அரசு சார்பாக மட்டும் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்காக 80-க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்தத் தேர்வுகளில் தேர்ச்சிபெற்றால் புகழ்பெற்ற பல கல்வி நிறுவனங்களில் மிகக்குறைந்த செலவில் படிக்க முடியும். இவற்றில் சுமார் 75 தேர்வுகளுக்கு பிளஸ் டூ மதிப்பெண் முக்கியமில்லை. சில நுழைவுத்தேர்வுகள், பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாகவே நடந்து முடிந்து விடுகின்றன. பல தேர்வுகளுக்கான விண்ணப்ப நடைமுறைகள் பிளஸ் டூ தேர்வுக்கு முன்பாகவே முடிந்துவிடுகின்றன. இந்தத்தேர்வுகள் பற்றியெல்லாம் நம் பிள்ளைகளுக்குத் தெரிவதேயில்லை. ஏன்... ஆசிரியர்களே அறிவதில்லை. எல்லாம் நம் வரிப்பணத்தில் இயங்கும் கல்வி நிறுவனங்கள்தான். பல தேர்வுகள் 50-60 வருடங்களாக நடந்துவருகின்றன. நாம்தான் அறியாமல் இருக்கிறோம். நம் தேடல் என்பது நம் மாவட்டத்துக்குள்ளாகவே முடிந்து போகிறது என்பதுதான் சோகம்.
இந்த இடத்தில் சுந்தர்ராஜனை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். உசிலம்பட்டி அருகேயுள்ள எழுமலை என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த தம்பி. அரசுப்பள்ளியில் படித்தவன்.
பிளஸ் டூ-வில் 1088 மதிப்பெண் எடுத்தான். கடுமையான வறுமையைக் கடந்து படித்தவன். மதுரையில் ஒரு கல்லூரியில் பி.எஸ்சி சேர்ந்திருக்கிறான். விடுதிக்கட்டணம் கட்ட முடியாமல் பாதியில் அந்தப் படிப்பை விட்டுவிட்டான். எங்கிருந்தோ முகவரி வாங்கி எனக்கொரு கடிதம் எழுதியிருந்தான். அந்தக் கடிதத்தில் இருந்த நேர்த்தியும் வார்த்தைகளும் என்னை ஈர்த்தன. அவனை அழைத்துப் பேசி கிண்டி பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்த்தேன். மாணவர்களுக்கு உதவி செய்யும் ஒரு அமைப்பிடம் பேசி அவனுக்கு ஒரு லேப்டாப்பும் வாங்கித்தந்தேன்.
இரண்டாம் வருடம் படித்தபோது சுந்தர்ராஜன் ஆப்பிள் நிறுவன மென்பொருளில் இருக்கும் பிழை ஒன்றைக் கண்டுபிடித்தான். அதையறிந்த ஆப்பிள் நிறுவனம் 5,000 டாலர் அவனுக்குப் பரிசாக வழங்கியது. இன்று படிப்பை முடித்து பெங்களூரில் பிலிப்ஸ் நிறுவனத்தில் மிகப்பெரிய சம்பளத்தில் வேலை செய்கிறான்.
இத்தனைக்கும் சுந்தர்ராஜன் தமிழ் மீடியத்தில் படித்தவன். தமிழ் மீடியத்தில் படித்தால் பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்குப் போகமுடியாது என்ற எண்ணம் இங்கே அழுந்த விதைக்கப்பட்டு விட்டது. பலபேர் பின்வாங்கி மிகப்பெரிய வாய்ப்புகளையெல்லாம் இழந்துவிடுகிறார்கள். உண்மையில் இது பெரிய மூடநம்பிக்கை. மொழியோ, பணமோ, உங்கள் பயணத்திற்கு ஒருகாலும் தடையாக இருக்காது. அவ்வளவு வாய்ப்புகள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. ஆங்கிலம் பேசும் சூழலில் மூன்று மாதங்கள் நீங்கள் இருந்தால் சரளமாக ஆங்கிலம் பேசிவிடுவீர்கள். ஜப்பானிய மொழி பேசும் இடத்தில் இருந்தால் அந்த மொழி உங்களுக்கு எளிதாக வந்துவிடும். மனிதன் சூழலுக்கேற்ப வாழப்பழகும் ஆற்றல் கொண்டவன்.
தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு நகரத்துக்கு வரும் மாணவர்களுக்கு முதல் ஆறு மாதங்கள் சற்று சிரமமாக இருக்கலாம். மிக எளிதில் இந்த சூழலையும் தேவைக்கேற்ப பழகிவிடலாம். நானே இதற்கு உதாரணம். இதுபோன்ற சின்னச் சின்ன இடர்களில் சோர்ந்துவிடாமல் நீங்கள் செய்யப் போகும் பெரிய செயலுக்கான வாசலைத் தேடவேண்டும். அதுதான் வெற்றிக்கான சூத்திரம். சுந்தர்ராஜனை நான் ஆகச்சிறந்த உதாரணமாக செல்லுமிடங்களில் எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
நம்மிடமிருக்கும் பிரச்னை, நாம் வைரங்களைத் தேடாமல் மேலிருக்கும் மண்ணைக் கிளறிக் கொண்டிருக்கிறோம். நம்மிடம் பரந்துபட்ட பார்வை இல்லை. பத்தாம் வகுப்பிலேயே நாம் பிள்ளைகளை தரம் பிரித்துவிடுகிறோம். ‘நீ மருத்துவம் படி’, ‘நீ வணிகம் படி’, ‘நீ தொழிற்கல்வி படி’ என்று பாகுபடுத்திவிடுகிறோம். உலகில் வேறெங்கும் இந்தப் பாகுபாடு இல்லை. கல்வி என்பது தொடர் பயணம். அந்தப் பயணத்தில் எங்கேனும் தோன்றும் சிறு பொறி, உங்களை எதிர்பாராத ஒரு இடத்துக்கு நகர்த்திச் சென்றுவிடும். மருத்துவக் கனவை விதைத்து, அந்த ஒற்றை இலக்கில் நாம் தயார்படுத்தும் ஒரு மாணவன், அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறபோது மனம் உடைந்துவிடுகிறான். அடுத்து என்ன என்று தெரியாமல் நிலைகுலைந்து நிற்கிறான்.
நம் கல்விக்கூடங்கள் பரந்துபட்ட வாய்ப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள ‘நான் முதல்வன்' திட்டத்தை நான் இதற்காகவே வரவேற்கிறேன். ஆனால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசின் ஆவலை எத்தனை ஆசிரியர்கள் முழுமையாக உள்வாங்கியிருக்கிறார்கள்? இத்திட்டத்தின் கருத்தாளர்களாக, பயிற்றுநர்களாக இருக்கும் ஆசிரியர்களில் எத்தனை பேர் மாணவர்களுக்குத் திறம்பட வழிகாட்டுகிறார்கள்? இந்தக் கேள்விகளை நான் என் சொந்த அனுபவத்திலிருந்தே முன்வைக்கிறேன்.
மருத்துவப் படிப்பென்றால் வெறும் எம்.பி.பி.எஸ் மட்டுமல்ல. இங்கே பொறியியல் படித்தவர்கள் முதுகலையில் மருத்துவப் படிப்பைப் படிக்கலாம். ஐ.ஐ.டி-க்களில் சட்டம் படிக்கலாம். நாம் தமிழ்நாட்டில் உள்ள வாய்ப்புகளையே நம் பிள்ளைகளுக்கு உணர்த்தவில்லை. தமிழகத்தைத் தாண்டி ஏராளமான அரசுக்கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. சரியான நேரத்தில் தயாரானால் வெகு எளிதாக அந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துவிட முடியும்.
நேஷனல் ஃபாரன்சிக் சயின்ஸ் பல்கலைக்கழகம் என்று ஒன்று இந்தியாவில் இருக்கிறது. அதை மத்திய அரசுதான் நடத்துகிறது. 1972-ம் ஆண்டில் இருந்து ஜெயப்ரகாஷ் நாராயணன் பெயரில் இயங்கிய இந்த நிறுவனம், 2020-ல் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் பற்றி நாம் அறிந்ததில்லை. தமிழகத்திலிருந்து இந்தப் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் செல்வதேயில்லை. தடய அறிவியலுக்கென்றே இயங்கும் உலகின் முதல் பல்கலைக்கழகம் இது. காந்தி நகர், டெல்லி, கோவா, புனே உட்பட பல நகரங்களில் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு வளாகங்கள் உள்ளன.
