மனிதர்களின் வேலையைப் பறிக்கப் போகிறது... அபாயம்!' என்றெல்லாம் ஒரு பக்கம் குரல்கள் ஒலித்தாலும், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவை உலகம் இருகரம் கூப்பி வரவேற்கத்தான் செய்கிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பொறியியல் துறையில் Artificial Intelligence-ன் வளர்ச்சி பிரமாண்டமாக மாறப்போகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
செயற்கை நுண்ணறிவு என்பது பொறியியல் மற்றும் அறிவியலின் உதவியால் ஒரு இயந்திரம் அல்லது கணினியானது மனிதத் தலையீடு இல்லாமல் பணிகளைச் செய்வதாகும். உதாரணமாக, முன்பெல்லாம் டோல்கேட்களில் வண்டிகள் வரிசைகட்டி நிற்கும். இப்போது போய் நின்றவுடன் நொடிப்பொழுதில் உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்துவிடுகிறது கம்ப்யூட்டர். இப்படி படிப்படியாக எல்லாத் தொழில்களுக்குள்ளும் செயற்கை நுண்ணறிவு ஊடுருவி வருகிறது. கேட்ட கேள்விக்குப் பதில் தருவது, உங்களுக்காக ஒரு கடிதம் எழுதுவது தொடங்கி, திரைப்படங்கள் எடுப்பது வரை இந்தத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.
ChatGPT, Google's Bard உள்ளிட்ட சில AI-களின் தோற்றம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இது பொறியியல் மாணவர்களிடையே AI, Machine Learning, Cyber Security, Data Science ஆகிய படிப்புகளுக்கான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் (AICTE), இப்படிப்புகளைத் தொடங்க பொறியியல் கல்லூரிகளை ஊக்குவிக்கிறது. கடந்த ஆண்டு தொழில்நுட்பக் கல்வி கலந்தாய்வில் 14,000 இடங்கள் இப்படிப்புகளுக்காக ஒதுக்கப்பட்டன. மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வரவேற்பைத் தொடர்ந்து இவ்வாண்டு மட்டும் 134 பொறியியல் கல்லூரிகள் இந்தப் படிப்புகளைத் தொடங்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்துள்ளன. இதன்மூலம் சுமார் 8,490 இடங்கள் அதிகரித்துள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை B.Tech Artificial Intelligence and Data Science, B.E. CSE (Artificial Intelligence & Machine Learning), B.E. CSE (Cyber Security) மற்றும் B.Tech Artificial Intelligence and Machine Learning போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் 4 ஆண்டு பொறியியல் இளநிலைப் பட்டப்படிப்புகள். தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடந்தும் கலந்தாய்வில் +2 மதிப்பெண் அடிப்படையில் இப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். +2வில் கணிதம், இயற்பியல் எடுத்துப் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
“பிளஸ் 1, பிளஸ் 2 கணிதப் பாடங்களில் வரும் டிஃப்ரென்ஷியல் கால்குலஸ், நிகழ்தகவு (Probability), மெட்ரிக்ஸ் ஆகிய பாடங்களே இதற்கு அடிப்படை. இத்துறையைத் தேர்தெடுக்கும் மாணவர்கள் கணிதத்தில் தேர்ந்தவர்களாக இருப்பது அவசியம்” என்கிறார் நார்வே நாட்டின் ஆர்க்டிக் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றும் சேஷாத்ரி தனசேகரன்.
இத்துறையில் பட்டம் பெறுபவர்களுக்கு சுகாதாரம், வர்த்தகம், இ-வணிகம், நெட்வொர்க்கிங் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் AI பொறியாளர், வணிக நுண்ணறிவு நிபுணர், டேட்டா சயின்டிஸ்ட், டேட்டா மைனிங் இன்ஜினீயர், மெஷின் லேர்னிங் இன்ஜினீயர் மற்றும் ஆராய்ச்சியாளர் என பல்வேறு நிறுவனங்களில் பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
‘‘AI படிப்போர் கணித ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். மேலும், வேகமாக வளர்ந்துவரும் இத்துறையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் குறைவாகவே உள்ளனர். அதனால் கற்பிக்கும் ஆசிரியர்களின் பணி அனுபவத்தையும் இந்தத் துறையில் அவர்களுக்கு இருக்கும் நிபுணத்துவத்தையும் பார்ப்பது அவசியம். பெரும்பாலும் நகர்ப்புறங்களில் இருக்கும் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. கல்லூரியில் நல்ல நூலகம் இருப்பது முக்கியம். துறைசார்ந்த உலகளாவிய இதழ்கள் நூலகத்துக்கு வருகிறதா என்று விசாரித்து அறிந்துகொள்ளுங்கள். அந்த இதழ்கள் மூலமாக மாணவர்கள் அப்டேட் செய்துகொள்ள முடியும். மாணவர்களே தேர்வு செய்யும் எலெக்ட்டிவ்ஸ் பாடங்களுக்கு தனியாக அனுபவமுள்ள ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பதையும் பார்க்கவேண்டும்.
இளநிலையில் செயற்கை நுண்ணறிவு போன்ற சூப்பர் ஸ்பெஷலைசேஷன் படிப்புகளைத் தேர்வு செய்வது சரியல்ல என்பது கல்வியாளர்களின் ஆலோசனை. இளநிலையில் கோர் படிப்புகளான Computer Science, Information Technology போன்ற படிப்புகளை முடித்துவிட்டு முதுநிலையில் Artificial Intelligence போன்ற ஸ்பெஷலைசேஷன் படிப்புகளைப் படிக்கலாம்’’ என்கிறார் சேஷாத்ரி.
AI தொழில்நுட்பம் அடுத்த பத்தாண்டுகளுக்கு நிலையாக நின்று உலகத்தை ஆளும் என்கிறார்கள் நிபுணர்கள். கணிதத்திலும் கம்ப்யூட்டரிலும் ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்தப்பக்கம் கவனத்தைத் திருப்பலாம்!
No comments:
Post a Comment