காமலும் கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கு நம்மால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும்’னு அடிக்கடி சொல்வார். அவரோட தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதணும்ங்குற உந்துதலையே கொடுத்தது” என்றவரிடம் “உங்க முழுப்பேரு என்ன ஜீஜீ?” என்றேன்.

“பலரும் என்கிட்ட இதைத்தான் கேட்பாங்க. என் முழுப் பேரே ஜீஜீதான். நடிகர் ஜெமினி கணேசனின் மகள் ஜீஜீயைப்போல நான் பெரிய டாக்டராகணும்னு எங்கப்பா இப்படியொரு பேரை வெச்சாராம். ஆனா நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே ‘ எனக்கு சயின்ஸ்ல இன்ட்ரஸ்ட் இல்லைப்பா, காமர்ஸ்தான் படிக்கப்போறேன்’னு சொல்லிட்டேன். அதன்படியே என்னைச் சேர்த்துவிட்டாங்க. பத்தாம் வகுப்புல 491 மார்க் எடுத்துப் பள்ளியில மூன்றாவது இடம் வந்தேன். பிளஸ் 2-ல 1,190 மார்க். ஸ்கூல் பர்ஸ்ட். காலேஜிலும் இரண்டாவது இடம். இதுக்கெல்லாம் காரணம், நான் என்ன படிக்கணும்னு ஆசைப்பட்டேனோ அதன்படி என்னைப் படிக்க வெச்சதுதான்.

2021-ல காலேஜ் முடிச்சதுமே சிவில் சர்வீஸ் பத்தின தகவல்களைத் தேடத் தொங்கிட்டேன். அறம் ஐ.ஏ.எஸ் அகாடமியிலதான் படிச்சேன். அங்கே கிடைச்ச உந்துதலும் வழிகாட்டுதலும் ரொம்ப உதவியா இருந்துச்சு...” என்றவரிடம் ‘‘முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெறுவது சாதாரணமல்ல... எப்படி சாத்தியமாச்சு?’’ என்றேன்.

‘‘என்னோட முதல் பயிற்சியே செய்தித்தாள் வாசிக்கிறதுதான். அப்பாவைப் பாத்துதான் அதையும் கத்துக்கிட்டேன். எங்க ஏரியா நூலகத்தில் மெம்பர் ஆகி நிறைய புத்தகங்கள் படிச்சேன். ‘சுட்டி விகடன்’ல சுட்டி ஸ்டாராகத் தேர்வாகி கட்டுரைகள், கவிதைகள்னு ஒரு வருடம் எழுதி, என்னோட படைப்புகள் வெளிவந்தது. அதுக்காகவும் நிறைய வாசிச்சேன். உண்மையைச் சொல்லனும்னா இந்த வெற்றியில விகடனுக்கு முக்கியப் பங்குண்டு. சின்ன வயசிலிருந்தே வந்த வாசிப்புப் பழக்கம்தான் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற உதவுச்சு. அதோட, ரெண்டு முக்கியமான விஷயங்கள் இருக்கு. சிவில் சர்வீஸ் தேர்வில் ஜெயிக்கணுனா, எந்தத் தொந்தரவும் இல்லாம முழுசா அர்ப்பணிச்சுக்கிட்டுப் படிக்கணும். சரியான வழிகாட்டுதல் இருக்கணும். இது ரெண்டும் எனக்கு கரெக்டா அமைஞ்சது...” என்கிறவர், விருப்பப் பாடமாக தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தது குறித்துக் கேட்டேன்.

பெற்றோருடன் ஜீஜீ
பெற்றோருடன் ஜீஜீ

‘‘திருக்குறள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன். அந்த ஆர்வம்தான் விருப்பப் பாடமா தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுக்க வெச்சது...” என்கிறார் ஜீஜீ.