Criminology and Forensic Science, Criminology, Clinical Psychology, Cyber Security, Digital Forensics and Information Security, Artificial Intelligence and Data Science, Computer Science & Engineering என பல இரண்டாண்டு முதுநிலை, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளை இந்த நிறுவனம் வழங்குகிறது. கணிதம், இயற்பியல், உயிரியல் மற்றும் வேதியியல் பாடங்களைப் படித்து 60 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இப்படிப்புகளில் சேரலாம். B.B.A.; LL.B.(Hons.) என்ற படிப்பும் இங்கே இருக்கிறது. பிளஸ் டூ-வில் 50% மதிப்பெண் எடுத்து CLAT தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் படிக்கலாம்.
IIM-களை நாம் மேலாண்மைக் கல்வி தரும் நிறுவனங்களாக மட்டுமே அறிந்து வைத்திருக்கிறோம். ஹரியானாவில் உள்ள ROHTAK IIM-ல் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு Integrated Programme in Law (IPL) என்ற சட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. நவீனத் தொழில்நுட்பங்கள், வங்கி நடைமுறைகள், உளவியல் அனைத்தும் அடங்கிய இந்த ஐந்தாண்டுப் படிப்பில் நம் பிள்ளைகளும் படிக்கமுடியும். இதற்கு CLAT அல்லது IPMAT தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். IIM படிப்புகள் சற்று காஸ்ட்லிதான். இந்தச் சட்டப்படிப்பை முடிக்க குறைந்தது 30 லட்சம் வரையிலும் செலவாகலாம். ஆனால் இந்தக் கட்டணத்தைக் கண்டு மலைக்கத் தேவையில்லை. உங்களுக்கு இடம் கிடைத்துவிட்டால் ஸ்டேட் பேங்க் உங்களுக்கு முழுக் கட்டணத்தையும் கடனாக வழங்கக் காத்திருக்கிறது.
இதேபோல, LLB - Intellectual Property Law என்ற சட்டப்படிப்பை காரக்பூர் ஐ.ஐ.டி வழங்குகிறது. பி.இ, பி.டெக்., எம்.பி.பி.எஸ், இளநிலை சயின்ஸ், ஃபார்மஸி படித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேரமுடியும். காப்புரிமை, கண்டுபிடிப்புகள் தொடர்பான சட்டப்படிப்பு இது. ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இவற்றையெல்லாம் தமிழ்நாட்டு மாணவர்கள் ஏறெடுத்துப் பார்ப்பதேயில்லை. தெரிந்தாலும் நமக்கு எட்டாத உயரத்தில் இருப்பதாகக் கருதுகிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் இரண்டு மாதங்கள் நேரம் ஒதுக்கி நுழைவுத்தேர்வு எழுதினால் நிச்சயம் இடம் கிடைத்துவிடும்.
அருப்புக்கோட்டை அருகேயுள்ள வீரசோழம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சையது அன்சாரி, 100% விழித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி. அரசு பார்வையற்றோர் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தவர். அங்கு உரையாற்றச் சென்றபோது இவரைக் கண்டடைந்தேன். ‘‘சட்டம் படிக்க வேண்டும்’’ என்றார். CLAT எழுத வைத்தேன். தேர்ச்சி பெற்றார். கொச்சியில் உள்ள National University of Advanced Legal Studies என்ற கல்வி நிறுவனத்தில் இடம் கிடைத்தது. அந்நிறுவனத் துணைவேந்தரைத் தொடர்பு கொண்டு பேசினேன். ‘அவருக்கான முழுக் கல்விச்செலவையும் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார். எந்த அரியரும் இல்லாமல் படிப்பை முடித்தார். நெதர்லாந்து பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கான பணத்தைத் திரட்ட எவ்வளவு முயன்றும் முடியாமல் போனதால், நம் உச்ச நீதிமன்றத்தில் உள்ள Indian Law Institute-ல் சேர்ந்து முதுநிலை படித்து, திருச்சி சட்டக் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். இன்னும் அவர் தாகம் அடங்கவில்லை. தற்போது பிஹெச்.டி ஆய்வு செய்கிறார்.
எல்லோருக்கும் இங்கே ஒரே சாலைதான். முனைப்புதான் இலக்கு நோக்கி அழைத்துச் செல்லும். இதோ நம் கைக்கெட்டும் தொலைவில் இருக்கிற யாருமறியாத இன்னொரு வாய்ப்பைச் சொல்கிறேன்.
எம்.பி.பி.எஸ் படிக்கும் கனவோடு இருக்கும் மாணவர்கள் அந்தப் படிப்பு கிடைக்காவிட்டால் மனமொடிந்துபோகிறார்கள் அல்லவா... அவர்களுக்குத்தான் இந்தச் செய்தி. எம்.பி.பி.எஸ் கிடைக்காவிட்டால் என்ன? பொறியியல் படித்துவிட்டுக்கூட மருத்துவர்களோடு இணைந்து மருத்துவப் படிப்பைப் படிக்கலாம். அதுவும் புகழ்பெற்ற மூன்று கல்வி நிறுவனங்களில்... M.Tech Clinical Engineering என்ற ஒரு படிப்பு. மொத்தம் இரண்டு ஆண்டுகள். ஐ.ஐ.டி மெட்ராஸில் ஆறு மாதம், வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியில் ஆறு மாதம், திருவனந்தபுரத்தில் உள்ள சித்திரைத் திருநாள் இன்ஸ்டிட்யூட் ஃபார் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் ஆறு மாதம் படிக்க வேண்டும். புராஜெக்ட்டுக்கு ஆறு மாதம்.
இதேபோல ஐ.ஐ.டி டெல்லி, எய்ம்ஸ் டெல்லி, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து இரண்டாண்டுக் கால பயோ டிசைன் படிப்புகளை வழங்குகின்றன. இதுவும் டாக்டர்களும் இன்ஜினீயர்களும் சேர்ந்து படிக்கும் படிப்பு. மூன்று கல்வி நிறுவனங்களிலும் அடுத்தடுத்து படிக்கவேண்டும். பி.இ அல்லது எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள் இந்தப் படிப்புகளில் சேரலாம்.
இன்று மருத்துவத் துறையில் பயன்படுத்தும் 80% மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றோம். நம் நாட்டிலேயே அவற்றையெல்லாம் உருவாக்கும் நோக்கில் மருத்துவர்களையும் பொறியாளர்களையும் ஒரே இடத்தில் பயிற்றுவிக்கும் இந்தப் படிப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் Wild Life Institute of India என்ற கல்வி நிறுவனத்தை 1982-ம் ஆண்டு முதல் நடத்திவருகிறது. இந்தக் கல்லூரி டேராடூனில் உள்ளது. இங்கு M.Sc Wildlife Science, M.Sc Heritage Conservation என்ற இரு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இந்தப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்தப் படிப்புகளில் சேர ஏதாவது ஒரு பட்டப்படிப்பு போதும். இதற்குத் தனி நுழைவுத் தேர்வு உண்டு. M.Sc Heritage Conservation படிப்பு யுனெஸ்கோ அமைப்போடு இணைந்து வழங்கப்படுகிறது. புராதன சின்னங்கள், அதற்கான வரையறைகள், தொல்லியல் எனப் பல பாடப்பிரிவுகள் கொண்ட இந்தப் படிப்பை முடித்தவர்கள் யுனெஸ்கோ வரை சென்று பணியாற்ற முடியும்.
இன்னொரு வித்தியாசமான படிப்பையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். Cognitive Science என்று ஒரு துறை உண்டு. நம் மூளையைப் பகுத்தாய்ந்து படிக்கும் படிப்பு. எதிர்காலம் இனி இதில்தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். குஜராத்தில் உள்ள ஐ.ஐ.டி காந்திநகர் நிறுவனம், MSc in Cognitive Science என்ற படிப்பை வழங்குகிறது. இந்தப் படிப்பில் B.A, B.Sc, B.Tech, M.B.B.S, B.Com உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் 50% மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சிபெற்றவர்கள் சேரலாம். ஆன்லைன் நுழைவுத்தேர்வு வழியாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நான் கூறியுள்ள இந்தப் படிப்புகளுக்கெல்லாம் போட்டி குறைவு. NEET போல, JEE போல லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டி போடுவதில்லை. சில ஆயிரம் மாணவர்களே நுழைவுத்தேர்வு எழுதுவார்கள். கொஞ்சம் நடைமுறைப் புரிதலோடும் தெளிவான சிந்தனையோடும் முயன்றால் வெகு எளிதாக இந்தத் தேர்வுகளை ஜெயிக்கலாம்.
