Thursday, June 1, 2023

உயர்கல்வியைத் தேர்வு செய்வது எப்படி?

பிளஸ் 2 முடித்தவர்கள் மனதில் எந்தப் படிப்பிற்கு அதிக மதிப்பிருக்கும், எதைப் படித்தால் உடனே வேலை கிடைக்கும் என எக்கச்சக்கமான கேள்விகள் அலைபாய்ந்து கொண்டிருக்கும். அவர்கள் உயர்கல்வியைத் தேர்வு செய்வது எப்படி? கல்வியாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கையில் போகிற போக்கில் கருத்து சொல்பவர்களுக்கு முக்கியத்துவமே கொடுக்கக்கூடாது. அவர்களைப் புறந்தள்ளிவிட வேண்டும்'' என்ற எச்சரிக்கையுடன் ஆரம்பிக்கும் ஜெயப்பிரகாஷ் காந்தி, ‘‘2023-ல் பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவர்கள், இன்றைய தேதிக்கு என்ன படிப்பிற்கு அதிக வாய்ப்பும் தேவையும் இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துப் படிக்க நினைப்பார்கள். ஆனால், அவர்கள் 2026-27 சமயத்தில் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வரும்போது கல்விச்சூழலும் வேலைவாய்ப்புச் சூழலும் முற்றிலும் வேறாக இருக்கக்கூடும். இன்றைய நிலையை மனதில் கொள்ளாமல் வருங்காலத்தை யோசிக்க வேண்டும்.

தொழில்துறையில் என்னென்ன முன்னேற்றங்கள் நடக்கின்றன, நாம் தேர்ந்தெடுக்கும் துறை சார்ந்து நம்மைத் தனித்துக் காட்ட என்னென்ன சான்றிதழ் படிப்புகள் இருக்கின்றன என்று தேடிப் படிக்க வேண்டும். எல்லாவற்றிலும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். இது செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) துறையின் காலம். வரலாறு படிக்கும் மாணவனுக்கும் AI குறித்துத் தெரிந்திருக்க வேண்டும். AI-யை சமயோசிதமாகப் பயன்படுத்தி விரைவில் வேலையை முடிக்கும் நபர்களுக்கு வேலைவாய்ப்புச் சந்தையில் அதிக மவுசு உண்டாகும் காலம் வரப்போகிறது. ஆனால், நம் பாடப்புத்தகங்கள் அடிப்படையான தொழில்நுட்பங்களை மட்டுமே கற்பிக்கின்றன. கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்தக் கல்லூரியில் பாடப்புத்தகத்தைத் தாண்டியும் கற்பதற்கான வெளி இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். முதலில் மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று அங்கே என்ன வசதி வாய்ப்புகளெல்லாம் இருக்கின்றன என்பதை அறிய வேண்டும். அந்தக் கல்லூரியில் படித்து நல்ல வேலையில் இருக்கும் நபர்களின் அனுபவத்தைக் கேட்டறிவது சிறப்பு.

சான்றிதழ் படிப்புகளைப் பற்றிய தெளிவும் விழிப்புணர்வும் இருக்க வேண்டும். ‘Prompt Engineering' என்றொரு பாடம் இருக்கிறது. AI பற்றிய புரிதலோடு ‘Prompt Engineering'-கில் சான்றிதழ் படிப்பையும் முடித்தால் கற்பனைக்கு எட்டாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், இதேமாதிரியான படிப்புகளையும் தொழில்நுட்பத்தையும் ஏழை மாணவர்கள் அறிந்துகொள்ள பொருளாதாரம் பெரும் தடையாக உள்ளது. அரசு அடுத்தடுத்து புதிய புதிய கல்லூரிகளைக் கட்டுவதற்கு பதிலாக இருக்கிற கல்லூரிகளில் நவீனத் தொழில்நுட்பங்களை இன்னும் மேம்படுத்தலாம். அது எளிய மாணவர்களுக்குப் பயன் தரும்.

கல்வி உதவித்தொகைகள் பற்றி அறிந்துகொள்ள ‘National Scholarship Portal' என்று ஒரு தளமே இருக்கிறது. ‘NAAC' தரச்சான்றிதழ் பெற்ற கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் வங்கிகளில் கடன் வாங்கும்பட்சத்தில் அவர்களின் கடன்மீதான வட்டியை அரசே ஏற்றுக்கொள்வது போன்ற வாய்ப்புகளும் இருக்கின்றன'' என அழுத்தமாகச் சொல்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.