‘‘முதல்நிலைத் தேர்வில் அறிவும் தன்னம்பிக்கையும் முக்கியம். அடுத்தது, நமது பாடத்திட்டம் என்னங்கிறதைச் சரியா புரிஞ்சுக்கிட்டு அது தொடர்பான புத்தகங்களைத் தேடிப்பிடிச்சுப் படிக்கணும். முதல்நிலைத் தேர்வை 5 லட்சம் பேர் எழுதுறாங்கன்னா 13,000 பேர்தான் அடுத்த கட்டத்துக்குத் தேர்வாகுறாங்க. அதிகம்பேர் தோல்வியடைறது முதல்நிலைத் தேர்வில்தான். அதனால அதுல கூடுதல் கவனம் செலுத்தணும். முக்கியமா, முதல்நிலைத் தேர்வு எழுதுறதுக்கு முன்னாடி குறைஞ்சது 60 மாதிரித் தேர்வுகளாவது எழுதியிருக்கணும். ஏற்கெனவே கேட்கப்பட்ட வினாத்தாள்களை மாதிரியாக வைத்துத் தேர்வு எழுதலாம். என்னென்ன பாடங்களில் எப்படியெல்லாம் கேள்வி கேட்டிருக்காங்கன்னு அனலைஸ் பண்ணிப் பார்க்கணும். அப்படிச் செஞ்சா முதல்நிலைத் தேர்வை கிளியர் பண்ணிடலாம்.

முதன்மைத் தேர்வைப் பொறுத்தவரை சரியான கன்டென்ட் நம்ம கைல இருக்கணும். அதோட, விடைத்தாள்களை பிரசன்ட் பண்ணுற விதமும் முக்கியம். நம்ம விடைத்தாள்களைத் திருத்துறவங்களுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்கணும். கையெழுத்து ரொம்ப ரொம்ப முக்கியம். எழுதி எழுதிப் பயிற்சி எடுத்தால் முதன்மைத்தேர்வு சக்சஸ் ஆகும்.

நேர்முகத்தேர்வைப் பொறுத்தவரை, நாம் யார்ங்கிறதெல்லாம் அதிகாரிகளுக்குத் தெரியாது. நம்மைப்பற்றித் தெரிந்துகொள்வதற்கான தேர்வுதான் அது. அதுக்கு நிறைய பயிற்சி எடுக்கணும். நம்மள நாம முழுசாப் புரிஞ்சு வச்சுக்கணும். பள்ளியில் ஆரம்பிச்சு கல்லூரிவரைக்கும் என்ன படிச்சோம்... எப்படிப் படிச்சோம்... ஏன் அந்தப் பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படிச்சோம்ங்கிறதை எல்லாம் நினைவுப்படுத்தித் தெளிவா ஞாபகம் வச்சுக்கணும். நான் நேர்முகத்தேர்வுக்குப் போனபோது 5 பேர் இருந்தாங்க. முதல் கேள்வியே என்னோட பேருக்கான அர்த்தம் கேட்டாங்க. நான், காரணத்தைச் சொன்னேன். ‘தமிழ்நாட்டுல சினிமாவோட தாக்கம் எந்த அளவுக்கு இருக்கு’ன்னு கேட்டாங்க. கதை, கவிதை எழுதுறதுல எனக்கு இன்ட்ரஸ்ட்ங்குறதால, ‘நீங்க எழுதுறதால மக்களுக்கு என்ன பயன்’னு கேட்டாங்க. ஒருத்தர், 'தமிழ்நாட்டுல நீங்க ஒரு மாற்றத்தைக் கொண்டுவர நினைச்சா, எதைக் கொண்டுவருவீங்க'ன்னு கேட்டார். அதுக்கு நான் கொடுத்த பதில் ‘பெண் சுதந்திரம்.’ ‘பெண் சுதந்திரத்தை யாரோ கொடுக்கணும்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்கக்கூடாது. அது நமக்கான உரிமைன்னு பெண்களே உணரணும். அதை உணர்த்துறமாதிரி பெண்களுக்காக நிறைய திட்டங்களைக் கொண்டுவருவேன்'னு சொன்னேன்.

அன்னைக்கு வெளியான செய்திகளின் அடிப்படையிலேயும், நான் படித்த வணிகவியல் தொடர்பாவும் 25 கேள்விகளுக்கு மேல கேட்டாங்க. எல்லாத்துக்கும் பதில் கொடுத்தேன். எந்த ரியாக்‌ஷனும் இல்லாம கேட்டுக்கிட்டாங்க. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 500. என்னோட மதிப்பெண் 271. நேர்முகத்தேர்வுக்கு மொத்தம் 275 மதிப்பெண். நான் 193 எடுத்தேன். இது குறிப்பிடும்படியான மதிப்பெண்தான்’’ என்கிற ஜீஜீ இப்போது ஐ.எஃப்.எஸ் எனப்படும் வெளியுறவுப் பணிக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார். “பெரும்பாலும் ஐ.ஏ.எஸ் ஆகணும்னுதான் ஆசைப்படுவாங்க. நீங்க ஏன் ஐ.எஃப்.எஸ் தேர்ந்தெடுத்தீங்க?” என்றேன்.

