விரும்பிப் படிக்கலாம் வேளாண்மையை!
இந்தியா ஒரு வேளாண்மை சார்ந்த நாடு. பெரும்பான்மை இந்தியர்களின் வாழ்க்கை வேளாண்மையைச் சார்ந்தாகவே உள்ளது. வேளாண் தொழிலில் சிறப்புப்பெற்ற ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வேளாண் திட்டங்களைத் தமிழகத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்திவருகின்றன. குறிப்பாக, உணவு உற்பத்தியில் பற்றாக்குறை என்ற நிலையிலிருந்து தொடர்ந்து தன்னிறைவை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
இதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது, வோளாண்மை என்ற தொழிலைப் பல்தொழில் சார்ந்த நிலைக்கு விரிவுபடுத்துவதே. குறிப்பாக வேளாண் பொறியியல், உணவுத் தொழில்நுட்பம், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, வேளாண் தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், மீன்வளம், கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, பட்டு வளர்ப்பு எனப் பல்வேறு தொழில்கள் வளர்ச்சி பெற, வேளாண்மை மையமாக உள்ளது. ஆனாலும் இன்றைய நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு வருமானத்தில், வேளாண்மை 13 சதவிகிதம்தான் உள்ளது. இந்தப் பங்களிப்பு குறைவான ஒன்றாகும்.
இதைக் கவனத்தில்கொண்டே இதற்கான மனித வளத்தை உருவாக்கிடும் பெரும் பணியைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தொடர்ந்து நடை முறைப்படுத்திவருகிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழகம் முழுவதும் அதன் உறுப்புக் கல்லூரிகளையும், ஆராய்ச்சி நிலையங்களையும், வேளாண் அறிவியல் நிலையங்களையும் நிறுவி, செயல்படுத்திவருகிறது.
பல்கலைக்கழகத்தின் நேரடி உறுப்புக் கல்லூரிகள் 18 உள்ளன. இவைதவிர, இதனுடன் இணைக்கப்பட்ட 28 தனியார் கல்லூரிகள் உள்ளன. பல்கலைக்கழகக் கல்லூரிகளில் மொத்தம் 14 பிரிவுகளில் பட்டப் படிப்புகள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் வேளாண் இளநிலைப் பட்டமும், இரண்டு கல்லூரிகளில் இளநிலை தோட்டக்கலைப் பட்டமும் கொடுக்கப்படுகின்றன. இளநிலை வேளாண்மை படிக்க ஆண்டுக்கு ஒன்றரை முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகலாம்.
வேளாண் பொறியியல் பட்டப்படிப்பை, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பல தனியார் பொறியியல் கல்லூரிகளும் தொடங்கியுள்ளன. B.Tech Agricultural Engineering எனப்படும் அந்தப் படிப்பு, முழுக்க முழுக்க பொறியியல் சார்ந்தது. வழக்கமாக வேளாண் பல்கலைக்கழகம் வழங்கும் வேளாண் படிப்புகள் படிக்க உயிரியல் அவசியம். ஆனால் B.Tech Agricultural Engineering படிப்புக்குக் கணிதம், இயற்பியல், வேதியியல் மட்டும் போதும்.
இன்ஜினீயரிங் படிக்க விரும்புபவர்கள், கல்லூரியில் அந்தப் படிப்புக்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்று நன்றாக ஆய்வுசெய்து சேரவேண்டும்.
‘‘இந்திய வேளாண் துறையின் தேசிய வருமானம் ஆண்டுக்கு 3% வளர்ந்துவருகிறது. இதற்கு இணையாக வேளாண் பட்டதாரிகளின் தேவையும் வளர்ந்துகொண்டிருக்கிறது. வேளாண் பட்டப்படிப்புகளை வழங்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு கடந்த 5 ஆண்டுகளாக, ஆண்டுக்கு 50,000-க்கும் மேல் விண்ணப்பங்கள் வருகின்றன.
வேளாண் கல்வி என்பது அறிவியல், பொறியியல், சமூகவியல், கணிதவியல், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் மொழித்திறன் மேம்பாடு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கி இருக்கும். எல்லாப் பாடங்களிலும் 60% நடைமுறைப் பயிற்சியாகும். பட்டப்படிப்பின் இறுதியாண்டில் 6 மாதங்கள் மாணவர்கள் கிராமம் மற்றும் வேளாண் சார்ந்த தொழிற் சாலைகளில் தங்கிக் களப்பயிற்சி பெறுகின்றனர். வேளாண் பட்டதாரிகளுக்கு மத்திய மாநில அரசுத்துறைகள், வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், அரசு சாரா சேவை மையங்கள், பொதுநிர்வாகம், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களில் பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் தொழில் முனைவோர் ஆகின்றனர். நம் வேளாண் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள், முன்னேறிய நாடுகள் மட்டுமன்றி உகாண்டா, கென்யா, ருவாண்டா போன்ற நாடுகளிலும் நிபுணர்களாகப் பணியாற்றுகின்றனர்...’’ என்கிறார், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சி.ராமசாமி.
இன்று பெரும்பாலும் வேளாண் படிப்புகளில் சேர்பவர்கள், விவசாயத்தை நேசித்தோ, வேளாண்மையின் முக்கியத்துவத்தை அறிந்தோ, வேளாண்மைத் தொழில்நுட்பத் தேவையை உணர்ந்தோ, வேளாண்மையில் அதிகமாகத் திறன்பெற்ற மனிதவளத் தேவையைத் தெரிந்தோ தேர்வு செய்வதில்லை என்பது ஒரு வருத்தமான உண்மை.
நீட் தேர்வால் மருத்துவப் படிப்பு வாய்ப்பை இழந்தவர்கள், பொறியியல் பட்டத்தில் கணிதம் கண்டு அஞ்சுபவர்கள், அறிவியல் பிரிவில் வேறு பாடத்திட்டம் கிடைக்காதவர்களே வேளாண் படிப்புக்கு வருகிறார்கள். வேளாண்மை படித்தால் சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதுவது சுலபம் என்று கருதி இங்கு வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதைப் புரிந்துகொண்ட பல தனியார் கல்லூரிகள், தங்களின் கல்லூரிகளில் குடிமைப்பணி போட்டித் தேர்வுக்கான பயிற்சி இரண்டாம் ஆண்டில் இருந்தே கொடுக்கப்படுவதாகக் கூறி அவர்களை ஈர்க்கின்றனர். உயர்கல்வியை இந்த மனநிலையுடன் தேர்வு செய்வது சரியல்ல!
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெறாத வேறு கல்வி நிறுவனங்களில் வேளாண் படிப்புகளைப் படிப்பவர்கள், அரசு வேளாண் கல்லூரிகளில் தங்களின் மேற்படிப்பைத் தொடர இயலாது. அக்கல்லூரி களின் உள்கட்டமைப்பு, பேராசிரியர்களின் தகுதி, தேவையான நிலத்தின் அளவு, ஆய்வகங்களின் நிலை போன்றவற்றைக் கண்காணிக்கவும், வழிகாட்டவும் வேளாண்மை சார்ந்த அரசு நிறுவனங்கள் எதுவும் இல்லை. எனவே இக்கல்லூரிகளில் சேர விரும்புகிறவர்கள், அவர்களாகவே இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையே உள்ளது. இது வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள சில தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். இங்கும் போதுமான உள்கட்டமைப்புகள், தகுதியான பேராசிரியர்கள், தரமான ஆய்வகங்கள் உள்ளனவா என்பதை அறிந்துகொண்டு முடிவுகள் எடுக்க வேண்டும்.
கல்லூரியைத் தேர்வு செய்வதற்கு முன், அங்கு படித்த மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள், நிர்வாகத்தை அறிந்தவர்களின் பரிந்துரைகளை ஒப்பிட்டுப் பார்த்துத் தேர்வு செய்வது சரியாக இருக்கும்.
உலகம் மூன்று வேளை உண்ண வேண்டும். மக்களுக்கு உணவுப்பொருள்கள் தேவை என்றால், உலகத்திலேயே ஆகப்பெரிய தொழில் வேளாண்மைதான். எதிர்காலம் வேளாண்மைக் கான காலமாகவே இருக்கப்போகிறது. வேளாண் படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு வளமான எதிர்காலம் நிச்சயம்.
****
இங்கும் படிக்கலாம்!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வேளாண் பட்டப் படிப்புகள் உள்ளன. இவை தவிர தமிழகத்தில் உள்ள பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் இப்போது வேளாண் இளநிலைப் பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டு, சில ஆண்டுகளாகப் பட்டங்கள் கொடுக்கப்படுகின்றன. வேளாண் படிப்புகளை வழங்கும் சில தனியார் பல்கலைக்கழகங்கள்:
வி.ஐ.டி பல்கலைக்கழகம், வேலூர்
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், சென்னை
அமிர்தா விஸ்வ வித்யாபீடம், கோவை
கலசலிங்கம் பல்கலைக்கழகம், ஸ்ரீவில்லிபுத்தூர்
காருண்யா பல்கலைக்கழகம், கோவை
சத்யபாமா பல்கலைக்கழகம், சென்னை
என்.எம்.வி பல்கலைக்கழகம், அருப்புக்கோட்டை
வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை
பாரத் பல்கலைக்கழகம், சென்னை
வேளாண் பல்கலைக்கழக உறுப்புக்
கல்லூரிகளில் தரப்படும் 14 பட்டப்படிப்புகள்!
B.Sc Agriculture (தமிழ் / ஆங்கிலம்)
B.Sc Horticulture (தமிழ் / ஆங்கிலம்)
B.Sc Fisheries
B.Sc Food and nutrition and dietetics
B.Sc Forestry
B.Sc Sericulture
B.Sc Agriculture Business Management
B.Tech Agricultural Engineering
B.Tech Food Technology
B.Tech Biotechnology
B.Sc (Hons) Agri-Business Management
B.Tech Agriculture Information Technology
B.Tech in Bioinformatics
No comments:
Post a Comment