‘‘நீட் தேர்வு எழுதியிருக்கும் மாணவர்களுக்கு அரசு அல்லது அரசு உதவிபெறும் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லையெனில் மனம் தளர்ந்துவிடக்கூடாது. சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதிக், யுனானி போன்றவற்றை எடுத்துப் படிக்கலாம். அவையும் எம்.பி.பி.எஸ்-க்கு இணையானவைதான். இதுவும் இல்லையெனில் BMYS என ஒரு படிப்பு இருக்கிறது. அதற்கு நீட் தேவை இல்லை'' என்கிறார் ராஜராஜன்.

‘‘இதைத் தாண்டி துணை மருத்துவப் படிப்புகளையும் தேர்வு செய்யலாம். நர்சிங், பிசியோதெரபி சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதற்கும் நீட் மதிப்பெண் தேவையே இல்லை. இவற்றைக் கடந்து பார்த்தால், தேசிய பாதுகாப்பு அகாடமியின் நுழைவுத்தேர்வு இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கிறது. அதில் தேர்வானால் படிப்போடு ராணுவத்தில் வேலையும் கிடைக்கும். பி.காம் தேர்வு செய்பவர்கள் கல்லூரிப் படிப்பின்போதே CA, CME, போன்றவற்றையும் சேர்த்துப் படிக்க வேண்டும். முழுநேரப் படிப்போடு சான்றிதழ் படிப்பைப் படிக்க நினைப்பவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி நல் வாய்ப்புகளை வழங்கிவருகிறது. B.Sc Data Science & Programming மற்றும் B.Sc Electronic & Embedded System போன்ற ஆன்லைன் படிப்புகளை ஐ.ஐ.டி வழங்கிவருகிறது. இதைப் படிப்பதற்கு ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகையையும் ஐ.ஐ.டி வழங்குகிறது'' என்கிறார் அவர்.
ஜெயப்பிரகாஷ் காந்தி - ராஜராஜன்

‘‘அரசுப்பணிக்கெனத் தயாராகும் மாணவர்கள் கல்லூரிப் படிப்பைத் தாண்டியும் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஆளுமைத் திறனையும் சமயோசிதத் திறனையும் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். சிலருக்கு சிவில் சர்வீஸில் தேர்ச்சியாக வேண்டும் என்கிற கனவு இருக்கும். சிவில் சர்வீஸ் தேர்வை எழுத ஏதேனும் ஒரு இளங்கலை டிகிரியே போதுமானது. மெயின்ஸ் தேர்வில் எதை விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுப்பது என்பதைப் பற்றியெல்லாம் இப்போதே யோசிக்காமல் முதலில் அந்த முதல்நிலைத் தேர்வை எப்படி பாஸ் செய்வது என்பதைப் பற்றியே யோசிக்க வேண்டும்'' என்கிறார் ராஜராஜன்.


விஷுவல் கம்யூனிகேஷன் என்பது தனித்துவமான படிப்பு. கிரியேட்டிவ் திறன் சார்ந்தது. நவீனத் தொழில்நுட்பங்கள் வழி கற்பனைக்கு உயிர்கொடுக்கும் படிப்பு. உலகம் முழுவதும் வேலைவாய்ப்பும் தேவையும் உள்ள இந்தப்படிப்பு இளைஞர்களை ஈர்ப்பதில் வியப்பில்லைதான். ஆனால் ஏராளமான விஸ்காம் பட்டதாரிகள் பலவிதக் கனவுகளோடு படிப்பை முடித்துவிட்டு, வேலையில்லை என்று வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதுதான் கவனிக்க வேண்டிய முரண்.

விஸ்காம் என்பது சினிமா சார்ந்த படிப்பு என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அந்த எண்ணத்துடனே கல்லூரிக்கு வருகிறார்கள். படித்து முடித்ததும் சினிமாத்துறையிலிருந்து வீட்டுக்கு அழைப்பு வரும் என்று நம்புகிறார்கள். உண்மையில் திரைப்பட இயக்கம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு பற்றியெல்லாம் சொல்லிக்கொடுக்க சென்னைத் திரைப்படக் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் தனியாக இயங்குகின்றன. போட்டோகிராபி, ஆவணப்படம், குறும்படம், சமூக ஊடகங்கள், பிரின்டிங், ரேடியோ, மக்கள்தொடர்பு, விளம்பரப் படங்கள், ஈவென்ட், இதழியல், அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், சவுண்ட் டெக்னாலஜி, எடிட்டிங், கிராபிக்ஸ் எனப் பல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய படிப்பு அது. வெறும் சினிமாக் கனவுகளோடு மட்டும் இந்தப் படிப்பை எடுத்துப் படிக்கக்கூடாது. விஷுவல் கம்யூனிகேஷன் பாடப்பிரிவுகளில் எது நமக்கானது என்ற சுயதேர்வு மூன்று வருடங்களில் உங்களுக்கு வந்துவிட வேண்டும். அதில் உங்களை முழுமைப்படுத்திக்கொண்டால் நிச்சயம் பிரகாசமான வாய்ப்புகள் உண்டு.