ஜீஜீ
ஜீஜீ


‘‘சிவில் சர்வீஸுக்குப் படிக்கும்போதே மெல்ல மெல்ல அயல்நாட்டுச் செய்திகள் மீது ஆர்வம் வந்துடுச்சு. உக்ரைன்ல போர் நடந்தது. நமது இந்திய மாணவர்கள் அதில் சிக்கிக் கஷ்டப்பட்டதை நினைச்சு எல்லோருமே வருத்தப்பட்டோம். இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துற அயல்நாட்டுச் செய்திகளுக்குப் பின்னால் இருக்கக்கூடிய பணிகள் என்ன? நம் நாட்டுத் தூதர்கள் எப்படிப் பணிபுரியுறாங்க... இதையெல்லாம் பார்க்கணும்னு ஆர்வப்பட்டேன். அந்த ஆர்வத்துலதான் ஐ.எஃப்.எஸ்ஸுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கேன்” என்கிறவரிடம், ‘‘உங்களுக்கு சவாலான விஷயமா இருந்தது எது?’’ என்று கேட்டேன்.

‘‘மாதிரித் தேர்வுகள்ல மதிப்பெண்கள் குறைஞ்சா, எனக்கு உடனே நாம கரெக்டா தான் போறோமான்னு சந்தேகம் வந்துடும். இன்னும், கடின உழைப்பைப் போடுவேன். தினமும் 8 மணி நேரம் இந்தத் தேர்வுக்காகப் படிச்சேன். நான் எந்த சோஷியல் மீடியாவிலும் இல்லை. முதன்மைத் தேர்வுல தேர்ச்சிபெற்றபிறகுதான் வாட்ஸ்அப்பே போன்ல இன்ஸ்டால் பண்ணினேன். இணையதளங்களை ஆக்கபூர்வமா பயன்படுத்திக்கிட்டேன். படிப்பு படிப்புன்னு இருக்கிறதால மன அழுத்தம் ஏற்படும். அதனால, நடுநடுவே ரிலாக்ஸ் பண்ணிக்கணும். என்னை ரிலாக்ஸ் ஆக்கிக்க, காந்தியோட சுயசரிதை படிச்சேன். அகிம்சை வழியைத் தேர்ந்தெடுத்த காந்தி எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். நானும் அந்த வழியைத்தான் தேர்ந்தெடுப்பேன்’’ என்கிறார் அழுத்தமாக.

எளிய குடும்பத்திலிருந்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதித்திருக்கிற ஜீஜீ, நம் எல்லோருக்குமான நம்பிக்கை!

 மனிதர்களின் வேலையைப் பறிக்கப் போகிறது... அபாயம்!' என்றெல்லாம் ஒரு பக்கம் குரல்கள் ஒலித்தாலும், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவை உலகம் இருகரம் கூப்பி வரவேற்கத்தான் செய்கிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பொறியியல் துறையில் Artificial Intelligence-ன் வளர்ச்சி பிரமாண்டமாக மாறப்போகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

செயற்கை நுண்ணறிவு என்பது பொறியியல் மற்றும் அறிவியலின் உதவியால் ஒரு இயந்திரம் அல்லது கணினியானது மனிதத் தலையீடு இல்லாமல் பணிகளைச் செய்வதாகும். உதாரணமாக, முன்பெல்லாம் டோல்கேட்களில் வண்டிகள் வரிசைகட்டி நிற்கும். இப்போது போய் நின்றவுடன் நொடிப்பொழுதில் உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்துவிடுகிறது கம்ப்யூட்டர். இப்படி படிப்படியாக எல்லாத் தொழில்களுக்குள்ளும் செயற்கை நுண்ணறிவு ஊடுருவி வருகிறது. கேட்ட கேள்விக்குப் பதில் தருவது, உங்களுக்காக ஒரு கடிதம் எழுதுவது தொடங்கி, திரைப்படங்கள் எடுப்பது வரை இந்தத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

கம்ப்யூட்டர் படிப்பில் ஹாட் வரவுகள்!
கம்ப்யூட்டர் படிப்பில் ஹாட் வரவுகள்!

