Monday, June 26, 2023

 நீட் தேர்வு கோச்சிங் - பெற்றோர்களுக்கான சில நடைமுறை உபயோகக் குறிப்புகள்!

+2 தேர்வுடன் சேர்த்து நீட் தேர்வுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்கும் உறைவிடப்பள்ளிகள்தான் இப்போது சென்னையில் டிரெண்டிங். இந்தப் பள்ளிகளில் +2 தேர்வு என்பது ஒப்புக்குத்தான். அதற்கான தனிப்பட்ட பயிற்சிகள் எதுவும் அளிக்கப்படமாட்டாது. முழுக்கவனமும் நீட் தேர்வு கோச்சிங்கில்தான் இருக்கும். ஒரே மாணவரின் நீட் மதிப்பெண், +2 மதிப்பெண் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியும்.


உறைவிடப் பள்ளிக்கான கட்டணம் வருடத்திற்கு 3.5 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கும். தடங்கல் இன்றிப் படிக்க குறைந்த மாணவர்களுடன் அறையைப் பகிர்ந்துகொள்ளும் வசதி வேண்டுமென்றால் வருடத்திற்கு 6 லட்சம் வரை ஆகலாம். நீட் கோச்சிங் கட்டணம் வருடத்திற்கு 1.36 லட்சம் (இது போன வருடம், இந்த வருடம் இன்னும் அதிகரிக்கலாம்.)


இவை இல்லாமல் பேனா, பென்சில், பள்ளியில் தரப்படாத நோட்டு புத்தகங்களுக்கான செலவு, துணையாக வேறு ஆன்லைன் கோச்சிங், நீட் தயாரிப்பு மெட்டீரியல் வாங்கும் செலவுகள் தனி. சென்னையில் வசிக்காத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்க்க வரும் செலவுகள், ஊருக்கு அழைத்துச் செல்லும் செலவுகள், ஆடை, அணிகலன் செலவுகள் கூடுதலாக இருக்கும்.

தேர்வு நெருங்கும்போது அதாவது நீட் தேர்வுக்கு இரண்டு, மூன்று மாதங்கள் முன்பு, கோச்சிங் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், விடுதியில் போதிய கவனிப்பு இருக்காது என்பதால் அப்போது மட்டும் பள்ளிக்கு அருகில் தனியாக வீடு எடுத்துத் தங்கிப் படிப்பது அல்லது சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கிப் படிப்பது என்பது பொதுவாகப் பின்பற்றப்படும் நடைமுறை (நினைத்த நேரத்திற்கு காபி, தேநீர் போட்டுத்தர / படிக்க தொந்தரவு இல்லாத சூழலை அமைக்க / பழங்கள், சூப் கொடுத்துத் தேர்வுக்குத் தயார்படுத்த விடுதிகள் ஒத்துவராது). இதற்காகவே இரண்டு, மூன்று மாதங்கள் வாடகைக்கு விடப்படும் வீடுகள் (Furnished homes) கிடைக்கின்றன. இதன் செலவு தனி.

இவை இல்லாமல் லேப்டாப், தேசிய அளவில் பிற நிறுவனங்கள் நடத்தும் ஆன்லைன் ‘மாக் எக்ஸாம்’ போன்றவற்றிற்கான செலவுகள்...

இதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்கள் ஒரு வருடத்திற்கானவை. அவற்றை இரண்டு வருடங்களுக்குக் கணக்கிட்டுக்கொள்ளவும்.

No comments:

Post a Comment