விஷுவல் கம்யூனிகேஷன்
விஷுவல் கம்யூனிகேஷன்

+2-வில் வணிகவியல், அறிவியல் என எந்தப் பிரிவை எடுத்துப் படித்திருந்தாலும் மூன்றாண்டுக் கால இளநிலை விஷுவல் கம்யூனிகேஷன் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். விஷுவல் தொழில்நுட்பங்களில் ஆர்வம் மற்றும் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில், பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்கும். பெங்களூரு செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகம், சென்னை லயோலா கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில கல்வி நிறுவனங்கள் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்கின்றன.

B.A Visual Communication, B.Sc Visual Communication, B.Des (Visual Communication) எனக் கல்வி நிறுவனங்களுக்கு ஏற்றபடி இளநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆயினும் பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை பெரிய வேறுபாடுகள் இருக்காது.

“விஸ்காம் என்பது வெப் டிசைனிங், கிராபிக்ஸ் டிசைனிங், பிரின்டிங் பப்ளிகேஷன், மல்டி மீடியா, அட்வர்டைசிங், போட்டோகிராபி, சவுண்ட் டெக்னாலஜி, வீடியோகிராபி, அனிமேஷன் எனக் காட்சித் தொடர்புகளில் மாணவர்களின் திறன்களை வளர்க்கும் படிப்பு. சினிமா மட்டுமன்றி, போட்டோகிராபி, விளம்பரத்துறை எனப் பல துறைகளில் இப்படிப்பைப் படித்தவர்கள் உயரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். OTT தளங்களின் அதிகரிப்பு மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி காரணமாக விஸ்காம் படித்தவர்களுக்கான வாய்ப்பு இன்னும் அதிகரிக்கவே செய்யும். இந்தப் படிப்பின் பாடத்திட்டம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஆண்டுக்காண்டு மாறிக்கொண்டே இருக்கிறது. இளநிலை முடித்த மாணவர்கள் முதுநிலையில் குறிப்பிட்ட துறையைத் தேர்வுசெய்து படித்தால் மிகச்சிறந்த எதிர்காலம் அமையும்’’ என்கிறார் லயோலா கல்லூரி விஸ்காம் துறைத் தலைவர் இருதயராஜ்.

சேது, திருவாசகம், இருதயராஜ்
சேது, திருவாசகம், இருதயராஜ்

‘‘விஸ்காம் படிப்பவர்கள், கல்லூரிகளில் சொல்லித்தரும் தியரிகளைத் தாண்டி செயல்முறைப் பயிற்சி எடுத்துக்கொள்வது நல்லது. கூடவே, தொடர்புள்ள விஷயங்களைத் தனியாகக் கற்றுக்கொண்டால் படிப்பை முடித்ததும் உடனடியாக வேலை கிடைக்கும்’’ என்கிறார் விஸ்காம் முடித்துவிட்டு எடிட்டராகப் பணியாற்றும் தாம்பரத்தைச் சேர்ந்த சேது.

‘‘விஷுவல் கம்யூனிகேஷனை, காட்சித் தொடர்பியல் குறித்த ஓர் அறிமுகப் படிப்பாகக் கருதவேண்டும். அத்துறையில் இருக்கும் பல்வேறு வாய்ப்புகள் குறித்த அடிப்படையான விஷயங்கள் இப்படிப்பில் இருக்கும். மாணவர்கள், இதில் எது தங்களுக்கு உகந்ததாக இருக்குமோ அதை அடையாளம் கண்டு தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ‘கேமரா என்பது ஒரு அறிவியல் சாதனம். அது நீங்கள் படம் பிடித்தாலும் படம் பிடிக்கும்... நான் படம் பிடித்தாலும் பிடிக்கும். ஆனால் அதைவைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் எல்லாமே இருக்கிறது' என்று பாலு மகேந்திரா சொல்லுவார். அது விஸ்காம் படிப்புக்கும் பொருந்தும். இது வெறும் தொழில் சார்ந்த படிப்பு மட்டும் கிடையாது. படைப்புத்திறன் சம்பந்தப்பட்டது. இந்தப் படிப்பில் சேரும் மாணவர்கள் படைப்பாற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். படிப்பதற்குச் சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்யவேண்டும். அதுதான் மிகவும் முக்கியமானது...’’ என்கிறார் விஸ்காம் துறை ஆசிரியர் திருவாசகம்.