ChatGPT, Google's Bard உள்ளிட்ட சில AI-களின் தோற்றம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இது பொறியியல் மாணவர்களிடையே AI, Machine Learning, Cyber Security, Data Science ஆகிய படிப்புகளுக்கான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் (AICTE), இப்படிப்புகளைத் தொடங்க பொறியியல் கல்லூரிகளை ஊக்குவிக்கிறது. கடந்த ஆண்டு தொழில்நுட்பக் கல்வி கலந்தாய்வில் 14,000 இடங்கள் இப்படிப்புகளுக்காக ஒதுக்கப்பட்டன. மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வரவேற்பைத் தொடர்ந்து இவ்வாண்டு மட்டும் 134 பொறியியல் கல்லூரிகள் இந்தப் படிப்புகளைத் தொடங்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்துள்ளன. இதன்மூலம் சுமார் 8,490 இடங்கள் அதிகரித்துள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை B.Tech Artificial Intelligence and Data Science, B.E. CSE (Artificial Intelligence & Machine Learning), B.E. CSE (Cyber Security) மற்றும் B.Tech Artificial Intelligence and Machine Learning போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் 4 ஆண்டு பொறியியல் இளநிலைப் பட்டப்படிப்புகள். தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடந்தும் கலந்தாய்வில் +2 மதிப்பெண் அடிப்படையில் இப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். +2வில் கணிதம், இயற்பியல் எடுத்துப் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கம்ப்யூட்டர் படிப்பில் ஹாட் வரவுகள்!
கம்ப்யூட்டர் படிப்பில் ஹாட் வரவுகள்!

“பிளஸ் 1, பிளஸ் 2 கணிதப் பாடங்களில் வரும் டிஃப்ரென்ஷியல் கால்குலஸ், நிகழ்தகவு (Probability), மெட்ரிக்ஸ் ஆகிய பாடங்களே இதற்கு அடிப்படை. இத்துறையைத் தேர்தெடுக்கும் மாணவர்கள் கணிதத்தில் தேர்ந்தவர்களாக இருப்பது அவசியம்” என்கிறார் நார்வே நாட்டின் ஆர்க்டிக் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றும் சேஷாத்ரி தனசேகரன்.

இத்துறையில் பட்டம் பெறுபவர்களுக்கு சுகாதாரம், வர்த்தகம், இ-வணிகம், நெட்வொர்க்கிங் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் AI பொறியாளர், வணிக நுண்ணறிவு நிபுணர், டேட்டா சயின்டிஸ்ட், டேட்டா மைனிங் இன்ஜினீயர், மெஷின் லேர்னிங் இன்ஜினீயர் மற்றும் ஆராய்ச்சியாளர் என பல்வேறு நிறுவனங்களில் பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

சேஷாத்ரி தனசேகரன்

‘‘AI படிப்போர் கணித ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். மேலும், வேகமாக வளர்ந்துவரும் இத்துறையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் குறைவாகவே உள்ளனர். அதனால் கற்பிக்கும் ஆசிரியர்களின் பணி அனுபவத்தையும் இந்தத் துறையில் அவர்களுக்கு இருக்கும் நிபுணத்துவத்தையும் பார்ப்பது அவசியம். பெரும்பாலும் நகர்ப்புறங்களில் இருக்கும் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. கல்லூரியில் நல்ல நூலகம் இருப்பது முக்கியம். துறைசார்ந்த உலகளாவிய இதழ்கள் நூலகத்துக்கு வருகிறதா என்று விசாரித்து அறிந்துகொள்ளுங்கள். அந்த இதழ்கள் மூலமாக மாணவர்கள் அப்டேட் செய்துகொள்ள முடியும். மாணவர்களே தேர்வு செய்யும் எலெக்ட்டிவ்ஸ் பாடங்களுக்கு தனியாக அனுபவமுள்ள ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பதையும் பார்க்கவேண்டும்.

இளநிலையில் செயற்கை நுண்ணறிவு போன்ற சூப்பர் ஸ்பெஷலைசேஷன் படிப்புகளைத் தேர்வு செய்வது சரியல்ல என்பது கல்வியாளர்களின் ஆலோசனை. இளநிலையில் கோர் படிப்புகளான Computer Science, Information Technology போன்ற படிப்புகளை முடித்துவிட்டு முதுநிலையில் Artificial Intelligence போன்ற ஸ்பெஷலைசேஷன் படிப்புகளைப் படிக்கலாம்’’ என்கிறார் சேஷாத்ரி.

AI தொழில்நுட்பம் அடுத்த பத்தாண்டுகளுக்கு நிலையாக நின்று உலகத்தை ஆளும் என்கிறார்கள் நிபுணர்கள். கணிதத்திலும் கம்ப்யூட்டரிலும் ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்தப்பக்கம் கவனத்தைத் திருப்பலாம்!