Monday, June 5, 2023

 சிவில் சர்வீஸ் தேர்வுங்கிறது நிறைய பேருக்கு சிறுவயதுக் கனவா இருக்கும். எனக்கு காலேஜ் இறுதியாண்டு படிக்கும்போதுதான் அந்த எண்ணமே வந்துச்சு. மொத்தமே ரெண்டு வருஷம்தான் அதுக்குப் பயிற்சியெடுத்தேன். ஆனா, ரொம்பவே சின்சியரா படிச்சேன். அந்த முயற்சிக்குத்தான் இப்போ பலன் கிடைச்சிருக்கு” - உற்சாகமும் மகிழ்ச்சியும் ததும்புகின்றன ஜீஜீயின் வார்த்தைகளில். யு.பி.எஸ்.சி தேர்வில், முதல் முயற்சியிலேயே இந்திய அளவில்107-வது இடத்தையும் தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும் பிடித்து சாதித்திருக்கிறார் சென்னை, கொளத்தூரைச் சேர்ந்த ஜீஜீ. இன்னொரு பெருமிதமான செய்தி, ஜீஜீ ‘சுட்டி ஸ்டார்’ ஆகத் தேர்வாகி சுட்டி விகடன் இதழில் பல கட்டுரைகளை எழுதியவர். ஜீஜீக்கு வாழ்த்துகள் சொல்லி உரையாடினேன்.

ஜீஜீ
ஜீஜீ

“நிச்சயம் பாஸ் பண்ணுவேன்னு தெரியும். ஆனா, தமிழ்நாடு அளவுல முதலிடத்தைப் பிடிச்சது எனக்கே ஆச்சர்யம்தான். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த வெற்றிக்குக் காரணம் என் பெற்றோர் கொடுத்த ஊக்கம்தான். அப்பா சுரேஷ் எலெக்ட்ரீஷியன். மிடில் கிளாஸ் குடும்பம்தான். எனக்கு என்ன படிக்க விருப்பமோ அதை சுதந்திரமா படிக்கவச்சார். என் அண்ணன் மனோஜ்தான் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். ஒரு தொண்டு நிறுவனத்தில் சோஷியல் ஒர்க்கரா இருக்கார். ‘பணம், பொருள், செல்வாக்கு மட்டுமே உலகமில்லை. நிறைய மனிதர்கள் வறுமையாலும் உரிமைகள் கிடைக்காமலும் கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கு நம்மால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும்’னு அடிக்கடி சொல்வார். அவரோட தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதணும்ங்குற உந்துதலையே கொடுத்தது” என்றவரிடம் “உங்க முழுப்பேரு என்ன ஜீஜீ?” என்றேன்.

“பலரும் என்கிட்ட இதைத்தான் கேட்பாங்க. என் முழுப் பேரே ஜீஜீதான். நடிகர் ஜெமினி கணேசனின் மகள் ஜீஜீயைப்போல நான் பெரிய டாக்டராகணும்னு எங்கப்பா இப்படியொரு பேரை வெச்சாராம். ஆனா நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே ‘ எனக்கு சயின்ஸ்ல இன்ட்ரஸ்ட் இல்லைப்பா, காமர்ஸ்தான் படிக்கப்போறேன்’னு சொல்லிட்டேன். அதன்படியே என்னைச் சேர்த்துவிட்டாங்க. பத்தாம் வகுப்புல 491 மார்க் எடுத்துப் பள்ளியில மூன்றாவது இடம் வந்தேன். பிளஸ் 2-ல 1,190 மார்க். ஸ்கூல் பர்ஸ்ட். காலேஜிலும் இரண்டாவது இடம். இதுக்கெல்லாம் காரணம், நான் என்ன படிக்கணும்னு ஆசைப்பட்டேனோ அதன்படி என்னைப் படிக்க வெச்சதுதான்.

2021-ல காலேஜ் முடிச்சதுமே சிவில் சர்வீஸ் பத்தின தகவல்களைத் தேடத் தொங்கிட்டேன். அறம் ஐ.ஏ.எஸ் அகாடமியிலதான் படிச்சேன். அங்கே கிடைச்ச உந்துதலும் வழிகாட்டுதலும் ரொம்ப உதவியா இருந்துச்சு...” என்றவரிடம் ‘‘முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெறுவது சாதாரணமல்ல... எப்படி சாத்தியமாச்சு?’’ என்றேன்.