விஷுவல் கம்யூனிகேஷன் முடித்தவர்களுக்கு OTT தளங்களில் நிறைய வேலைவாய்ப்புகள் உண்டு. Facebook, Google போன்ற நிறுவனங்களில் UX/UI வடிவமைப்பாளர்களாகப் பலர் பணிபுரிகின்றனர். Zoho, அமேசான் போன்ற IT நிறுவங்களின் பிராண்ட் மேலாளர், கிராபிக் டிசைனர்/விஷுவல் டிசைனர், illustrator போன்ற பணி வாய்ப்புகளும் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டதாரிகளுக்கு இருக்கின்றன. போஸ்டர் டிசைனர், பப்ளிசிட்டி டிசைனர், புகைப்படக் கலைஞர் என பலர் தற்சார்பாக அதிக வருமானத்தை ஈட்டுகிறார்கள்.

‘ஏணியைக் கூரைக்குப் போடாதே, வானத்துக்குப் போடு' என்பார்கள். விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்களுக்கும் அது பொருந்தும். படிப்பை முடித்தவுடன் சினிமாத்துறை நம்மைக் கைகூப்பி அழைத்து அரவணைத்துக்கொள்ளும் என்று நம்பாமல் தங்களுக்கேற்ற துறையைக் கண்டுபிடித்து அடுத்தடுத்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும்!

விஷுவல் கம்யூனிகேஷன்
விஷுவல் கம்யூனிகேஷன்

விஸ்காம் எதிர்காலம்!

இளநிலை விஷுவல் கம்யூனிகேஷன் படிக்க, கல்லூரியைப் பொறுத்து ஆண்டுக்கு 45,000 முதல் 7 லட்சம் ரூபாய் வரை செலவாகலாம். ஒரு சில கல்லூரிகள், கேமரா, லேப்டாப் சொந்தமாக வைத்திருக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இளநிலை படிப்பு முடித்தவர்கள், விஷுவல் கம்யூனிகேஷனில் M.Sc, MA படிக்கலாம். தவிர, MA Graphic Design, M.Sc Programme in Digital Filmmaking, M.Sc Digital Film, M.Sc Multimedia, Master's in Advertising and Public Relations, Master's in Digital Media, Master's in Visual Effects, Master of Fine Arts, Masters in Visual Design, PG Diploma/Master in Animation போன்ற படிப்புகளையும் தேர்தெடுக்கலாம். VFX/Special Effects courses, Illustration Courses, Graphic Design Courses, Web Design Courses போன்ற துறைகளில் ஆர்வம் கொண்டவர்கள் அதற்கான குறுகிய கால டிப்ளோமா படிப்புகளைத் தேர்வு செய்து படிப்பது எதிர்காலம் சிறக்க உதவும்.

விஷுவல் கம்யூனிகேஷன்
விஷுவல் கம்யூனிகேஷன்

விஷுவல் கம்யூனிகேஷன் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சில ஆலோசனைகள்:

* நல்ல கல்லூரியைத் தேர்வு செய்வது முக்கியம். வெறும் தியரியை மட்டும் கற்பிக்காமல், செய்முறைப் பயிற்சிகள் தரக்கூடிய கல்லூரியாக இருக்கிறதா என்பதைப் பாருங்கள்.

* அனைத்து மாணவர்களும் பயன்படுத்தும் அளவுக்குத் தொழில்நுட்ப ஆய்வக வசதிகள் இருக்கின்றனவா என்பது முக்கியம்.

* துறை சார்ந்த அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்று பாருங்கள். அத்துறையில் வேலை செய்துகொண்டே பணியாற்றும் ஆசிரியர்கள் இருந்தால் மிகவும் நல்லது.

* இந்தக் கல்லூரியில் முன்பு பயின்ற மாணவர்கள் இப்போது இதே துறையில் பணியாற்றுகிறார்களா என்று பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment