Monday, June 5, 2023

அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவம் மற்றும் தொழில்முறைப் படிப்புகளில் உரிய பங்கேற்பு கிடைக்க வசதியாக தமிழ்நாடு அரசு சிறப்புச் சட்டம் வழியாகக் கொண்டுவந்ததுதான் 7.5% ஒதுக்கீடு. ஆரம்பத்தில் குறைவான அளவிலேயே மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டின் வழியாகச் சேர்கிறார்கள். நீட் தேர்வு தாண்டி இன்னும் பல படிப்புகளில் இந்த ஒதுக்கீடு மூலம் சேரமுடியும் என்ற விழிப்புணர்வு மாணவர்களிடமோ பெற்றோரிடமோ இருப்பதில்லை.


இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டின் வழியாக எந்தெந்தப் படிப்புகளில் சேர முடியும் என்று பார்ப்போம்.

மருத்துவப் படிப்புகள்

MBBS, B.D.S, AYUSH மருத்துவப் படிப்புகளான ஆயுர்வேதா (Bachelor of Ayurvedic Medicine and Surgery - BAMS), யுனானி (Bachelor of Unani Medicine and Surgery -BUMS), சித்தா (Bachelor of Siddha Medicine and Surgery - BSMS), ஹோமியோபதி (Bachelor of Homeopathic Medicine and Surgery - BHMS) ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வு அவசியம். நீட் தேர்வு எழுதி இந்தப் படிப்புகளில் சேரவிரும்புகிற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு உண்டு. AYUSH மருத்துவத்தில் BNYS எனப்படும் Bachelor of Naturopathy and Yogic Science, B. Pharm, Occupational Therapy உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கிடையாது என்பதால் இந்தச் சிறப்பு ஒதுக்கீடு பொருந்தாது.

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகள்

கால்நடை மருத்துவ அறிவியல் தொடர்பான படிப்புகளை இரு பகுப்பாகப் பிரிக்கலாம். ஒன்று B.V.Sc (Bachelor of Veterinary Science). மற்றொன்று இதிலேயே தொழில்நுட்பம் தொடர்பான படிப்புகள். Dairy Technology, Food Technology, Poultry Technology. இந்தப் படிப்புகளை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்தப் படிப்புகளுக்கான சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீடு உண்டு.

கல்விச் சிறப்பிதழ்
கல்விச் சிறப்பிதழ்

சட்டப் படிப்புகள்

தமிழ்நாட்டில் சட்டப் படிப்புகளை இரண்டு பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. ஒன்று, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், மற்றொன்று, ரங்கத்தில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம். இதில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு CLAT என்கிற நுழைவுத் தேர்வு எழுதவேண்டும். தேர்வெழுதித் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு உண்டு. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இரண்டு விதமான விண்ணப்பங்கள் உள்ளன. சீர்மிகு சட்டப்பள்ளிக்கு (School of Excellence) ஒரு விண்ணப்பமும், பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற 15 அரசு சட்டக் கல்லூரிகள், 8 தனியார் சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு ஒரு விண்ணப்பமும் உள்ளது. இந்த இரண்டு கல்வி நிறுவனங்களிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% ஒதுக்கீட்டின் வழியாக இணைய முடியும்.

கட்டடக்கலை சார்ந்த படிப்புகள் (Architecture)

அண்ணா பல்கலைக்கழகம் சான்றளிக்கக் கூடிய B.Arch படிப்புகளில், NATA அல்லது JEE 2-A தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். வருடத்திற்கு மூன்று முறை இந்தத் தேர்வு நடக்கும். இரண்டு தேர்வுகள் முடிந்த நிலையில் மூன்றாம் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இப்போது நடந்து வருகிறது. இப்போது படிக்க விரும்புகிற மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதலாம். ஜூன் 24-ம் தேதி இதற்கான பதிவுகள் முடிவடையும். 7.5% ஒதுக்கீட்டில் ஒட்டுமொத்தமாக இருக்கும் 140 இடங்களில் வருடம்தோறும் ஒற்றை எண்ணிக்கையில்தான் மாணவர்கள் சேர்கின்றனர். கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு வெறும் 2 பேரும் சென்ற ஆண்டு 4 பேரும் மட்டுமே சேர்ந்தனர். கட்டடக்கலைப் படிப்புக்கான சேர்க்கை பிளஸ் 2-வில் பெற்ற மதிப்பெண்ணையும் NATA தேர்வில் பெறுகிற மதிப்பெண்ணையும் அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது.

வேளாண்மை சார்ந்த படிப்புகள்

தமிழ்நாட்டில் வேளாண்மை சார்ந்த படிப்புகளை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளும் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் வழங்குகின்றன. இந்த இரண்டுக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும். இந்த இரண்டு படிப்புகளுக்கும் இந்த 7.5% ஒதுக்கீடு பொருந்தும்.

மீன்வளம் சார்ந்த படிப்புகள்

மீன்வளம் சார்ந்த படிப்புகள் இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கான விண்ணப்பத்துடனே இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகளை தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் நடத்துகிறது, இது தவிர அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மீன்வளம் சார்ந்த படிப்புகள் உள்ளன. மீன்வளப் படிப்புகளுக்கும் 7.5% ஒதுக்கீடு பொருந்தும்.

பொறியியல் படிப்புகள்

பொறியியலைப் பொறுத்தவரை TNEA வழியாக விண்ணப்பிக்கும்போது இரண்டுவிதமான படிப்புகள் உள்ளன. ஒன்று பொறியியல் சார்ந்தவை. இன்னொன்று B.Plan எனச் சொல்லக்கூடிய கட்டடவியல் மற்றும் அமைப்பியல் கல்லூரியில் நடத்தப்படும் திட்டம் சார்ந்த படிப்புகள். அண்ணா பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 4. சான்றிதழ்கள் சரிபார்க்க ஜூன் 9 தேதி வரை அவகாசம் உள்ளது. இந்த இரண்டுவித படிப்புகளுக்கும் 7.5% சிறப்பு ஒதுக்கீடு உண்டு.

இந்த எல்லா ஒதுக்கீடுகளும், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குப் பொருந்தாது. அவர்களுக்கும் இந்த ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன. இருப்பினும் இந்தக் கல்வியாண்டில் கிடைக்க வாய்ப்பில்லை. 7.5% சிறப்பு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், உணவுக் கட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசே செலுத்திவிடும். இதுதவிர மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான IIT, NIT, AIIMS, IIM போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கத் தேர்வுபெறும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கும்.

No comments:

Post a Comment