‘‘என்னோட முதல் பயிற்சியே செய்தித்தாள் வாசிக்கிறதுதான். அப்பாவைப் பாத்துதான் அதையும் கத்துக்கிட்டேன். எங்க ஏரியா நூலகத்தில் மெம்பர் ஆகி நிறைய புத்தகங்கள் படிச்சேன். ‘சுட்டி விகடன்’ல சுட்டி ஸ்டாராகத் தேர்வாகி கட்டுரைகள், கவிதைகள்னு ஒரு வருடம் எழுதி, என்னோட படைப்புகள் வெளிவந்தது. அதுக்காகவும் நிறைய வாசிச்சேன். உண்மையைச் சொல்லனும்னா இந்த வெற்றியில விகடனுக்கு முக்கியப் பங்குண்டு. சின்ன வயசிலிருந்தே வந்த வாசிப்புப் பழக்கம்தான் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற உதவுச்சு. அதோட, ரெண்டு முக்கியமான விஷயங்கள் இருக்கு. சிவில் சர்வீஸ் தேர்வில் ஜெயிக்கணுனா, எந்தத் தொந்தரவும் இல்லாம முழுசா அர்ப்பணிச்சுக்கிட்டுப் படிக்கணும். சரியான வழிகாட்டுதல் இருக்கணும். இது ரெண்டும் எனக்கு கரெக்டா அமைஞ்சது...” என்கிறவர், விருப்பப் பாடமாக தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தது குறித்துக் கேட்டேன்.

பெற்றோருடன் ஜீஜீ
பெற்றோருடன் ஜீஜீ

‘‘திருக்குறள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன். அந்த ஆர்வம்தான் விருப்பப் பாடமா தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுக்க வெச்சது...” என்கிறார் ஜீஜீ.

‘‘முதல்நிலைத் தேர்வில் அறிவும் தன்னம்பிக்கையும் முக்கியம். அடுத்தது, நமது பாடத்திட்டம் என்னங்கிறதைச் சரியா புரிஞ்சுக்கிட்டு அது தொடர்பான புத்தகங்களைத் தேடிப்பிடிச்சுப் படிக்கணும். முதல்நிலைத் தேர்வை 5 லட்சம் பேர் எழுதுறாங்கன்னா 13,000 பேர்தான் அடுத்த கட்டத்துக்குத் தேர்வாகுறாங்க. அதிகம்பேர் தோல்வியடைறது முதல்நிலைத் தேர்வில்தான். அதனால அதுல கூடுதல் கவனம் செலுத்தணும். முக்கியமா, முதல்நிலைத் தேர்வு எழுதுறதுக்கு முன்னாடி குறைஞ்சது 60 மாதிரித் தேர்வுகளாவது எழுதியிருக்கணும். ஏற்கெனவே கேட்கப்பட்ட வினாத்தாள்களை மாதிரியாக வைத்துத் தேர்வு எழுதலாம். என்னென்ன பாடங்களில் எப்படியெல்லாம் கேள்வி கேட்டிருக்காங்கன்னு அனலைஸ் பண்ணிப் பார்க்கணும். அப்படிச் செஞ்சா முதல்நிலைத் தேர்வை கிளியர் பண்ணிடலாம்.

முதன்மைத் தேர்வைப் பொறுத்தவரை சரியான கன்டென்ட் நம்ம கைல இருக்கணும். அதோட, விடைத்தாள்களை பிரசன்ட் பண்ணுற விதமும் முக்கியம். நம்ம விடைத்தாள்களைத் திருத்துறவங்களுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்கணும். கையெழுத்து ரொம்ப ரொம்ப முக்கியம். எழுதி எழுதிப் பயிற்சி எடுத்தால் முதன்மைத்தேர்வு சக்சஸ் ஆகும்.

நேர்முகத்தேர்வைப் பொறுத்தவரை, நாம் யார்ங்கிறதெல்லாம் அதிகாரிகளுக்குத் தெரியாது. நம்மைப்பற்றித் தெரிந்துகொள்வதற்கான தேர்வுதான் அது. அதுக்கு நிறைய பயிற்சி எடுக்கணும். நம்மள நாம முழுசாப் புரிஞ்சு வச்சுக்கணும். பள்ளியில் ஆரம்பிச்சு கல்லூரிவரைக்கும் என்ன படிச்சோம்... எப்படிப் படிச்சோம்... ஏன் அந்தப் பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படிச்சோம்ங்கிறதை எல்லாம் நினைவுப்படுத்தித் தெளிவா ஞாபகம் வச்சுக்கணும். நான் நேர்முகத்தேர்வுக்குப் போனபோது 5 பேர் இருந்தாங்க. முதல் கேள்வியே என்னோட பேருக்கான அர்த்தம் கேட்டாங்க. நான், காரணத்தைச் சொன்னேன். ‘தமிழ்நாட்டுல சினிமாவோட தாக்கம் எந்த அளவுக்கு இருக்கு’ன்னு கேட்டாங்க. கதை, கவிதை எழுதுறதுல எனக்கு இன்ட்ரஸ்ட்ங்குறதால, ‘நீங்க எழுதுறதால மக்களுக்கு என்ன பயன்’னு கேட்டாங்க. ஒருத்தர், 'தமிழ்நாட்டுல நீங்க ஒரு மாற்றத்தைக் கொண்டுவர நினைச்சா, எதைக் கொண்டுவருவீங்க'ன்னு கேட்டார். அதுக்கு நான் கொடுத்த பதில் ‘பெண் சுதந்திரம்.’ ‘பெண் சுதந்திரத்தை யாரோ கொடுக்கணும்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்கக்கூடாது. அது நமக்கான உரிமைன்னு பெண்களே உணரணும். அதை உணர்த்துறமாதிரி பெண்களுக்காக நிறைய திட்டங்களைக் கொண்டுவருவேன்'னு சொன்னேன்.

அன்னைக்கு வெளியான செய்திகளின் அடிப்படையிலேயும், நான் படித்த வணிகவியல் தொடர்பாவும் 25 கேள்விகளுக்கு மேல கேட்டாங்க. எல்லாத்துக்கும் பதில் கொடுத்தேன். எந்த ரியாக்‌ஷனும் இல்லாம கேட்டுக்கிட்டாங்க. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 500. என்னோட மதிப்பெண் 271. நேர்முகத்தேர்வுக்கு மொத்தம் 275 மதிப்பெண். நான் 193 எடுத்தேன். இது குறிப்பிடும்படியான மதிப்பெண்தான்’’ என்கிற ஜீஜீ இப்போது ஐ.எஃப்.எஸ் எனப்படும் வெளியுறவுப் பணிக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார். “பெரும்பாலும் ஐ.ஏ.எஸ் ஆகணும்னுதான் ஆசைப்படுவாங்க. நீங்க ஏன் ஐ.எஃப்.எஸ் தேர்ந்தெடுத்தீங்க?” என்றேன்.

ஜீஜீ
ஜீஜீ


‘‘சிவில் சர்வீஸுக்குப் படிக்கும்போதே மெல்ல மெல்ல அயல்நாட்டுச் செய்திகள் மீது ஆர்வம் வந்துடுச்சு. உக்ரைன்ல போர் நடந்தது. நமது இந்திய மாணவர்கள் அதில் சிக்கிக் கஷ்டப்பட்டதை நினைச்சு எல்லோருமே வருத்தப்பட்டோம். இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துற அயல்நாட்டுச் செய்திகளுக்குப் பின்னால் இருக்கக்கூடிய பணிகள் என்ன? நம் நாட்டுத் தூதர்கள் எப்படிப் பணிபுரியுறாங்க... இதையெல்லாம் பார்க்கணும்னு ஆர்வப்பட்டேன். அந்த ஆர்வத்துலதான் ஐ.எஃப்.எஸ்ஸுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கேன்” என்கிறவரிடம், ‘‘உங்களுக்கு சவாலான விஷயமா இருந்தது எது?’’ என்று கேட்டேன்.

‘‘மாதிரித் தேர்வுகள்ல மதிப்பெண்கள் குறைஞ்சா, எனக்கு உடனே நாம கரெக்டா தான் போறோமான்னு சந்தேகம் வந்துடும். இன்னும், கடின உழைப்பைப் போடுவேன். தினமும் 8 மணி நேரம் இந்தத் தேர்வுக்காகப் படிச்சேன். நான் எந்த சோஷியல் மீடியாவிலும் இல்லை. முதன்மைத் தேர்வுல தேர்ச்சிபெற்றபிறகுதான் வாட்ஸ்அப்பே போன்ல இன்ஸ்டால் பண்ணினேன். இணையதளங்களை ஆக்கபூர்வமா பயன்படுத்திக்கிட்டேன். படிப்பு படிப்புன்னு இருக்கிறதால மன அழுத்தம் ஏற்படும். அதனால, நடுநடுவே ரிலாக்ஸ் பண்ணிக்கணும். என்னை ரிலாக்ஸ் ஆக்கிக்க, காந்தியோட சுயசரிதை படிச்சேன். அகிம்சை வழியைத் தேர்ந்தெடுத்த காந்தி எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். நானும் அந்த வழியைத்தான் தேர்ந்தெடுப்பேன்’’ என்கிறார் அழுத்தமாக.

எளிய குடும்பத்திலிருந்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதித்திருக்கிற ஜீஜீ, நம் எல்லோருக்குமான நம்பிக்கை!

No comments:

Post a Comment