உற்சாகப்படுத்தினால் நம் பிள்ளைகள் நிச்சயம் சாதிப்பார்கள். பலநேரம் நம் பிள்ளைகளின் திறன் கண்டு நான் அதிசயத்திருக்கிறேன். அரவக்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த உஷா பிளஸ் டூ-வில் 68% மதிப்பெண் பெற்றிருந்தார். அவரைப் பல நுழைவுத்தேர்வுகள் எழுத வைத்தேன். அகமதாபாத்தில் உள்ள National Institute of Design-ல் அவருக்கு இடம் கிடைத்தது. உஷாவின் அம்மா அவரை அனுப்ப ரொம்பவே பயந்தார். அம்மாவை தைரியப்படுத்திவிட்டு B.Des Exhibition Design படிப்பில் சேர்ந்த உஷா, மூன்றாம் ஆண்டில் ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட் நகருக்குச் சென்று அங்கு இரண்டு அருங்காட்சியகங்களை டிசைன் செய்துவிட்டுத் திரும்பினார். இன்று அவர், இந்தியாவின் மிகப்பெரிய டிசைனர்.
இத்தனை ஆண்டுக்கால அனுபவத்தில் எனக்குக் கிடைத்த பாடம், மாணவர்களைச் சுருக்கக்கூடாது. அவர்களுக்கான பாதையை நாம் போடக்கூடாது. எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் காட்டினால் போதும். ஆசிரியர்கள் முதலில் அப்டேட் ஆக வேண்டும். மாணவர்களை அவர்களால் மட்டுமே தயார்படுத்த முடியும். தேடலை விரிவு செய்தால் வாய்ப்புகள் தேடிவரும்!
- கற்போம்...
*****
உலகின் ஆகப்பெரிய கண்டுபிடிப்புகள் பலவும் உயர்கல்வி் நிறுவனங்களில்தான் நடந்துள்ளன. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி மையங்களில் பல ஸ்டார்ட் அப்கள் உருவாகி இன்று மிகப்பெரும் நிறுவனங்களாக வளர்ந்துள்ளன. அமெரிக்காவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில்தான் முதல் கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டது. அங்கு படித்த காலத்தில்தான் லாரி பேஜ், செர்ஜி பிரின் இருவரும் கூகுள் நிறுவனத்தைத் தொடங்கினார்கள். இன்று அதுதான் உலகை ஆள்கிறது. கூகுளின் வருமானத்தில் ஒரு பங்கு இப்போதும் ராயல்டியாக ஸ்டான்போர்டுக்கு வருகிறது. இந்தப் பணத்தைக் கொண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதோடு கல்விக்கட்டணத்தையும் குறைவாகப் பெறுகிறது ஸ்டான்போர்டு.
ஐ.ஐ.டி டெல்லி, எய்ம்ஸ் டெல்லி, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து பயோ டிசைன் படிப்புகளை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன. சமீபத்தில் இங்கு படிக்கும் மூன்று மாணவர்கள் இணைந்து ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்கள். இதயப் பிரச்னை இருப்பவர்களுக்குப் பொருத்தப்படும் பேஸ்மேக்கர் கருவி, காலப்போக்கில் வேறு இடத்துக்கு நகர்ந்துவிடும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்கும் விதமாக popsicle stick ஒன்றைக் கண்டறிந்துள்ளார்கள். அதுவும் 10 டாலர் என்ற மலிவான விலையில். உலகம் முழுவதும் ஓராண்டுக்கு 4 லட்சம் பேஸ்மேக்கர் கருவிகள் பொருத்தப்படுகின்றன. அவற்றுக்கான மொத்த popsicle stick-குகளையும் இவர்களது ஸ்டார்ட் அப் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இதிலிருந்து ஒரு தொகை மூன்று கல்வி நிறுவனங்களுக்கும் ராயல்டியாகக் கிடைக்கிறது.
No comments:
Post a Comment